கேரளாவில் பறவைக் காய்ச்சல் எதிரொலி: கிருஷ்ணகிரி ஆட்சியரின் புதிய அறிவுறுத்தல்

By KU BUREAU

கிருஷ்ணகிரி: கேரள மாநிலத்தில் பறவைக் காய்ச்சல் பரவி வரும் நிலையில், கோழி இறைச்சி மற்றும் முட்டைகளை நன்கு வேக வைத்துச் சாப்பிட வேண்டும் என கிருஷ்ணகிரி மாவட்ட ஆட்சியர் அறிவுறுத்தியுள்ளார்.

கிருஷ்ணகிரி ஆட்சியர் அலுவலகத்தில் கால்நடை பராமரிப்புத் துறை சார்பில், பறவைக் காய்ச்சல் தடுப்பு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் தொடர்பான ஆய்வுக் கூட்டம் நடந்தது. கூட்டத்துக்கு, ஆட்சியர் கே.எம்.சரயு தலைமை வகித்துப் பேசியதாவது: பறவைக் காய்ச்சல் தொடர்பாக கால்நடை பராமரிப்புத் துறையினர் பொதுமக்களிடையே விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும். ‘எச்5 என்1’ என்ற வைரஸ் கிருமியால் பறவைக் காய்ச்சல் ஏற்படுகிறது. இது முதலில் பறவைகளைத் தாக்கும். அத்துடன் மனிதர்களுக்கும் பாதிப்பை ஏற்படுத்தும், இந்நோய் ஒருவரிடமிருந்து மற்றொருவருக்குச் சுவாசத்துளி மூலம் பரவும்.

எனவே, பறவைகளுடன் நெருக்கமாக பணிபுரியும் பணியாளர்கள், முகக்கவசம் மற்றும் கையுறைகள் அணிந்து பணிபுரிய வேண்டும். கேரள மாநிலம் ஆலப்புழாவில் பறவைக் காய்ச்சல் இருப்பது கண்டறியப்பட்டதால், அம்மாநிலத்திலிருந்து கோழிகள், முட்டைகள், வாத்துகள், கோழித் தீவனங்களை வியாபாரிகள் கொள்முதல் செய்ய வேண்டாம். மேலும், கடந்த ஒரு மாதத்தில் கேரள மாநிலத்திலிருந்து கொள்முதல் செய்திருந்தால், அவற்றை உடனடியாக அழித்து விட வேண்டும.

கோழிகளின் அசாதாரண உயிரிழப்பு குறித்து உடனுக்குடன் கால் நடை பராமரிப்புத் துறைக்கு தகவல் தெரிவிக்க வேண்டும். இது தொடர்பாக கால்நடை பராமரிப்புத் துறை யினரின் ஆய்வுக்கு வரும் போது கோழிப் பண்ணை உரிமையாளர்கள் ஒத்துழைப்பு வழங்க வேண்டும். மேலும், கால்நடை பராமரிப்புத் துறை மூலம் அமைக்கப்பட்டுள்ள 30 அதிவிரைவு குழுக்கள் அவசர கால தேவைக்கு ஏற்றவாறு தயார் நிலையில் உள்ளனர்.

இதற்கான கிருமி நாசினி மற்றும் மருந்து தெளிப்பான்கள் தேவையான அளவு தயார் நிலையில் உள்ளன. 'ஆர்ஆர்டி' குழுக்கள் மூலம் மாவட்டத்தில் உள்ள அனைத்து கோழிப் பண்ணைகளிலும் உடனடியாக ஆய்வு மேற்கொண்டு பண்ணையில் ஏற்படும் சாதாரண உயிரிழப்பு கோழிகளை முறையாக அப்புறப்படுத்துவதை உறுதி செய்ய வேண்டும். வெளி மாநிலங்களிலிருந்து வரும் முட்டைகள் மற்றும் கோழிகளை ஏற்றி வரும் வண்டிகளுக்குக் கிருமி நாசினி தெளித்து பண்ணைக்குள் அனுமதிக்க வேண்டும்.

உயிரிழந்த கோழிகளை உரிய முறையில் அப்புறப்படுத்தி குழிகளில் போட்டு மக்கச் செய்ய வேண்டும். பொதுமக்கள் கோழி இறைச்சி மற்றும் முட்டைகளைச் சுகாதாரமான முறையில் நன்கு வேக வைத்து சாப்பிட வேண்டும். இவ்வாறு அவர் பேசினார். கால்நடை பராமரிப்புத் துறை இணை இயக்குநர் இளங்கோவன், உதவி இயக்குநர் அருள்ராஜ், சுகாதார பணிகள் துணை இயக்குநர் ரமேஷ்குமார் உட்பட பலர் கலந்து கொண்டனர்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE