‘இனி ‘பேனா’ங்கிற பேச்சே இருக்கக் கூடாது!’

By சானா

சென்னை ஒலிம்பியாட் தொடக்க நிகழ்ச்சிகள் தந்த உற்சாகத்தில் சதுரவடிவ அறைக்குள் சதுரங்கம் ஆடிக்கொண்டிருந்தது பறக்கும் பைக். அதுவே கம்ப்யூட்டர் தயாரிப்பு என்பதால், சக கம்ப்யூட்டர் ஒன்றை எதிராளியாகப் பாவித்து அதனுடன் கலகலவென பேசியபடி களமாடிக்கொண்டிருந்தது. மூளையைப் பயன்படுத்தி விளையாடும் ஆட்டம் என்பதால், அதில் பங்கேற்க விரும்பாமல்... ஸாரி... முடியாமல் மூலையில் அமர்ந்து டிவி பார்த்துக்கொண்டிருந்தான் பாச்சா. சின்னத்திரைக்கு வெளியே முஷ்டி தெரியும் வரை கைநீட்டி சீமான் ஆவேசம் காட்டும் காட்சியைப் பார்த்ததும் அசந்துபோனவன் அன்றைக்கு அவர்தான் பட்டியலில் முதலாமவர் என முடிவுசெய்தான்.

“என்னப்பா இது! அடுத்து ஹாலிவுட்தான்னு அசாத்திய தன்னம்பிக்கை காட்டுற அண்ணாச்சிதான் இன்னைக்கு லிஸ்ட்ல ஃபர்ஸ்ட்னு நினைச்சேன். ஆரவாரமா தியேட்டர்களை அதிரவைக்கிற அண்ணாச்சியை விட்டுட்டு, வாரவாரம் சந்திக்கிற சீமானையே லிஸ்ட்ல டிக் பண்றியே?!” என்று சலித்துக்கொண்டது பைக்.

“நல்லா இருக்கு கதை! நாம எப்பவும் அரசியல் தலைவர்கள்கிட்ட தானே ஏட்டிக்குப் பேட்டி எடுப்போம். அண்ணாச்சி இன்னமும் அரசியலுக்கு வரலைல்ல!” என்றான் பாச்சா.

“சரியா போச்சு போ! ‘மக்களுக்கு நல்லது பண்ணுவேன்’னு ‘லெஜெண்ட்’ படம் முழுக்கவும் லெங்க்தியா டயலாக் பேசுறார்ல... அப்ப நிச்சயம் அரசியலுக்கு வர மாட்டாரு பாரு!” என்று வெடித்துச் சிரித்தது பைக்.

சீமான் செய்தியாளர் சந்திப்பு...

கோயபெல்ஸ் தொடங்கி கோர்பச்சேவ் வரை பல தலைவர்கள் பேசாத பேச்சையெல்லாம் அவர்கள் பெயரில் கோர்வையாகச் சேர்த்து சூளுரைகளாகச் சொல்லிக்கொண்டிருந்தார் செந்தமிழன். ஒரு கட்டத்தில் தனக்குத்தானே கேள்வி கேட்டுக்கொண்டு அதற்கு ஆவேசமாகப் பதிலளிக்கத் தொடங்கியதும், செய்தியாளர்கள் சிதறி ஓடத் தொடங்கினர்.

அந்த நேரம் பார்த்து அங்கு ஆஜரான பாச்சா, “திமுக, பாஜகன்னு சின்ன வட்டத்துல அரசியல் எதிரிகளை அடிச்சு நொறுக்கிட்டு இருந்தீங்க... இப்ப பாட்டாளி மக்கள் கட்சிகிட்டே பகைமையை வளர்த்து அடுத்த லெவல்ல போய்ட்டீங்க போல!” என்று பேட்டியை ஆரம்பித்தான்.

சிவந்த கண்களுடன் அவனைப் பார்த்த சீமான், “முதல் குரங்கு தமிழ்க் குரங்குன்னு முழுப் பொய் சொல்ற முதல்வர்தான்பா என் முதல் எதிரி. மத்தபடி எல்லா கட்சிகளும் எங்களுக்கு அங்காளி பங்காளிதான். அப்பப்ப மோதல் வரும். அதையெல்லாம் தம்பிங்க பார்த்துக்குவாங்க” என்றார்.

“ம்க்கும்! இப்படி தினப்படி திட்டித் தீர்த்தாலும் பொட்டிப் பாம்பா கிடக்கிற திமுக இல்லை நாங்கன்னு பாமககாரங்க பயங்கரமா பதிலடி கொடுத்திருக்காங்க. நீங்க என்னடான்னா பழையபடி பாச டயலாக் பேசிட்டு இருக்கீங்க!” என்றான் பாச்சா.

“இதெல்லாம் போர்த் தந்திரம்யா. உதிரியா இருந்தாலும் எதிரின்னு வந்துட்டா இறங்கிப் பேசிடணும். சட்டை செய்யலைன்னா அப்புறம் சட்டையை மடிச்சிக்க வேண்டியதுதான்!” என்று சகஜமானார் சீமான்.

“அதெல்லாம் சரி சார், எதிர்க்கட்சியா இருந்தப்ப பிரதமர் மோடியைக் கண்டிச்சு கறுப்புக் கொடி காட்டுன திமுக இப்ப ஏன் காட்டலைன்னு கண்டிஷனா கேட்டிருக்கீங்கள்ல...” என்று பாச்சா கேட்டதும், ‘ஆமா... அதுக்கு?!’ என்பது போல சட்டையை மடித்தார் சீமான்.

“அட அதை விடுங்க. சண்டைக்குப் போற மாதிரியே சட்டையை டீல் பண்றீங்களே” என்று சமாளித்த பாச்சா, “உங்க கட்சிக்காரங்களே ‘கோ பேக் மோடி’ கோஷம் போட மாட்டேங்குறாங்க. நீங்க இப்பவும் அப்பவும் எப்பவும்(!) எதிர்க்கட்சிதானே! இந்த தடவை நீங்க ஏன் கறுப்புக் கொடி காட்டலை?” என்று கேட்டான்.

சீரியஸாகச் சிந்தனைவயப்பட்ட சீமான், “நாங்க எதிர்ப்பு காட்டலைன்னு யாருப்பா உனக்குச் சொன்னது? நான், என் தம்பிகள், சித்தப்பா, பெரியப்பா மற்றும் உறவினர்கள் எல்லாரும் கறுப்புதானே... அது போதாதுன்னு அப்பப்ப கறுப்புச் சட்டையும் போட்டு கலக்கிட்டு இருக்கோம். அதனால நாங்க எப்பவுமே மோடிக்கு கருத்தா கறுப்புக்கொடி காட்டிக்கிட்டே இருக்கோம். திமுகதான் தெம்பு இல்லாம திக்குமுக்காடிக்கிட்டு இருக்கு” என்றார்.

“நல்ல பாய்ன்ட் சார். நோட் பண்ணிக்க பேனா கொண்டுவர மறந்துட்டேன். பேனா கிடைக்கும்ங்களா?” என்று பணிவுடன் கேட்டான் பாச்சா.

“நல்லா கேட்டுக்க! கலைஞருக்குக் கடலுக்குள்ள சிலைன்னு கடுப்பைக் கிளப்பிட்டார் ஸ்டாலின். அதுவும் அரசு செலவுல பேனா சிலை வைக்கிறேன்னு வீணா வீம்பு பண்றார்... என் முன்னாடி இனி ‘பேனா’ங்கிற பேச்சே எடுக்கக் கூடாது” என்று சீறினார் சீமான்.

“அதுசரி, நீங்க முதல்வரானா... அதாவது ஆனா... கடலுக்கு நடுவுல முப்பாட்டன் முருகனுக்கு முழு உருவச் சிலை வைப்பேன்னு அறிவிக்கத்தானே போறீங்க... அப்போ பார்ப்போம்!” என்றான் பாச்சா.

அதைக் கேட்டு உற்சாகமடைந்த தம்பிகள், “அடுத்த முதல்வர் அண்ணன் சீமான்!” ஆனந்த முழக்கமிடத் தொடங்கினர்.

அந்த நம்பிக்கையைக் குலைக்க விரும்பாமல் அங்கிருந்து அகன்றான் பாச்சா.

அடுத்து ஜெயக்குமார்.

அரசுக்கு எதிரான ஆர்ப்பாட்டத்தில் கலந்துகொண்ட மகிழ்ச்சியில் வீட்டில் ஸ்டூல் போட்டு அமர்ந்து ஸ்மூலில் ‘ட்விங்கிள் ட்விங்கிள் லிட்டில் ஸ்டார்’ பாடிக்கொண்டிருந்தார் முன்னாள் அமைச்சர்.

“என்ன சார், மைக் கிடைச்சா, ஒண்ணு ‘வாத்தியார்’ பாட்டு பாடுறீங்க... இல்லைன்னா ஸ்டூடன்ட் மாதிரி ரைம்ஸ் பாடுறீங்க. ஈபிஎஸ்சுக்கு சிஷ்யனா இருக்கிறதைவிட பேசாம டிஎம்எஸ்சுக்கு சிஷ்யனா இருந்திருந்தீங்கன்னா இளையராஜாவுக்குப் பதிலா நீங்க நியமன எம்பி-யா ஆகியிருக்கலாமே?!” என்றான் பாச்சா.

அதைப் பா(ரா)ட்டாகவே எடுத்துக்கொண்ட ஜெயக்குமார், “ரொம்ப நன்றிப்பா. ஆளுங்கட்சியா இருந்ததைவிட எதிர்க்கட்சியாத்தான் ரொம்ப பிஸியா இருக்கோம். அதனால அப்பப்ப ரிலாக்சேஷன் தேவைப்படுது. அதான் மைக் கிடைச்சதும், பேசுறதுக்குப் பதிலா பாட ஆரம்பிச்சுடறேன்” என்றார்.

“ஆனா... இது புதுசா இருக்கு சார். நீங்க ரொம்ப கஷ்டப்பட்டு திமுக அரசைத் திட்டுறதுக்குப் பதிலா, நிதானமா ரெண்டு பாட்டை எடுத்து விட்டீங்கன்னா திமுககாரங்க திகைச்சுப் போய்டுவாங்க. நல்ல ஐடியா” என்று சொன்ன பாச்சா, “ஈபிஎஸ் - ஓபிஎஸ் ரெண்டு பேரும் மோடிஜியை நினைச்சுப் பாடுற மாதிரி ஒரு பாட்டைப் பாடி டெடிகேட் பண்ண முடியுமா?” என்று கேட்டான்.

சான்ஸ் கிடைத்த சந்தோஷத்தில் முகம் மலர்ந்த ஜெயக்குமார், “என்ன பாட்டுப்பா?” என்று கேட்டார்.

“ம்ம்ம்... ‘போகுதே... போகுதே... என் பைங்கிளி வானிலே’ அந்தப் பாட்டு சார்!” என்று பாச்சா சொன்னதும், ஜெர்க்கான ஜெயக்குமார் மைக்கை பாச்சாவின் மண்டை மீது ஓங்க... அவன் அங்கிருந்து ஓட்டமெடுத்தான்!

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE