சென்னானுார் அகழாய்வில் தமிழி எழுத்து பொறிக்கப்பட்ட 3 பானை ஓடுகள் கண்டெடுப்பு

By எஸ்.கே.ரமேஷ்

கிருஷ்ணகிரி: கிருஷ்ணகிரி மாவட்டம், ஊத்தங்கரை தாலுகா, குன்னத்துார் ஊராட்சியைச் சேர்ந்த சென்னானுார் கிராமத்தில், தமிழ்நாடு அரசு தொல்லியல் துறையால் மேற்கொள்ளப்பட்டு வரும் அகழாய்வில், புதிய கற்கால கருவி, சுடு மண்ணாலான முத்திரை, சங்கு வளையல் துண்டுகள், வட்ட சில்லுகள், கண்ணாடி வளையல் துண்டுகள் போன்ற தொல்பொருட்கள் கிடைத்துள்ளன. தற்போது தமிழி எழுத்து பொறிக்கப்பட்ட மூன்று பானை ஓடுகள் கிடைத்துள்ளன

ஆய்வில் கடந்த, மாதம் 24-ம் தேதி, உடைந்த புதிய கற்கால வெட்டுக் கற்கருவியும், 28-ம் தேதி களிமண்ணால் ஆன சுடுமண் முத்திரையும், 30-ம் தேதி இரும்பினாலான கலப்பையின் கொழுமுனையும் கிடைத்தன. .

இதுகுறித்து அகழாய்வு இயக்குனர் பரந்தாமன் கூறியதாவது: "இடைக்கால வரலாற்றுக் காலத்தைச் சார்ந்ததாகக் கருதப்படும் இரும்பிலான ஏர்கலப்பையின் கொழுமுனை இங்கு கிடைத்துள்ளது. இக்கொழுமுனை 1.3 கிலோ எடையும், 32 செ.மீ. நீளமும், 3 செ.மீ., தடிமனும் கொண்டுள்ளது. மேலும், சுடுமண் முத்திரை, சங்கு வளையல் துண்டுகள், கண்ணாடி வளையல் துண்டுகள், வட்டச் சில்லுகள், தக்களி ஆகிய சங்க காலம் என்றழைக்கப்படும் தொடக்க வரலாற்றுக் காலத்தைச் சார்ந்த தொல் பொருட்கள் கண்டெடுக்கப்பட்டுள்ளன.

தற்போது 90 செ.மீ.,முதல் 108 செ.மீ. வரையிலான ஆழத்தில் தமிழி எழுத்துப் பொறிக்கப்பட்ட மூன்று பானை ஓடுகள் கிடைத்துள்ளன. இந்த பானை ஓடுகளில் (ந்)தை பாக அந், ஊகூர், (சா)த்தன் என பொறிக்கப்பட்டுள்ளன. பாறைகளில் பொறிக்கப்பட்ட தமிழி எழுத்துக் கல்வெட்டுகளில், வேள்ஊர், மதிரை, இவகுன்றம், நெல்வெளிஇய், இலஞ்சி, கருஊர், முசிறி, வெள் அறைய், தேனுார், அகழ்ஊர், கோகூர் போன்ற ஊர் பெயர்கள் காணப்படுகின்றன. ஆனால் பானை ஓடுகளில் பெரும்பாலும் ஆட்கள் பெயர் இடம் பெற்றுள்ளன. உறையூர் பானை ஓட்டில் மூலனபேடு என்ற ஊர்ப்பெயர் உள்ளது. தற்போது சென்னானுார் பானை ஓட்டில் ஊகூர் என்ற ஊர் பெயர் கிடைத்துள்ளது சிறப்பாக கருதப்படுகிறது." என்று பரந்தாமன் கூறினார்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE