ஓசூர்: தேன்கனிக்கோட்டை பகுதியில் பெய்து வரும் கோடை மழையைத் தொடர்ந்து ரோஜா நாற்று உற்பத்தி பணியில் விவசாயிகள் தீவிரமாக ஈடுபட்டுள்ளனர்.
ஓசூர், பாகலூர், கெலமங்கலம், தேன்கனிக்கோட்டை, சூளகிரி மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளில் பசுமைக் குடில் மற்றும் திறந்தவெளி மூலம் ரோஜா உள்ளிட்ட பல்வேறு மலர் சாகுபடியில் அதிக விவசாயிகள் ஈடுபட்டு வருகின்றனர்.
ஏற்றுமதியாகும் மலர்: இங்கு சாகுபடி செய்யப்படும் ரோஜா மற்றும் கொய் மலர்கள் வெளி நாடுகளுக்கு ஏற்றுமதி செய்யப்படு வதன் மூலம் விவசாயிகள் அதிக வருவாய் ஈட்டி வருகின்றனர். மலர் சாகுபடியை மையமாகக் கொண்டு தளி, தேன்கனிக்கோட்டை, அகலக் கோட்டை, குந்துக்கோட்டை, பாலதோட்டனப்பள்ளி, பெட்ட முகிலாளம், பாகலூர், பேரிகை உள்ளிட்ட 20-க்கும் மேற்பட்ட கிராமங்களில் பன்னீர் ரோஜா, பட்டன், கில்லி எல்லோ, மூக்குத்தி, மேங்கோ எல்லோ, நோப்ளஸ் உள்ளிட்ட 50-க்கும் மேற்பட்ட தரமான மலர் வகை நாற்றுகளை விவசாயிகள் உற்பத்தி செய்து, விற்பனை செய்து வருகின்றனர்.
ஆண்டுக்கு 30 லட்சம் நாற்றுகள்: இங்கு உற்பத்தியாகும் நாற்றுகள் ஓசூரை சுற்றியுள்ள பகுதிகளுக்கும், வெளி மாவட்டங்கள் மற்றும் வெளி மாநிலங்களுக்கும் விற்பனைக்கு செல்கின்றன. இப்பகுதியில் ஆண்டுக்கும் 30 லட்சம் நாற்றுகள் உற்பத்தி செய்யப்படுகின்றன. இந்நிலை, நிகழாண்டு கடும் வறட்சி காரணமாக நிலத்தடி நீர்மட்டம் சரிந்த நிலையில், ரோஜா நாற்று உற்பத்தி 70 சதவீதம் பாதிக்கப்பட்டிருப்பதாக விவசாயிகள் வேதனை தெரிவித் தனர். இதனிடையே, கடந்த ஒரு வாரமாக தேன்கனிக்கோட்டை, அஞ்செட்டி உள்ளிட்ட பகுதிகளில் பெய்த கோடை மழையைத் தொடர்ந்து ரோஜா நாற்று உற்பத்தி பணியில் விவசாயிகள் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர்.
» தூத்துக்குடி | ஜெல்லி மீன்களால் அச்சுறுத்தல் இல்லை: மீன்வளத் துறை ஆய்வாளர் தகவல்
» வீட்டு உபயோகப் பொருட்கள் தயாரிக்கும் பயிற்சி: வேளாண் பல்கலை. அழைப்பு @ சென்னை
விலை உயர வாய்ப்பு - இது தொடர்பாக விவசாயிகள் கூறியதாவது: ஓசூர் பகுதியில் ரோஜா சாகுபடி பிரதானமாக உள்ளதால், நாற்று உற்பத்தி தொழிலும் விவசாயிகளுக்குக் கைகொடுத்து வருகிறது. இப்பகுதியில் தரமான நாற்றுகள் உற்பத்தி செய்யப்பட்டு, ஒரு நாற்று ரூ.15 முதல் ரூ.20 வரை விற்பனையாகிறது. நிகழாண்டில் ஏற்பட்ட வறட்சி காரணமாக நாற்று உற்பத்தி பாதிக்கப்பட்டது.
சில விவசாயிகள் விலைக்குத் தண்ணீரை வாங்கி ஏற்கெனவே சாகுபடி செய்த நாற்றுகளைப் பராமரித்தனர். தற்போது பெய்த கோடை மழையைத் தொடர்ந்து மீண்டும் நாற்று உற்பத்தியில் தீவிரமாக ஈடுபட்டுள்ளோம். இருப்பினும் சாகுபடி தேவைக்கு ஏற்ப நாற்றுகள் உற்பத்தியில்லாத நிலையில், நாற்றுகளின் விலை உயர வாய்ப்புள்ளது. மேலும், வரும் நாட்களில் கோடை மழை பெய்தால் மட்டுமே, நாற்று உற்பத்தி தொழில் பாதிப்பில்லாமல் தொடரமுடியும். இவ்வாறு அவர்கள் கூறினர்.