கருச்சிதைவை தடுத்து பிரசவத்துக்கு உதவும் அபூர்வ சிகிச்சை!

By டாக்டர் சசித்ரா தாமோதரன்

கருப்பைவாயில் குறைபாடு ஏற்படுவது எத்தகைய பாதிப்பை ஏற்படுத்துகிறது என்பதை ஏற்கெனவே பேசினோம். இதை ஆரம்பத்திலே கண்டறிய முடியாதா என்றால் முதல் கர்ப்பத்தில் கருச்சிதைவு நிகழ்ந்த பிறகுதான் தெரியவரும் என்பது தான் இதில் வேதனை.

சில சமயங்களில் ஹாலிவுட் நடிகை சோபியா லாரனுக்கு நேர்ந்ததுபோல இரண்டாவது குழந்தைக்கும், அடுத்தடுத்தும் அப்படி நிகழாமல் தடுக்க சிலவற்றை செய்ய முடியும். டெஸ்ட் ட்யூப் குழந்தை போன்ற பிரத்தியேக நிலைகளிலும், கருப்பைவாயின் நீளம் ஸ்கேனிங் மூலமாக 16 வாரங்களுக்குள் அளக்கப்பட்டு, அதன் அளவு 2.5 செ.மீட்டருக்கு குறைவாக இருக்கும்பட்சத்தில் ’செர்வைகல் என்சர்க்ளாஜ்’ (cervical encirclage) எனும் பிரத்தியேகத் தையல் பிறப்புறுப்பு வழியாக கருப்பைவாயில் போடப்படுகிறது. ஒருசிலருக்கு கருப்பைவாய் அதிகளவில் விரிவடைந்திருப்பதை அறிய வரும்போது அவசரகால சிகிச்சையாகவும் இந்த ’எமெர்ஜெசி சர்குளேஜ்’ (Emergency cerclage) மேற்கொள்ளப்படுகிறது.

பொதுவாக, கருத்தரித்த 16 வாரங்கள் முதல் 22 வாரங்களில் செய்யப்படும் இந்த செர்வைகல் என்சர்க்ளாஜ் அறுவை சிகிச்சையில், கர்ப்பிணிப் பெண்ணுக்கு மிதமான மயக்க மருந்து அளிக்கப்பட்டு, 'மெக்டொனால்ட்' அல்லது 'ஷிரோட்கர்' முறையில், கருப்பைவாயில் கரையாத உறுதியான தையல் (prolene/ethilon) போடப்படுகிறது. பொதுவாக இந்த கருப்பைவாய் தையல் 36 வாரங்களுக்குப் பிறகு, அதாவது ஒன்பதாவது மாதத்தின் தொடக்கத்தில் நீக்கப்பட்டு, அதன்பின் அந்தப் பெண் பிரசவத்திற்கு தயார்ப்படுத்தப்படுகிறாள்.

ஆனால், அவ்வாறு போடப்படும் ’மெக்டொனால்ட்’ அல்லது ’ஷிரோட்கர்’ தையல்களும் சிலருக்கு பலனளிக்காமல் போகும் வாய்ப்பும் உள்ளது. அதாவது, செர்வைகல் என்சர்க்ளாஜ் போடப்பட்ட பின்னரும், ஒருசிலரில் பனிக்குட நீர் உடைவதாலும், குறைப்பிரசவத்தினாலும் குழந்தை இழப்பு நிகழ்ந்தால், அடுத்து கருத்தரிக்காத இடைப்பட்ட நாட்களிலோ அல்லது கருத்தரித்த 7 வாரங்களிலோ, abdominal cerclage எனப்படும் வயிற்று வழியாக அல்லது லேப்ராஸ்கோப்பி மூலமாக நிரந்தரமாகப் போடப்படும் தையல்களை மருத்துவர்கள் பரிந்துரைக்கிறார்கள். அதேநேரம் இது நிரந்தரத் தையல் என்பதால், பிரசவத்தின் போது கருப்பை வாய் திறக்க வாய்ப்பில்லை என்பதால் இவர்களுக்கு சிசேரியன் அறுவை சிகிச்சை மூலமாக மட்டுமே பிரசவம் மேற்கொள்ள முடியும் என்பது மட்டும்தான் இதிலுள்ள சிக்கல் எனலாம்.

அடுத்தடுத்து இரு குழந்தைகளை இழந்த சோபியா லாரன் கூட நான்கு வருடங்கள் கழித்து மீண்டும் கருத்தரித்ததுடன், மருத்துவரின் வழிகாட்டலுடன் கருப்பைவாய் தையலுக்குப் பிறகு இரண்டு குழந்தைகளைப் பெற்றெடுத்தார். அதாவது, அடுத்தடுத்து நிகழும் ஐந்தாவது மாதக் கருச்சிதைவைக் கூட, அதற்கான சிகிச்சை மூலமாகத் தடுத்து, நிறைமாதக் குழந்தையை ஒரு பெண் பெற்றெடுக்க உதவுகிறது செர்வைகல் என்சர்க்ளாஜ் எனப்படும் இந்த பிரத்தியேக கருப்பைவாய் தையல்கள்.

உண்மையில் ஹாலிவுட் நடிகை சோஃபியா லாரனுக்கு அப்படி அவரது தொடைத் தசைநாரிலிருந்தே பெறப்பட்ட தசையால் அவருக்கு கருப்பை வாய் தையல் போட்டு, அவருக்கு குழந்தைப்பேறு கிடைக்கச் செய்தவர் நமது நாட்டின் மும்பையைச் சேர்ந்த டாக்டர் வி.என். ஷிரோட்கர். அன்று நமது ஷிரோட்கர் ஆரம்பித்து வைத்த சிறப்பானதொரு சிகிச்சை முறைதான், இன்று உலகெங்கும் உள்ள பல லட்சம் தாய்மார்களுக்குக் குழந்தை பாக்கியம் கிடைக்கச் செய்துள்ளது என்ற நன்றி கலந்த தகவலுடன், அவள் நம்பிக்கைகள் தொடரும்.

கட்டுரையாளர் :மகப்பேறு மருத்துவர், சமூக ஆர்வலர். தொடர்புக்கு: savidhasasi@gmail.com
செர்வைகல் என்சர்க்ளாஜ் எனும் கருப்பைவாய் தையல்

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE