விருதுநகரில் விற்பனைக்கு வந்த ரம்புடான் பழம்: கிலோ ரூ.400-க்கு விற்பனை

By கி.மகாராஜன்

விருதுநகர்: செங்கோட்டை, குற்றாலம் பகுதிகளில் அதிக அளவில் விளையக்கூடிய ரம்புடான் பழம் விருதுநகரில் விற்பனைக்காக குவிக்கப்பட்டுள்ளது. கிலோ ரூ.400 வரை விற்பனையாகிறது.

ரம்புடான் நடுத்தர உயரம் உள்ள ஒரு பூக்கும் பழமரத் தாவரம். ரம்புடான் என்ற சொல் ‘ரம்புட்’ என்ற மலாய் மொழி சொல்லில் இருந்து தோன்றியது. இதற்கு ‘முடி’ என்று பொருள். ரம்புடான் பழத்தின் மேல் பரப்பு முடியைப் போன்ற அமைப்பைக் கொண்டுள்ளதே இப்பெயர் வரக் காரணம். இவை கிழக்காசியா மற்றும் தென்கிழக்காசியாவை தாயகமாகக் கொண்டவை. ஆஸ்திரேலியா, கியூகினி, ஆப்பிரிக்கா, இலங்கை, அமெரிக்கா போன்ற நாடுகளில் அதிகமாக விளைகிறது.

நம்நாட்டில் கேரளாவில் குறிப்பிட்ட பகுதிகளிலும் ரம்புட்டான் விளைவது குறிப்பிடத்தக்கது. தமிழகத்தில் குற்றாலம், செங்கோட்டை பகுதிகளில் விளைவிக்கப்படுகிறது. இப்பழம் குளிர்ச்சியான மற்றும் புளிப்பு, இனிப்பு சுவையுடன் கூடியது. பழத்தின் நடுப்பகுதியில் இருக்கும் சதைப் பகுதியே உண்பதற்கு உகந்தது. இப்பழத்தில் மாவுச் சத்து, நார்சத்து, புரதச்சத்து, நீர்சத்து, வைட்டமின் ஏ, வைட்டமின் சி, சுண்ணாம்பு சத்து, இரும்புச் சத்து உள்ளிட்ட ஏராளமான சத்துக்கள் உள்ளன.

கொழுப்பு சத்து மிகக்குறைவு என்பதால் சிறியவர்கள் முதல் பெரியவர்கள் வரை இப்பழத்தை விரும்பி சாப்பிடுவர். தற்போது கேரளத்தில் ரம்புடான் பழம் அறுவடை செய்யப்பட்டுள்ளதைத் தொடர்ந்து, விருதுநகரில் உள்ள பல்வேறு பழக்கடைகளில் இப்பழம் விற்பனைக்கு வந்துள்ளது. கிலோ ரூ.400 வரை விற்பனை செய்யப்படுகிறது. சுவை மிகுந்த ரம்புடான் பழத்தை ஏராளமானோர் விரும்பி வாங்கிச் செல்கின்றனர்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE