ரயிலில் 2.82 லட்சம் பேர் டிக்கெட் இல்லாமல் பயணம்: ரூ.15.57 கோடி அபராதம்

By காமதேனு

தென்னக ரயில்வே சேலம் கோட்டத்தில் 2022 ஏப்ரல் முதல் 2023 மார்ச் மாதம் வரை நடத்தப்பட்ட டிக்கெட் பரிசோதனைகளில் ரூ.15 கோடியே 57 லட்சத்து 14 ஆயிரத்து 685 அபராதம் வசூல் செய்யப்பட்டுள்ளது.

இதுகுறித்து சேலம் கோட்ட மக்கள் தொடர்பு துறை அதிகாரி மரியா மைக்கேல் கூறுகையில்," பல்வேறு முறைகேடுகளைக் கண்டறிய சேலம் கோட்டத்தின் டிக்கெட் சரிபார்ப்புக் குழு உறுப்பினர்கள் ரயில் மற்றும் ரயில்வே வளாகங்களில் வழக்கமான சோதனைகளை மேற்கொள்கின்றனர். இதுபோன்ற சோதனைகளின் போது, பயணச்சீட்டு இல்லாமல் பயணிக்கும் நபர்கள், முறையற்ற பயணம், முன்பதிவு செய்யப்படாத லக்கேஜ் போன்றவற்றை கண்டறிந்து அதற்கேற்ப அபராதம் விதிக்கின்றனர்.

அதன் படி 2022-23 ஏப்ரல் - மார்ச் மாதங்களில், சேலம் கோட்டத்தின் டிக்கெட் சோதனைக் குழுக்கள் 2,00,821 பேர் டிக்கெட் இல்லாமல் பயணம் செய்ததைக் கண்டறிந்து, அவர்கள் இடமிருந்து ரூ.14.10 கோடி அபராதமாக வசூலித்தனர்.

மேலும் 28,998 முறைகேடான பயணங்கள் கண்டறியப்பட்டு, பயணிகளிடமிருந்து அபராதமாக ரூ.1.43 கோடி வசூலிக்கப்பட்டது. இதேபோல், 558 முன்பதிவு செய்யப்படாத லக்கேஜ்கள் மற்றும் அனுமதிக்கப்பட்ட அளவை விட அதிகமான லக்கேஜ்களை எடுத்துச் செல்வது கண்டறியப்பட்டது. இதற்கு அபராதமாக ரூ.3.55 லட்சம் வசூல் செய்யப்பட்டுள்ளது" என்று அவர் கூறியுள்ளார்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE