கோவை / திருப்பூர்: டெங்கு கொசு ஒழிப்பு பணியில் கோவை மாநகரில் 800 பணியாளர்களும், திருப்பூர் மாநகராட்சியில் 300 பணியாளர்களும் ஈடுபட்டுள்ளனர்.
கோவை மாநகரில் டெங்கு காய்ச்சல் பரவல் தடுப்புப் பணியை மாநகராட்சி நிர்வாகத்தினர் தீவிரப் படுத்தியுள்ளனர். ஒரு வார்டுக்கு 8 பேர் என 100 வார்டுகளுக்கு 800 பணியாளர்கள் நியமிக்கப்பட்டு, டெங்கு காய்ச்சல் பரவல் தடுப்புப் பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். கடந்தாண்டு டெங்கு பரவல் அதிகம் இருந்த இடங்கள் என 27 இடங்கள் கண்டறியப்பட்டுள்ளன. இவற்றை ‘ஹாட் ஸ்பாட்’ ஆக அடையாளப் படுத்தி முக்கியத்தும் கொடுத்து டெங்கு தடுப்புப் பணி நடக்கிறது.
டெங்கு தடுப்புப் பணியில் ஈடுபட்டுள்ள பணியாளர்கள் வீடு, வீடாகச் சென்று தண்ணீர் தேங்கும் தேவையற்ற பொருட்களை அப்புறப்படுத்துதல், தடுப்பு மருந்துகளை தெளித்தல், நன்னீரில் மருந்து கலக்குதல், புகை மருந்து அடித்தல் உள்ளிட்ட பணிகளை மேற்கொண்டு வருகின்றனர்.
இது குறித்து மாநகராட்சி ஆணையர் மா.சிவகுரு பிரபாகரன் வெளியிட்ட செய்திக்குறிப்பில், ‘‘கோடை மழை தீவிரம் அடைந்துள்ளதால், டெங்கு காய்ச்சலை பரப்பும் ஏடிஎஸ் கொசுக்கள் உற்பத்தியாவதற்கான சாதகமான சூழ்நிலை நிலவுகிறது. பொது மக்கள் அவர் தம் வீடுகள், கட்டுமான இடங்கள், வணிக வளாகங்கள், பணிபுரியும் அலுவலகங்கள் மற்றும் அங்காடிப் பகுதிகளில் உள்ள நீர் சேகரிப்பு கொள்கலன்களை கொசு புகாதவாறு மூடிவைக்க வேண்டும்.
மேலும், வீட்டை சுற்றியுள்ள இடங்களில் தேவையற்ற உடைந்த பொருட்கள் இருப்பின் உடனடியாக அப்புறப்படுத்த வேண்டும். வீட்டு கூரைகளில் டயர் உள்ளிட்ட தேவையற்ற பொருட்கள் போடுவதை முற்றிலும் தவிர்க்க வேண்டும். டெங்கு காய்ச்சல் தடுப்புபணியில் ஈடுபடும் மாநகராட்சி ஊழியர்களுக்கு முழுஒத்துழைப்பு தர வேண்டும்.காய்ச்சல் ஏற்பட்டால் உடனடியாக அருகிலுள்ள அரசு ஆரம்ப சுகாதார நிலையங்கள், மருத்துவ மனைகளில் தகுந்த சிகிச்சை பெற்றுக்கொள்ள வேண்டும்.
குடிநீரை காய்ச்சி ஆற வைத்து குடிக்க வேண்டும்’’எனக் கூறப்பட்டுள்ளது. இதேபோல, திருப்பூர் மாநகராட்சியின் 60 வார்டுகளிலும், சுழற்சி முறையில் கொசு மருந்து தெளிக்கும் பணி மற்றும் கொசு ஒழிப்பு உள்ளிட்ட பணிகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளன.
இது குறித்து, திருப்பூர் மாநகராட்சி ஆணையர் பவன்குமார் ஜி.கிரியப்பனவர் கூறும்போது, “திருப்பூரில் கடந்த 10 நாட்களாக டெங்கு உள்ளிட்ட காய்ச்சலால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை கட்டுக்குள் உள்ளது. ஒரு வார்டுக்கு 5 பேர் வீதம், 60 வார்டுகளுக்கு 300 கொசு ஒழிப்பு பணியாளர்கள் நியமிக்கப்பட்டு தொடர்ந்து கொசு ஒழிப்பு பணிகளை மேற்கொண்டு வருகின்றனர்.
கொசுப் புழு உற்பத்தியாகும் பகுதிகள் கண்டறியப்படும் போது, சம்பந்தப்பட்ட வீடு அல்லது நிறுவன உரிமையாளர்களுக்கு எச்சரிக்கை விடுக்கப்படும். தொடர்ந்து இதுபோன்று நடந்துகொண்டால் அபராதமும் விதிக்கப்படும்” என்றார்.