பொள்ளாச்சி: பொள்ளாச்சி நகராட்சி மற்றும் சுற்றுவட்டார கிராமப் பகுதிகளில் தெருநாய்களின் எண்ணிக்கை தற்போது பலமடங்கு அதிகரித்துள்ளது. தெருநாய்கள் தொல்லையை கட்டுப்படுத்த வேண்டுமென பொதுமக்கள் வலியுறுத்தியுள்ளனர்.
பொள்ளாச்சி நகராட்சியின் 36 வார்டுகளில், தெருநாய்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ளது. காலை நேரங்களில் நடைபயிற்சி செல்பவர்களையும், பாதசாரிகளையும், வாகனங்களில் செல்பவர்களையும் நாய்கள் துரத்திச்சென்று கடிக்கும் சம்பவங்கள் அதிகரித்துள்ளன.
எனவே, நாய்க்கடிக்கு சிகிச்சை பெற மருத்துவ மனைக்கு வருவோரின் எண்ணிக்கையும் நாளுக்குநாள் அதிகரித்து வருகிறது. இதுகுறித்து பொள்ளாச்சி அரசு மருத்துவமனை கண்காணிப்பாளர் ராஜா கூறியதாவது: தெருநாய் கடியால் அதிகம் பாதிக்கப்படுபவர்கள் காலை நேரங்களில் நடைபயிற்சி செல்பவர்கள்தான். எனவே நடைபயிற்சி செல்லும்போது கையில் சிறிய தடி வைத்துக் கொண்டு, பாதுகாப்புடன் செல்ல வேண்டும்.
வளர்ப்பு நாய்களாக இருந்தாலும் அவற்றுக்கு தொடர்ந்து ‘ரேபிஸ்’ உள்ளிட்ட தடுப்பூசிகளை போட வேண்டும். முறையாகவும், தொடர்ந்தும் வளர்ப்பு நாய்களுக்கு தடுப்பூசி போடுவதில்லை. தடுப்பூசி செலுத்தப்பட்ட நாய் கடித்தாலும், நம் மீது அதன் நகக்கீறல்கள் ஏற்பட்டாலும், உடனடியாக கடிபட்ட இடத்தில் சோப்பால் கழுவிக் கொள்ள வேண்டும். பின்னர் அரசு மருத்துவமனை அல்லது அருகில் உள்ள ஆரம்ப சுகாதார நிலையத்துக்குச் சென்று, தடுப்பூசி செலுத்திக்கொள்ள வேண்டும்.
» தேனியில் ஆடிப்பெருக்கு: முல்லை பெரியாற்றுக்கு சீர்வழங்கி பெண்கள் உற்சாக வழிபாடு!
» வயநாடு நிலச்சரிவில் 24 தமிழர்கள் உயிரிழப்பு: 25 பேர் மாயம்!
நாய் கடித்த அன்று முதல் ஊசி, 3-வது நாள் 2-வது ஊசி, 7-வது நாள் 3-வது ஊசி போட்டுக்கொள்ள வேண்டும். அதேநேரத்தில் அந்த நாயை 10 நாட்களுக்கு கண்காணிக்க வேண்டும். நாயின் குணத்தில் எவ்வித மாறுதலும் தெரியவில்லை என்றால், இந்த மூன்று தடுப்பூசிகளுடன் நிறுத்திக் கொள்ளலாம். கடித்த நாயிடம் வெறிநாய்க்குரிய மாறுதல்கள் தெரிந்தால், 14-வது நாள் 4-வது ஊசி, 28-வது நாள் 5-வது ஊசியை போட்டுக்கொள்ள வேண்டும்.
வெறிநாய் கடித்து, தடுப்பூசி போடாவிட்டால், நம் நரம்பு வழியாக மூளை பாதிக்கும். பொள்ளாச்சியை சேர்ந்த 2 பேர் நாய்க்கடி சிகிச்சைக்கு வந்து, முதலுதவி சிகிச்சைக்குப் பின்னர் மேல் சிகிச்சைக்கு கோவை அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர்.
அங்கு சிகிச்சை பலனின்றி உயிரிழந்தனர். பொள்ளாச்சி அரசு மருத்துவமனையில் கடந்த ஆண்டு 2,649 பேருக்கும், கடந்த ஆறு மாதத்தில் 1,597 பேருக்கும் நாய்க்கடிக்கு சிகிச்சை அளிக்கப்பட்டுள்ளது, என்றார்.