தயிர்சாதம் என்றாலே ‘அது ஏழைகளின் உணவு’ என்று இளக்காரமாகப் பார்ப்பவர்களும் உண்டு. குறிப்பாக அடைமழைக் காலம், குளிர்காலம், பனிக்காலம் வந்துவிட்டால், ‘இந்த கிளைமேட்ல யாராவது தயிர்சாதம் சாப்பிடுவாங்களா? சளி பிடிச்சுக்காதா?’ என்று தயிர் சாப்பிடுவதைத் தவிர்ப்பவர்களும் இருக்கிறார்கள்.
பாலில் தயாரிக்கப்படும் உணவில் தயிருக்கு முக்கிய இடமுண்டு. பாலைக் காய்ச்சி, குளிர வைத்து, உறை ஊற்றிச் சில மணி நேரம் காத்திருந்தால், அது தயிராகிவிடுகிறது. பாலைக் காய்ச்சும்போது அதிலுள்ள கிருமிகள் இறந்துவிடுகின்றன. எனவே, தயிரில் தீங்கு செய்யும் கிருமிகள் இருக்க வாய்ப்பில்லை; தயிர் சாப்பிடுவதால் சளி பிடிக்கவும் வாய்ப்பில்லை.
பால் தயிராகிறபோது, அது எளிதில் செரிமானமடைகிறது. பால் உறையில் இருக்கும் லாக்டிக் அமில பாக்டீரியா பாலில் உள்ள லாக்டோஸ் எனும் சர்க்கரையை லாக்டிக் அமிலமாக மாற்றிவிடுகிறது. இந்த அமிலமும் பாலில் உள்ள கேசீன் எனும் புரதப்பொருள், கால்சியம் தாதுவும் வினைபுரிகிறபோது, பால் தயிராக மாறுகிறது. இந்த வேதிவினைகள் எல்லாமே நம் ஆரோக்கியத்தை மேம்படுத்தப் பல வழிகளில் உதவுகின்றன என்பதுதான் அறிவியல் சொல்லும் உண்மை.
தயிர் ஒரு ‘புரோபயாடிக் உணவு’(Probiotic food) என்கிறோம். அதாவது, பாக்டீரியாவில் நன்மை செய்யும் பாக்டீரியா, தீமை செய்யும் பாக்டீரியா என இரண்டு வகை உண்டு. இயற்கையாகவே நன்மை செய்யும் பாக்டீரியா உள்ள உணவை ‘புரோபயாட்டிக் உணவு’ என்கிறோம். நம் உடல்நலத்தை மேம்படுத்த உதவுகிற பாக்டீரியா வகைகளும் ஈஸ்ட் வகைகளும் தயிரில் அதிகமுள்ளன. இவை உணவுச் செரிமானத்துக்குப் பெரிதும் உதவுகின்றன.
» தொல்லியல் துறைக்கு கோவையில் தனி நூலகம்!
» தேனியில் ஆடிப்பெருக்கு: முல்லை பெரியாற்றுக்கு சீர்வழங்கி பெண்கள் உற்சாக வழிபாடு!
தயிர் என்பது சத்து மிகுந்துள்ள ஓர் உணவுப்பொருள் என்பதில் மாற்றுக் கருத்துக்கு இடமில்லை. தயிரை அப்படியே சாப்பிடலாம். அல்லது தயிரில் மிகக் குறைந்த அளவு உப்பு போட்டுச் சாப்பிடலாம்; அதிகமில்லாமல் சர்க்கரை போட்டு ‘லஸ்ஸி’ ஆக செய்தும் சாப்பிடலாம். 100 கிராம் தயிரில் 4 கிராம் கொழுப்பு, 3.2 கிராம் புரதம், 3 கிராம் மாவுச்சத்து, 150 மில்லி கிராம் கால்சியம், 0.2 மி.கி. இரும்புச் சத்து போன்றவை உள்ளன.
தயிரில் கொழுப்பும் புரதமும் பாலில் இருக்கும் அளவேதான் இருக்கின்றன. ஆனால், வைட்டமின் ஏ, வைட்டமின் ரிபோபிளேவின் அளவுகள் மட்டும் பாலில் உள்ளதைவிட அதிகமாக உள்ளன. கால்சியம், பாஸ்பரஸ் போன்ற தாதுக்கள் மிதமான அளவில் உள்ளன. 100 கிராம் தயிர் 60 கலோரிகள் ஆற்றலைக் கொடுக்கிறது.
குளிர்காலத்தில் தயிர் சாப்பிட்டால் சளி பிடிக்கும் என்று காலங்காலமாக ஏன் சொல்லிவருகிறார்கள்? சளிப் பிரச்சினை தயிரால் ஏற்படுவதில்லை. சிலருக்குக் குளிர்ச்சியான பொருட்களைச் சாப்பிட்டால், உடல் அதை ஏற்றுக்கொள்ளாது. அந்த மாதிரியான உடலமைப்பைக் கொண்டவர்களுக்குக் குளிர்ச்சியாகத் தயிரைச் சாப்பிட்டால் பிரச்சினை ஏற்படலாம்.
இவர்கள் குளிர்சாதனப் பெட்டியிலிருந்து தயிரை எடுத்து, உடனே சாப்பிடுவதைத் தவிர்க்க வேண்டும்; சாதாரண அறை வெப்ப நிலையில் தயிரைச் சாப்பிடலாம். காலை மற்றும் இரவு உணவுக்குப் பதிலாக மதிய உணவுடன் தயிர்சாதத்தைச் சாப்பிடலாம். உடல் பருமன், நீரிழிவு நோய் கொண்டவர்கள் கொழுப்பைத் தவிர்ப்பதற்குத் தயிர்சாதத்துக்குப் பதிலாக, மோர் சாதம் சாப்பிடலாம்.
- பொதுநல மருத்துவர் கு.கணேசன்