மதுரை | கஜா புயலால் மூடப்பட்ட குட்லாம்பட்டி அருவியை ரூ.3 கோடியில் புதுப்பிக்க திட்டம்

By ஒய்.ஆண்டனி செல்வராஜ்

மதுரை: பருவமழை சீசனில் சுற்றுலாப் பயணிகள் குளித்து மகிழ, மதுரை அருகே கஜா புயலால் சேதமடைந்த குட்லாம்பட்டி அருவி ரூ.3 கோடியில் புதுப்பிக்கப்படவுள்ளது.

மதுரை மாவட்டம் வாடிப்பட்டியை அடுத்த குட்லாம்பட்டி கிராமம் அருகே சிறுமலை அடிவாரத்தில் இயற்கை எழில் ததும்பும் குட்லாம்பட்டி அருவி கொட்டுகிறது. மதுரையில் இருந்து கொடைக்கானல் செல்லும் சாலையில் குட்லாம்பட்டி கிராமத்தில் இருந்து 7 கி.மீ., தொலைவில் இந்த அருவி உள்ளது. சிறுமலையில் இருந்து 70 அடி உயரத்தில் இருந்து கொட்டும் இந்த அருவி பார்ப்பதற்கே ரம்மியமாக காணப்படும். இந்த அருவியில் குளிக்க தொடங்கினால் திரும்பி வரவே மனம் வராது.

அந்தளவுக்கு இந்த அருவி மனதிற்கும், உடலுக்கும் புத்துணர்ச்சியும், குளிர்ச்சியும் நிறைவாக தருகிறது. இந்த அருவியை மதுரையின் குற்றாலம் என சுற்றுலாப்பயணிகள் அழைப்பார்கள். இந்த அருவிக்கு சீசன் காலத்தில் அதிகமான சுற்றுலாப்பயணிகள் வந்து செல்கிறார்கள். சனி, ஞாயிற்றுக் கிழமைகளில் அதிகமான சுற்றுலாப் பயணிகள் வருவார்கள். சிறுமலையானது மூலிகை குணம் கொண்ட காட்டு மரங்கள், செடிகளை ஆகியவை இருப்பதாக சொல்லப்படுகிறது.

அதனால், சிறுமலையில் இருந்து பாறைகளுக்கு இடையிலும், அடர்ந்த மரக்காட்டில் உள்ள இந்த அருவியில் கொட்டும் தண்ணீர் மூலிகை சக்தி கொண்டதாக சொல்லப்படுகிறது. கடந்த 2018-ம் ஆண்டு ‘கஜா’ புயல், சிறுமலை வரை பெரும் பாதிப்பை ஏற்படுத்தியது. அந்தப் புயல் சிறுமலை அடிவாரத்தில் உள்ள இந்த குட்லாம்பட்டி அருவியை சேதப்படுத்தியது. சுற்றுலாப் பயணிகள் குளிக்கும் இடம், பாறைகள் உருண்டு உடைந்து சிதலமடைந்தது.

சுற்றுலாப் பயணிகள் இந்த அருவிக்கு நடந்து செல்லும் இடமும் சேதமடைந்தது. அதனால், குளிக்க செல்லும் சுற்றுலாப் பயணிகளுக்கு பாதுகாப்பு இல்லாததால், குட்லாம்பட்டி அருவியை வனத்துறை மூடியது. அதன் பிறகு தற்போது வரை சீசன் காலத்தில் அருவியில் தண்ணீர் கொட்டினாலும் சுற்றுலாப் பயணிகள் அனுமதிக்கப்படுவதில்லை.

மதுரையில் உள்ள ஒரே ஒரு இயற்கை எழில் கொஞ்சும், சுழலியல் அருவியை சீரமைக்க வேண்டும் என சுற்றுலாப் பயணிகள் வலியுறுத்தினர். இந்நிலையில் இந்த அருவியை மறுசீரமைத்து புதுப்பொலிவுப்படுத்த சுற்றுலாத் துறை வனத்துறைக்கு ரூ.3 கோடி நிதி ஒதுக்கியுள்ளது.

இது குறித்து மாவட்ட சுற்றுலாத்துறை அதிகாரி பாலமுருகன் கூறுகையில், ‘‘இந்த அருவிக்கு ஜூலை மாதம் இறுதியல் இருந்து டிசம்பர், ஜனவரி மாதம் வரை தண்ணீர் விழும். மதுரையில் உள்ள சுற்றுலாப்பயணிகளை கவர்ந்த ஒரு இடமாக இந்த அருவி முக்கியமானது. சுற்றுலாத்துறை ஒதுக்கிய ரூ.3 கோடியில் வனத்துறை அருவியை மறுசீரமைக்கும் பணிகளை விரைவில் தொடங்க உள்ளது. இந்த அருவிக்கு நடந்து போகிற பாதைகள் சீரமைப்பது, குளிக்கிற பாதுகாப்பு கைப்பிடிகள் அமைப்பது, சுற்றுலாப் பயணிகளுக்கான 4 கழிப்பறை, தனித்தனி உடை மாற்றும் அறை போன்றவை அமைக்கப்படுகிறது. மேலும், படிக்கட்டுகள் சீரமைக்கப்படுகிறது, ’’ என்றார்.

விரைவில் பருவமழை சீசன் தொடங்க உள்ள விலையில் ஒதுக்கிய நிதியில் உடனடியாக சீரமைப்பு பணிகளை தொடங்கி நடப்பு சீசனிலே இந்த அருவியில் குளித்து மகிழ வனத்துறையும், சுற்றுலாத்துறையும் விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பது சுற்றுலாப்பயணிகள் எதிர்பார்ப்பாக உள்ளது.

கேரளாவை பின்பற்றுமா தமிழக வனத்துறை: கேரளாவில் குட்லாம்பட்டி அருவியை விட சிறிய அருவிகளை கூட வனத்துறை சிறப்பாக பராமரித்து, அதனை அரசுக்கு வருவாய் ஈட்டித்தரக் கூடிய சுற்றுலாத்தலமாகவும், சுற்றுலாப் பயணிகள், குழந்தைகள் பொழுதுப் போக்குவதற்கான இடமாகவும் மாற்றி உள்ளனர். ஆனால், சிறந்த சுற்றுலாத்தலமாக இருக்கக் கூடிய குட்லாம்பட்டி அருவியை, குற்றாலம் அருவியை போல் சுற்றுலாப் பயணிகள் கவரக்கூடிய இடமாக மாற்ற வனத்துறை தேவையான நடவடிக்கை எடுக்கவில்லை என்ற குற்றச்சாட்டு உள்ளது.

சுழலியலையும், இயற்கை சுற்றுலாவை பற்றி பேசும் தமிழக சுற்றுலாத்துறையும், வனத்துறையும், கிராமங்களில் இயற்கை எழில் கொஞ்சும் இதுபோன்ற சுற்றுலாத்தலங்களை அதனைமேம்படுத்தி சுற்றுலாப்பணிகள் வாரவிடுமுறை நாட்களில் வந்து செல்லக்கூடிய சிறந்த சுற்றுலாத் தலமாக மாற்ற வேண்டும் என்ற எதிர்பார்ப்பு உள்ளது.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE