ஹிஜாப் அணியாத வீராங்கனை: வீட்டை இடித்தது அரசாங்கம்!

By காமதேனு

ஈரானில் தொடரும் ஹிஜாப் சர்ச்சையின் அண்மை வரவாக, ஹிஜாப் அணியாத அந்நாட்டு வீராங்கனைக்கு சொந்தமான வீட்டை அரசாங்கமே இடித்துள்ளது.

செப்டம்பர் மத்தியில் மாஷா அமினி என்ற பெண் காரில் செல்லும்போது ஹிஜாப் அணியவில்லை என்ற குற்றச்சாட்டின் பேரில் ஈரான் கலாச்சார போலீஸாரின் கவனிப்புக்கு ஆளானார். போலீஸ் பிடியில் அவர் இறந்ததை அடுத்து ஹிஜாப் மற்றும் அரசுக்கு எதிரான போராட்டம் ஈரானில் பரவியது. ஏராளமான பெண்கள் ஹிஜாபை அகற்றியும், தலைக்கேசத்தை நறுக்கியும் தங்களது எதிர்ப்பை பதிவு செய்தனர்.

ஈரானில் இஸ்லாமிய சட்டம் நடைமுறையில் இருப்பதால், ஹிஜாப்புக்கு எதிரான போராட்டங்கள் இரும்புக்கரம் கொண்டு அடக்கப்பட்டன. ஈரானுக்கு வெளியேயும் போராட்டம் பரவியதாலும், போராட்டங்களுக்கு உலகமெங்கும் பெருகிய ஆதரவாலும் ஈரானுக்கு தர்மசங்கடமானது. இதற்கிடையே அக்டோபர் மாதம் தென்கொரியாவில் நடைபெற்ற சர்வதேச விளையாட்டுப் போட்டிகளில் பங்கேற்ற வீராங்கனை ஒருவர் வாயிலாகவும் ஈரானுக்கு இக்கட்டு நேர்ந்தது.

எல்னாஸ் ரெகாபி என்ற அந்த வீராங்கனை ஹிஜாப் அணியாது, குதிரைவால் கேசத்தோடு போட்டிகளில் பங்கேற்றார். ஈரானில் நடைபெறும் ஹிஜாபுக்கு எதிரான போராட்டத்தை ஆதரிக்கும் வகையில் எல்னாஸ் அவ்வாறு செய்ததாக விமர்சிக்கப்பட்டார். வீராங்கனையின் செயலை சர்வதேச அளவில் பலரும் வரவேற்றனர். ஆனால் ஈரானில் இது கொந்தளிப்பை ஏற்படுத்தியது.

எதிர்பார்த்தது போலவே டெஹ்ரானில் சென்று இறங்கியதுமே, தென்கொரியாவில் ஹிஜாப் அணியாதது தொடர்பாக எல்னாஸ் மன்னிப்பு கோரினார். அதன் பிறகும் அவருக்கு எதிரான அரசின் பழிவாங்கல் நடவடிக்கைகள் தொடர்வதாக சொல்லப்பட்ட நிலையில், தற்போது அவரது குடும்ப சொத்தான வீடு ஒன்று இடித்து தள்ளப்பட்டுள்ளது. அரசு உத்தரவின் பேரில் வீடு இடித்து தள்ளப்பட்டதாகவும், சர்வதேச விளையாட்டு போட்டிகளில் பெற்ற கோப்பைகள் மற்றும் பரிசுகள் வீதியில் எறியப்பட்டதாகவும், வீடியோ மற்றும் புகைப்படங்களுடன் சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

இவற்றை மறுக்கும் ஈரான் அரசுக்கு ஆதரவானோர், இடிக்கப்பட்டது எல்னாஸ் சகோதரரான தாவூத் என்பவருக்கு சொந்தமான வீடு என்றும், வீதியில் எறியப்பட்டவை விளையாட்டு வீரரான தாவூத்தின் பதக்கங்கள் எனவும் தெரிவிக்கின்றனர். ஆனால் சர்வதேச போட்டியின்போது எல்னாஸ் ஹிஜாப் அணியாததுக்கு பதிலடியாகவே வீடு இடிக்கப்பட்டது என்பதை எவரும் மறுக்கவில்லை.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE