பட்சிகள் மூலம் மேம்படும் மனநலன்: ஆய்வில் புதிய தகவல்!

By காமதேனு

மனநலனை மேம்படுத்த மருந்துகள் மட்டும் போதாது எனப் பொதுவாகச் சொல்வார்கள். ரம்மியமான சூழல் மூலம் மன அமைதியைப் பெற முடியும் என்பதும் நாம் அறிந்த விஷயம்தான். லண்டனில் உள்ள கிங்ஸ் கல்லூரியைச் சேர்ந்த ஆய்வாளர்கள் இதில் இன்னொரு படி முன்னேறிச் சென்று, பறவைகள் மூலம் மனநலன் மேம்படும் எனக் கண்டறிந்திருக்கின்றனர்.

பிரிட்டன், அமெரிக்கா, சீனா, ஆஸ்திரேலியா மற்றும் ஐரோப்பிய நாடுகளைச் சேர்ந்த 1,292 பேரிடம் கடந்த ஆண்டு இந்த ஆய்வு நடத்தப்பட்டது. ‘அர்பன் மைண்ட்’ (Urban Mind) எனும் செயலி மூலம் இரண்டு வாரங்களாக நடத்தப்பட்ட இந்த ஆய்வின் அறிக்கை, ‘சயின்டிஃபிக் ரிப்போர்ட்ஸ்’ எனும் ஆய்விதழில் வெளியாகியிருக்கிறது.

என்ன சொல்கிறது ஆய்வு?

பறவைகள் வசிக்கும் பகுதிகள், குறிப்பாக பூங்காக்கள், கால்வாய்ப் பகுதிகள் போன்ற இடங்களுக்குச் செல்வதன் மூலம் மன அழுத்தம் கொண்டவர்கள் உட்பட பெரும்பாலானோருக்கு மனநலன் மேம்படும் என ஆய்வாளர்கள் தெரிவித்திருக்கின்றனர். பறவைகளைப் பார்த்தாலோ, பறவைகளின் ஒலியைக் கேட்டாலோ தங்கள் மனநலன் மேம்படுவதாக ஆய்வில் பங்கேற்ற பலர் தெரிவித்திருக்கின்றனர். பறவைகள் இருக்கும் இடத்துக்குச் செல்லாத சமயங்களில் அவர்களது மனநிலையில் சுணக்கம் இருந்ததாகவும் ஆய்வாளர்கள் குறிப்பிடுகிறார்கள்.

பறவைகளின் பாடல்களைக் கேட்பதன் மூலம் மன இறுக்கம் தளர்த்தப்பட்டு புத்துணர்வு கிடைக்கிறது என்றும், மனநல சிகிச்சையில் ஈடுபட்டிருக்கும் மருத்துவர்கள், பறவைகளின் வாழிடங்களுக்குச் சென்றுவருமாறு தங்கள் நோயாளிகளிடம் இனி பரிந்துரைக்கக்கூடும் என்றும் ஆய்வில் குறிப்பிடப்பட்டிருக்கிறது.

மிக முக்கியமாக, பறவைகளின் வசிப்பிடங்களைப் பாதுகாக்கும் வகையில் நகர்ப்புறங்கள், புறநகர்ப் பகுதிகள், கிராமப்புறங்கள் போன்ற இடங்களில் சுற்றுச்சூழலைப் பாதுகாப்பதும், பல்லுயிர்ச் சூழலை மேம்படுத்துவதும் அவசியம் என ஆய்வாளர்கள் சுட்டிக்காட்டியிருக்கிறார்கள்.

இயற்கைச் சூழலைக் காப்பாற்றினால் நமது மனநலனையும் பாதுகாத்துக் கொள்ளலாம். அரசுகள் மட்டுமல்ல தனிமனிதர்களும் அமைப்புகளும் இணைந்து செய்ய வேண்டிய முக்கியக் கடமை இது!

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE