ஆட்டுக்குட்டிகளுக்கு பிறந்தநாள் விழா: குழந்தையில்லா தம்பதியரின் நெகிழ்ச்சி

By காமதேனு

பிறந்தநாள் கொண்டாட்டம் என்றாலே கெடா வெட்டு, விருந்து என்று அமர்க்களம் செய்வோருக்கு இந்த செய்தி வித்தியாசமாக தென்படலாம். உத்தரப் பிரதேசத்தை சேர்ந்த தம்பதியர் தங்கள் வாரிசுகளாக பாவிக்கும் ஆட்டுக்குட்டிகளின் பிறந்தநாளை கேக் வெட்டி, இசை நிகழ்ச்சி நடத்தி, விருந்து பரிமாறி தடபுடலாய் கொண்டாடி உள்ளனர்.

உத்தரப் பிரதேச மாநிலம் பாந்தா பகுதியின் கன்ஷிராம் காலனியில் வசிப்பவர் ராஜா. இவருக்கு திருமணமாகி பல ஆண்டுகளாக குழந்தை பேறு இல்லாத வருத்தத்தில் ஆழ்ந்திருந்தார். சில ஆண்டுகள் முன்னர் இவரது மனைவி ஒரு ஆட்டுக்குட்டியை கொண்டுவந்து பிரியத்தோடு வளர்ப்பதையும், அதனை ஒரு குழந்தை போல வீட்டினுள் புழங்க விடுவதையும் பார்த்தார். தம்பதியர் இருவரும் ஒருமித்த முடிவாய் அந்த ஆட்டுக்குட்டியை தங்களது வாரிசாக பாவித்து வளர்க்க ஆரம்பித்தனர். அதுவும் செல்லப் பிராணி என்பதற்கும் அப்பால் அந்த தம்பதியரிடம் குழைந்து வளர்ந்தது.

இதற்கிடையே கடந்த வருடம் ராஜாவும் அவரது மனைவியும் தாத்தா - பாட்டி ஆனார்கள். அதாவது அவர்களது செல்ல ஆடு 2 குட்டிகளை ஈன்று குடும்பத்தை விருத்தி செய்திருந்தது. மகிழ்ச்சியில் திக்குமுக்காடிய தம்பதியர் அதை பெரும் விழாவாக கொண்டாட முயன்றனர். ஆனால் பெருந்தொற்று பரவலின் பீதி முழுவதுமாக அகலாத சூழல் அதற்கு தடையானது. பொறுமையாக ஓராண்டு காத்திருந்தவர்கள், பேரக்குட்டிகளின் முதல் பிறந்தநாளை தற்போது சீரும் சிறப்புமாக கொண்டாடி மகிழ்ந்திருக்கின்றனர்.

சுற்றார் உற்றாரை அழைத்து விருந்து வைத்ததோடு, பிறந்தநாள் கொண்டாடும் ஆட்டுக்குட்டிகளுக்காக பிரத்யேகமாய் கேக் வெட்டியும் குதூகலித்திருக்கின்றனர். ஆண் குட்டிக்கு குபேர் என்றும் பெண் குட்டிக்கு லக்‌ஷ்மி என்றும் பெயர் சூட்டு வைபவத்தையும் நிகழ்த்தி உள்ளனர். பிறந்தநாள் கொண்டாட்டத்தை முன்னிட்டு ’டிஜே’ எல்லாம் வரவழைத்து சிறப்பு இசை நிகழ்ச்சி நடத்தியதோடு, கோயில்களில் சிறப்பு பூஜை என்றும் சிறப்பித்தனர். உறவினர்களும், அக்கம்பக்கம் வசிப்போரும் ராஜா தம்பதியரின் மகிழ்ச்சியில் பங்கெடுத்தவர்களாக, விருந்தில் கைநனைத்து மொய் எழுதியும் திரும்பியிருக்கின்றனர். சற்று நெருக்கமானோர் ஆட்டுக்குட்டிகளுக்கு சால்வைகள், கம்பளி ஆடைகள் பரிசளித்தும் திருப்தியடைந்திருக்கின்றனர்.

ராஜா

இது குறித்து நெகிழ்ச்சியாக பேட்டி அளித்திருக்கும் ராஜா, ’ஆடு ஒன்றை தங்கள் வாரிசாக வளர்க்க ஆரம்பித்த பிறகு அசைவம் சாப்பிடுவதையே நிறுத்திவிட்டதாகவும், அந்த ஆடும் அதன் குட்டிகளும் தங்களுடைய குழந்தை இல்லா ஏக்கத்தை நிவர்த்தி செய்திருப்பதாகவும்’ மகிழ்ந்திருக்கிறார். பசு நேசர்கள் மற்றும் கால்நடை வளர்ப்புக்கு முக்கியத்துவம் தரும் உத்தரப் பிரதேசத்தில் ராஜா தம்பதியரும் அவர்களது ஆட்டுக்குடும்பமும் திடீர் நட்சத்திரங்களாக மாறியுள்ளனர்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE