திருச்செந்தூர் கடற்கரையில் கரை ஒதுங்கும் ஜெல்லி மீன்கள் - அலர்ஜி ஏற்படுவதாக தகவல்

By KU BUREAU

தூத்துக்குடி: திருச்செந்தூர் கோயில் கடற்கரை பகுதியில் கரை ஒதுங்கும் ஜெல்லி மீன்களால் அலர்ஜி உள்ளிட்ட பாதிப்புகள் ஏற்படுவதாக பக்தர்கள் தெரிவித்துள்ளனர்.

திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோயில் கடற்கரையில் தினமும் ஆயிரக்கணக்கான பக்தர்கள் புனித நீராடி சுவாமி தரிசனம் செய்து வருகின்றனர். கடந்த சில நாட்களாக கோயில் கடற்கரையில் அதிகளவில் கண்ணாடி போன்ற ஜெல்லி மீன்கள் கரை ஒதுங்குவதாகவும், இதனால் பக்தர்களுக்கு தோல் பாதிப்பு ஏற்படுவதாக கூறப்படுகிறது.

அலர்ஜி, அரிப்பு உள்ளிட்ட பல்வேறு சரும பாதிப்புகள் ஏற்படுவதால் பக்தர்கள் மருத்துவமனையில் சிகிச்சை பெறும் நிலை ஏற்படுகிறது. இந்நிலையில் கரை ஒதுங்கிய ஜெல்லி மீன்களை கோயில் இணை ஆணையர் கார்த்திக் கவனத்துக்கு, கோயில் கடலோர பாதுகாப்பு குழுவினர் நேற்று கொண்டு வந்தனர்.

இதுகுறித்து அவர்கள் கூறும்போது, “திருச்செந்தூர் கடலில் அதிகளவில் ஜெல்லி மீன்கள் கரை ஒதுங்குகின்றன. இதனால் பக்தர்களுக்கு தோல் அலர்ஜி மற்றும் அரிப்பு ஏற்படுகிறது. பங்குனி, சித்திரை, வைகாசி ஆகிய மாதங்களில் இவை அதிகம் கரைஒதுங்கும். சிவப்பு நிறத்தில் இருக்கும் ஜெல்லி மீன்கள் அதிக விஷத்தன்மை கொண்டவை. இவை உடலில் படும்போது தோல் அரிப்பு ஏற்படும்” என்றனர்.

கோயில் இணை ஆணையர் மு.கார்த்திக் கூறும்போது, “ஜெல்லி மீனின் தன்மை குறித்து பக்தர்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தப்படும். ஜெல்லி வகை மீன்களால் ஏற்படும் பாதிப்புகளை கட்டுப்படுத்த கோயில் வளாகத்தில் உள்ள முதலுதவி சிகிச்சை மையத்தில் தேவையான மருத்துவ சிகிச்சை அளிக்க ஏற்பாடு செய்யப்படும். கடற்கரையில் எச்சரிக்கை போர்டு வைக்கப்படும்” என்றார் அவர்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE