'ரேசன் கடையை பொதுவான இடத்தில் கட்டுக’ - ஆட்சியரிடம் கிராம மக்கள் மனு @ தூத்துக்குடி

By ரெ.ஜாய்சன்

தூத்துக்குடி: அனைவருக்கும் பொதுவான இடத்தில் நியாய விலைக்கடை அமைக்க கோரி சித்தவநாயக்கன்பட்டி கிராம மக்கள் தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மனு அளித்தனர்.

தூத்துக்குடி மாவட்டம் விளாத்திகுளம் வட்டம் சித்தவநாயக்கன்பட்டி கிராமத்தைச் சேர்ந்த மக்கள் சுமார் 50 பேர் இன்று காலை தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்துக்கு வந்தனர். அவர்கள் ஆட்சியர் அலுவலகத்தில் வைக்கப்பட்டிருந்த மனுக்கள் பெட்டியில் புகார் மனு ஒன்றைப் போட்டனர்.

அந்த மனுவில் அவர்கள் கூறியிருப்பதாவது: 'விளாத்திகுளம் வட்டம் சித்தவநாயக்கன்பட்டி கிராமத்தில் புதிதாக நியாய விலைக்கடை கட்டுவதற்கு ஒரு குறிப்பிட்ட சமூகத்தினர் வசிக்கும் தெருவில் இடம் தேர்வு செய்யப்பட்டு அடிக்கல் நாட்டப்பட்டுள்ளது. அந்தத் தெருவுக்குள் நாங்கள் செருப்பு கூட அணிந்து செல்லக்கூடாது. இந்தக் கட்டுப்பாடு இன்றைக்கும் நடைமுறையில் உள்ளது.

இந்த சூழ்நிலையில், அந்தத் தெருவில் நியாய விலைக் கடை அமைக்கப்பட்டால் நாங்கள் அங்கு சென்று பொருட்கள் வாங்குவதில் சிரமம் ஏற்படும். எனவே, ஏற்கெனவே கிராம நிர்வாக அலுவலகம் அமைந்துள்ள பொதுவான பகுதியில் போதுமான அளவு இடம் இருப்பதால், அனைத்து மக்களும் பயன்பெறும் வகையில் பொதுவான அந்த இடத்தில் நியாய விலைக் கடையை அமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்’. இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE