ஒரே நாளில் 6,000 மரக்கன்றுகளை நட்ட சிங்காரம்பாளையம் பள்ளி மாணவர்கள்

By டி.ஜி.ரகுபதி

கோவை: கோவை மாவட்டம் காரமடை ஊராட்சி ஒன்றியத்துக்கு உட்பட்ட சிக்காரம்பாளையம் கிராமத்தில் சிக்காரம்பாளையம் ஊராட்சி மற்றும் ரோட்டரி சங்கம் சார்பில், பசுமை வனம் என்ற தலைப்பில், 6 ஆயிரம் மரக்கன்றுகள் நடும் நிகழ்ச்சி இன்று (ஜூலை3) நடந்தது.

இந்த நிகழ்வுக்கு சிக்காரம்பாளையம் ஊராட்சி மன்ற தலைவர் ஞானசேகரன் தலைமை வகித்தார். மேட்டுப்பாளையம் அதிமுக சட்டப்பேரவை உறுப்பினர் ஏ.கே.செல்வராஜ், அரசு மற்றும் தனியார் பள்ளிகளின் மாணவ - மாணவியர், காரமடை ரோட்டரி சங்க உறுப்பினர்கள் உள்ளிட்டோர் என 200-க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டு 6 ஆயிரம் மரக்கன்றுகளை ஒரே நேரத்தில் நடவு செய்தனர். வேம்பு, அரசன், புங்கன், பூவரசன உள்ளிட்ட 15-க்கும் மேற்பட்ட, மண்ணுக்கு ஏற்ற பாரம்பரிய மர வகைகள் நடவு செய்யப்பட்டன.

இது குறித்து சிக்காரம்பாளையம் ஊராட்சி மன்ற தலைவர் ஞானசேகரன் கூறும்போது, "சுற்றுச்சூழலை மேம்படுத்தும் முயற்சியாக பசுமை வனம் என்ற பெயரில், இந்த மரம் நடவு செய்யும் பணிகள் மேற்கொள்ளப் பட்டது. இன்று நடப்பட்ட மரக்கன்றுகளை முறையாக வளர்த்து பராமரிக்க அனைத்து ஏற்பாடுகளும் செய்யப்பட்டுள்ளது. இதில்லாமல் ஏற்கெனவே எங்கள் ஊராட்சி சார்பில் மரக்கன்று நாற்றுகள் உற்பத்தி செய்யப்பட்டு பொதுமக்களுக்கு இலவசமாக வழங்கப்பட்டு வருகிறது." என்றார்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE