‘பி.எஸ்-1’ பிரபலத்துடன் ஒரு பேட்டி!

By சானா

அன்றைய தின(மு)ம் இளையராஜா பாடல் கேட்டபடி அலுவல்களை ஆரம்பித்தான் பாச்சா. ‘தலையைக் குனியும் தாமரையே...’ என்று காந்தர்வக் குரலில் எஸ்பிபி பாடிக்கொண்டிருக்க, “அரசியல்வாதிகளை ஆயிரம் கேள்வி கேட்டு ஜர்னலிஸ்ட் பேட்டியெடுக்கலாம். அதுக்காண்டி அரசியல்வாதி கொள்கை விளக்கப் பாட்டையெல்லாம் வீட்டுல சவுண்டு வச்சு கேட்கணுமா?” என்று அதட்டியது பறக்கும் பைக். “அடப்பாவிகளா! இசைஞானியை வசைபாடியவங்கள்லாம் சாயங்காலமானா அவரோட சங்கீதத்துல சங்கமமாகிட்டு இருக்காங்க... நீ அவரைக் காவிக் கட்சியில சேர்த்து சீவிவிடுறியே கொம்பை?” என்றான் பாச்சா.

“பின்னே ராஜ்ய சபா நியமன எம்பி-யானா ஆறு மாசத்துல அரசியல் கட்சியில சேர்ந்துதானே ஆகணும்? ‘ராஜ்யா’ சாருக்கும் அதானே ரூல்ஸ்?” என்று இம்சித்தது பைக். “அது கட்டாயம் இல்லை தம்பு. விரும்பினா சேரலாம்னுதான் விதி சொல்லுது. இனி அவர் பாடு” என்று பாச்சா சொல்ல, “நீ அடுத்த பாட்டைப் போடு” என்று சிரித்த பைக், “அப்ப இன்னைக்கு முதல் பேட்டி இளையராஜாவோடயா?” என்று சீண்டியது.

“ஏம்பா? அவர்கிட்ட இசை பத்திக் கேட்கவே சப்தஸ்வரங்களும்... ஸாரி நாடியும் ஒடுங்கிடும். இதுல அரசியல் வேறயா? இன்னைக்கு லிஸ்ட்ல முதல்ல இருக்கிறது பிஎஸ்-1” என்றான் பாச்சா.

“அப்படீன்னா பொன்னியின் செல்வன் டீமா?” என்று ஆவலோடு கிளம்பியது பைக்.

‘வெற்றி வேல்! வீர வேல்’ என வீர முழக்கங்கள் ஒலிக்க வெறித்தனமாக வராந்தாவில் அலைந்துகொண்டிருந்தார் பிஎஸ்-1.

“இந்தக் கட்சியும்... சின்னமும்... களேபரங்களும் எல்லாமே ‘அதை’ மறைக்கத்தான்...” என்று போர்க்களத்தில் பிரேக் எடுத்த பொன்னியின் செல்வன் போல் பொங்கிக்கொண்டிருந்தார்... எடப்பாடி பழனிசாமி.

பாச்சாவைப் படு கடுப்புடன் பார்த்தது பைக். “ஆமா... இவர் இ-பொன்னியின் செல்வன். அவர் ஓ-பொன்னியின் செல்வன்” என்று கண்ணடித்தான் பாச்சா. “ரொம்ப சிரிக்காதே! பொதுச் செயலாளரா ஆகிறவர்தான் பொ...செ” என்று பழிப்பு காட்டியது பைக்.

வெளியே வீர முழக்கமிட்டாலும், உள்ளுக்குள்ளே உதறலுடன் இருந்த தொண்டர் படையினர் எடப்பாடியைச் சுற்றி நின்று ஏதோ பேசிக்கொண்டிருந்தனர்.

“என்ன சார்... தினம் தினம் படையெடுத்து ‘சோதனை’ செய்ற திராவிட முன்னேற்றக் கழகப் படையை முறியடிக்க தீவிரத் திட்டமா?” என்றான் பாச்சா.

போர்க்குணத்தைப் படிப்படியாகக் கைவிட்டுவிட்டு பொறுமை குணத்துக்கு வந்த எடப்பாடி, “எதுக்கும் படியாத எங்களைப் பழிவாங்குது இந்த விடியா அரசு. 2024-ல வேர்ல்டு முழுக்க ஒரே தேர்தல் நடத்த மோடி அரசு முடிவு பண்ணியிருக்கு. அப்ப இந்த விடியா அரசு முடிவுக்கு வரும்.

அதனால இத்தோட எல்லாத்தையும் நிறுத்திக்கிடணும்னு எங்க கட்சி சார்புல எச்சரிக்கை விடுக்கிறேன்” என்றார்.

“ம்க்கும். அதிமுக அராஜகக் கைகள்ல இருக்குன்னு சசிகலாவே(!) சங்கடப்படுற அளவுக்கு அரசியல் பண்ணிட்டு இருக்கீங்க... இதுல அடுத்த கட்சி அராஜகம் பண்ணுதுன்னு சொன்னா கே.பி.முனுசாமியே கெக்கெபிக்கேன்னு சிரிப்பார். சரி, பாண்டியர் - சோழர் மாதிரி பகையை ஏன் வளர்த்துக்கிட்டே போறீங்க? மண்டையை உடைச்சிக்கிற அளவுக்குத் தொண்டர்கள் சண்டை போட்டுக்கிட்டா... சிண்டு முடிஞ்சுவிட ரெண்டு பக்கமும் ஆள் வந்துக்கிட்டே இருக்குமே! ரெண்டு பி.எஸ்சும் எல்லாத்தையும் மறந்து ஒண்ணா சேர்ந்தா எம்கேஎஸ் அரசுக்கு இன்னும் நெருக்கடி கொடுக்கலாம்ல?” என்றான் பாச்சா.

“அடப் போப்பா! ‘கஷ்டப்பட்டு’ வாங்கின கவர்மென்ட் பதவிதான் போச்சு... இனி யார்கிட்டயும் ‘கைகட்டி’ நிக்க வேணாம்னு... கட்சியைக் காப்பாத்த முன்வந்தா, அதுக்கும் கேஸ் போட்டு கட்டையப் போடுறாங்க. ஒரு பழுத்த அரசியல்வாதி வேற எப்படித்தான்யா பாலிடிக்ஸ் பண்றது?” என்று எரிச்சல் பட்டார் எடப்பாடி.

“அது சரி. ஒற்றைத் தலைமை... ஒற்றைத் தலைமைன்னு ஓடிக்கிட்டே இருக்கீங்க... இப்ப கோடநாடு கேஸ் வேற கூடுதலா ஓட வச்சுடும் போல. பேசாம அண்ணாமலைகிட்ட அதிமுகவை ஒப்படைச்சிட்டா அவர் தாமரை இலைத் தண்ணி மாதிரி பட்டும்படாமலும் பார்ட்டியைப் பார்த்துக்குவார்ல?” என்று பாச்சா கேட்டதும், பகைநாட்டு ஒற்றனாகப் பாச்சாவைப் பாவித்து அவன் மீது பாயத் தயாரானார்கள் பழனிசாமியின் தொண்டர்கள்.

எடப்பாடி அண்ட் கோவிடமிருந்து எஸ்கேப்பான பாச்சா, ‘சின்னவர்’ உதயநிதி இல்லத்தில் என்ட்ரி கொடுத்தான்.

“புரிஞ்சிக்கப்பா! ரிலீசுக்கு ரெடியா இருக்கிற படங்களோட தயாரிப்பாளர்கள்கிட்ட பேசணும்னுதான் சொல்லியிருந்தேன். ரிலீஸாகப் போற ஜெயில் கைதிகள்கிட்ட எல்லாம் போய் டீல் பேசினா என்னப்பா அர்த்தம்?” என்று செல்போனிலேயே ரெய்டு விட்டுக்கொண்டிருந்தார் ரெட் ஜெயன்ட் அதிபர்.

“அது சரி! விட்டா ரீல்ஸ்ல ரிலீஸாகிற வீடியோவுக்கெல்லாம் விநியோக உரிமை வாங்குவார்னு சொல்ற அளவுக்கு டிஸ்ட்ரப் பண்ணி டிஸ்ட்ரிபியூஷன் ரைட்ஸ் வாங்கிட்டு இருக்கீங்கன்னு இண்டஸ்ட்ரியே இம்சைப்படுது... அப்புறம் இப்படியெல்லாம் கன்ஃபியூஷன் நடக்காம இருந்தாத்தானே ஆச்சரியம்?” என்றான் பாச்சா.

“தம்பி! அன்புக்குத்தான் நான் அடிமை. வம்புக்கு வந்து வாங்கிக் கட்டிக்காதே. ஏற்கெனவே என்னை ‘சின்னவர்’னு வம்படியா கூப்பிடச் சொன்னதா கோரஸா கொஸ்டின் பண்ணிட்டு இருக்காங்க... இதுல நீ சினிமா சிக்கல்ல கோர்த்து விட்டுட்டுப் போயிடாதே!” என்று செல்லமாகச் சீறினார் சின்ன... ஸாரி சேப்பாக்கம் எம்எல்ஏ.

“அதுசரி. பார்த்திபன் உங்களை பாசமா ‘சின்னவர்’னு கூப்பிடலாம். பத்திரிகைக்காரங்க கூப்பிடக் கூடாதா?” என்று முணுமுணுத்த பாச்சா, “அரசியல்ல செய்ய முடியாத சாதனையை எல்லாம் சினிமாவுல செஞ்சு காட்டுறீங்க போல... ‘விக்ரம்’ புகழ் கமல்ஹாசன் ‘நெஞ்சுக்கு நீதி’யைப் பாராட்டி உங்களுக்கு நினைவுப் பரிசெல்லாம் கொடுத்திருக்காராமே?” என்று கேட்ட பாச்சா, “படத்தை அவர் பார்த்துட்டாராமா?” என்று துணைக் கேள்வியைப் போட்டதும் துணுக்குற்ற உதயநிதி, “ஏற்கெனவே சிவசேனா ஷிண்டேயைச் சொல்லி சிண்டு முடியிற வேலையில ‘சிலர்’ ஈடுபட்டதை நினைச்சு சிரிச்சிட்டு இருக்கேன். நீ வேற, வந்ததுல இருந்து காமெடி பண்ணிக்கிட்டு இருக்கே...” என்று சிவந்த விழியை மறைக்கும் அளவுக்குக் கண்களைச் சுருக்கி கலகலவெனச் சிரித்தார்.

“அதுசரி! இப்படிச் சிரிச்சு சமாளிக்கலைன்னா சினிமா, அரசியல்னு ரெண்டு துறையிலயும் சிறப்பா செயல்பட முடியுமா?” என்று கேட்டு உதயநிதியை உள்ளங்குளிரச் செய்த பாச்சா, “உங்க அடுத்த படத்துக்கு ‘கழகத் தலைவன்’ன்னு டைட்டிலாமே? வில்லன் யாரு... விஜய் சேதுபதியா... இன்பநிதியா?” என்று கேட்க, உதயநிதி உஷ்ணமடையத் தொடங்கினார்.

உடனடியாக அங்கிருந்து வெளியேறிய பாச்சாவிடம், “அடுத்து அண்ணாமலையா?” என்று கேட்டது பைக். “ராதாரவி ஜி(!) பேசுன பேச்சுக்கு அந்த ரெண்டு விஐபி-க்களைச் சந்திக்க அண்ணாமலை ஜி டைம் கேட்டிருக்காராம்பா. அடுத்த வாரம் பார்த்துக்கலாம்” என்றான் பாச்சா!

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE