திண்டுக்கல்: கொடைக்கானல் கோடை விழாவில் மலர் கண்காட்சியைக் காண பிரையன்ட் பூங்காவில் கடந்த 3 தினங்களில் குவிந்த சுற்றுலாப் பயணிகளால் ரூ.10.47 லட்சம் கட்டணம் வசூலானது.
கொடைக்கானலில் கோடை விழா, மலர் கண்காட்சி மே 17- ம் தேதி தொடங்கியது. 10 நாட்கள் நடைபெறும் கோடை விழாவில் தினமும் பல்வேறு கலை நிகழ்ச்சிகள், படகு அலங்காரப் போட்டி, மீன்பிடித்தல் போட்டி, நாய் கண்காட்சி, விளையாட்டுப் போட்டிகள் நடைபெற்று வருகின்றன. இதைக் காண சுற்றுலாப் பயணிகள் தினமும் அதிக எண்ணிக்கையில் கொடைக்கானல் வந்து செல்கின்றனர். நேற்று பிரையன்ட் பூங்கா பகுதியில் மேகக் கூட்டங்கள் இறங்கி வந்து சுற்றுலாப் பயணிகளை தழுவிச் சென்ற ரம்மியமான சூழல் நிலவியது.
இது மலர்களைக் கண்டு ரசித்த சுற்றுலாப் பயணிகளுக்கு இரட்டிப்பு மகிழ்ச்சியாக இருந்தது. மலர் கண்காட்சி தொடங்கிய மே 17-ம் தேதி முதல், வார விடுமுறை நாட்களான சனி, ஞாயிறு என இந்த 3 நாட்களில் மட்டும் பிரையன்ட் பூங்காவுக்கு 15 ஆயிரத்து 355 பேர் வருகை தந்துள்ளனர். இதன் மூலம் தோட்டக்கலைத் துறையினர், பிரையன்ட் பூங்கா நிர்வாகத்துக்கு கட்டணமாக ரூ.10 லட்சத்து 47 ஆயிரம் வருவாய் கிடைத்துள்ளது. மலர் கண்காட்சி தொடர்ந்து மே 26-ம் தேதி வரை நடைபெற வுள்ளது. அன்று கோடைவிழாவின் நிறைவு நாள் நிகழ்ச்சிகள் நடைபெறவுள்ளன.