‘எங்கள மாதிரி தனிச்சு நின்னு தோத்துக்காட்ட முடியுமா?’

By சானா

அன்று காலை பாச்சா துயிலெழுந்தபோது ஆச்சரியம் அவனுக்காக அவன் படுக்கைக்குப் பக்கத்திலேயே காத்திருந்தது. அவனைச் சுற்றி நட்சத்திரங்கள், கருந்துளைகள், பால்வீதி, மோர் தெரு என ஏகப்பட்ட மோஸ்தர்களுடனான ஒரு எல்லையில்லா யுனிவெர்ஸே காட்சியளித்தது. அப்புறம்தான் அவனுக்குப் புலப்பட்டது ஹோலோகிராமில் உருவாக்கி பைக் செய்த குசும்பு அது என. “ஏம்பா... என்னை என்ன லோகேஷ்னு நினைச்சியா? லோ-கேஷ் ஆசாமி இருக்கிற ரூம்ல ‘விக்ரம்’ ரேஞ்சுக்கு எதுக்குப்பா விளம்பரம்?” என்று கண்டனக் குரல் எழுப்பினான் பாச்சா.

“எல்லாம் சிம்பாலிக்கா போட்ட செட் தாம்பா. நீ எடுக்கிற ஒவ்வொரு பேட்டியிலயும் மல்ட்டி யுனிவெர்ஸ் பாணியில அண்ணாமலையும் சீமானும் அடிக்கடி வர்றாங்கள்ல! அதை உனக்கே நினைவுபடுத்தலாம்னு ஒரு ஐடியா. அதான்...” என்று இழுத்தது.

“என்னப்பா பண்றது! வாராவாரம் வம்படியாப் பேசி வகைதொகையா கன்டென்ட் கொடுக்கிறதுல இவங்களை அடிச்சிக்க யார் இருக்கா?” என்றபடி கிளம்பினான் பாச்சா.

சீமான் அலுவலகம்.

உள்ளே நுழைந்த பாச்சா ஒரு கணம் மலைத்து நின்றான். மல்ட்டி யுனிவெர்ஸ் கணக்காக தேவலோக எஃபெக்ட்டில் செட் போட்டு தெறிக்க விட்டிருந்தார்கள் தம்பிகள். சுற்றிலும் பக்திப் பரவசமாக தம்பிகள் நின்றிருக்க நடுநாயகமாக கிருஷ்ணர் கெட்டப்பில் புஹா புன்னகையோடு அமர்ந்திருந்தார் சீமான்.

“என்ன பார்க்கிறாய்! இதுவும் ஒரு அவதாரம்தான். நான் இப்போது கிருஷ்ண பரமாத்மாவின் பேரன். வா குழந்தாய்!” என்று பாச்சாவே நாணும்படி பாசமாக அழைத்தார் சீமான்.

“என்ன சார், பிரஸ் மீட்ல ஒரு பேச்சுக்குச் சொன்னீங்கன்னு பார்த்தா நெஜமாவே அரிதாரம் பூசி அவதாரம் எடுத்துருக்கீங்க” என்று வியந்த பாச்சா அடுத்த கணமே, “எல்லாம் சரி, கிருஷ்ணர் பேரன்னுதானே சொன்னீங்க... ஆனா நீங்களே கிருஷ்ணராகிருக்கீங்க. லாஜிக் லங்ஸுல உதைக்குதே?!” என்றான்.

பட்டென தனது பாணிக்கு மாறிய சீமான், “பாலிடிக்ஸ்ல பல அவதாரம் எடுத்தாத்தான் எல்லா டைப் எதிரிகளுக்கும் டஃப் கொடுக்க முடியும். இதெல்லாம் எங்க அய்யா ஏ.பி.நாகராஜன் படங்கள்ல கத்துக்கிட்டது. சும்மா எதையாச்சும் பேசிட்டு இருக்கக் கூடாது. நீ வந்த விஷயத்தைப் பேசு” என்றார்.

‘அது சரி! சிச்சுவேஷனுக்கு ஏத்த மாதிரி சீன் மாத்துனாத்தானே அது சீமான்’ என்று மைண்ட் வாய்ஸில் நினைத்துக்கொண்ட பாச்சா, “அநியாயமும் அக்கிரமும் உச்சத்துக்கு வரும்போதுதான் உங்களை மக்கள் தேடுவாங்கன்னு சொல்லிருக்கீங்களே... அப்படின்னா இப்ப இங்கே அமைதி தவழுதுன்னு எடுத்துக்கலாமா?” என்றான்.

“அட அதெல்லாம் எலெக்‌ஷன் டயத்துல எமோஷனலா எடுபடும்னு இப்பவே பேசி வைக்கிறதுப்பா. அண்ணன் கிட்ட ஆயிரக்கணக்குல கதை இருக்கு. ஒவ்வொண்ணா எடுத்துவிட்டா ஒரு கட்சியும் இங்கே ஜெயிக்க முடியாது” என்று சிரித்தார் சீமான்.

“திடீர்னு பார்த்தா, ‘அண்ணாமலை ஒரு கல்வியாளர்... அமைதியின் திருவுருவம்’னு சர்ட்டிஃபிகேட் கொடுக்குறீங்க. திடீர்னு திமுகவைக் கேள்வி கேட்க அண்ணாமலை யார்னு கேட்டு திகைக்க வைக்கிறீங்க. ரெண்டு பேரும் ஒத்துமையா நின்னாத்தானே திமுக அரசைத் திணறடிக்க முடியும்?” என்றான் பாச்சா.

“நல்லா இருக்கு கதை! தமிழ்நாட்டுல பாஜக ஒரு குட்டைச் செடிப்பா. நாங்க ஆகாசத்தைத் தொட்டு நிக்கிற ஆலமரம். உயரம் மேட்சாகாது தம்பி. எங்கள மாதிரி தனிச்சு நின்னு தோத்துக் காட்டச் சொல்லு அவங்ககிட்ட” என்றார் சீமான்.

“ஆனா, அவங்க அடுத்தடுத்து ஜெயிச்சுட்டுத்தானே இருக்காங்க...” என்று பாச்சா பேசப் பேச, கண்ணை மூடி விரலை மூக்குக்கு முன்னால் நீட்டி, “ஸ்ஸ்ஸ்...” என்று சீமான் சீறினார்.

‘அய்யய்யோ... அவர் மாதிரியே இவரும் கோபப்பட்டுட்டாரே’ என்று பம்மிய பாச்சா, பேட்டியை முடித்துக்கொள்ள ஆயத்தமானான்.

சட்டென கண் விழித்த சீமான், “இது சும்மா ரிலாக்ஸுக்காகச் செய்ற யோகா தம்பி. நீ கன்டினியூ பண்ணு” என்றார்.

“இல்லை சார். இன்னைக்கு இது போதும்” என்று சொல்லிவிட்டு அங்கிருந்து எஸ்கேப்பானான்.

அடுத்து தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை.

காலையில் கத்திப்பாரா, மதியம் மயிலாப்பூர், மாலையில் மந்தைவெளி என எதுகை மோனையில் அடங்கும் எல்லா இடங்களுக்கும் சென்று எதையாவது பேசி அரசியலில் கலக்கும் அண்ணாமலை அன்று ஆழ்ந்த அமைதியில் இருந்தார்.

“ச்சே... என்னதான் எங்களுக்கு எதிரா அரசியல் பேசினாலும், எதிர்த்துக் கேள்வி கேட்டா உடனே எக்ஸிட் ஆகிடுவார் கமல் ஜி. அப்பேர்பட்ட கலைஞர் எடுத்த ‘மருதநாயகம்’ படம் ஃப்ளாப் ஆயிருக்கக் கூடாது. நானும் ஒரு சினிமா ஸ்டார்ங்கிற முறையில எனக்கு வருத்தமா இருக்குங்கண்ணா” என்று பக்கத்தில் இருந்த பாஜகவினரிடம் பாந்தமாகப் பேசிக்கொண்டிருந்தார்.

அதைக் கேட்டவாறு அங்கே ஆஜரான பாச்சா, “நல்லா இருக்கு சார், ஆரோக்கியமா இருக்கிற ஆளுக்கு ஆர்ஐபி போடுறீங்க... இப்போ கம்ப்ளீட்டே ஆகாத படத்தோட கலெக்‌ஷன் பத்திக் கவலைப்பட ஆரம்பிச்சுட்டீங்களா?” என்று கேட்டான்.

“பத்திரிகை சகோதரருக்கு பாரதிய ஜனதா கட்சி சார்பாக வணக்கம்ங்க. கேள்வியை நீங்க கேட்கிறீங்களா... இல்லை நான் கேட்கட்டுமா?” என்று ‘திருவிளையாடல்’ பாணியில் கேட்டு திகைக்கவைத்தார் திமுகவின் சிம்ம சொப்பனமாம் அண்ணாமலை.

“அதான் வினாடிக்கு ஒரு வினா கேட்டு கவர்மென்டையே கலகலக்க வைக்கிறீங்களே... இங்கேயாச்சும் நானே கேள்வி கேட்கிறேன்” என்ற பாச்சா, “டெண்டர்களை வச்சே டிஎம்கே அரசுக்கு டென்ஷனைக் கொடுக்குறீங்களே... எப்படி எல்லா விவரத்தையும் விவரமா கலெக்ட் பண்றீங்க? எல்லா இடத்துலயும் புகுந்துட முடியுதுன்னா நீங்களும் சீமான் மாதிரி ஒரு அவதாரமா?” என்று சீரியஸாகவே கேட்டான்.

“அதுக்கெல்லாம் க்ரூப் சி, க்ரூப் டின்னு ஏகப்பட்ட க்ரூப் இருக்கு. அநீதியைத் தட்டிக் கேட்க அவதாரம் தேவையில்லைங்கண்ணா. இந்த அண்ணாமலை போதும்” என்று அவர் சொன்னதும் அருகில் இருந்தவர்கள் ஆழ்ந்த மகிழ்ச்சியுடன் ஆரவாரம் செய்தனர்.

“அதெல்லாம் சரிதான். ஆனா, பாஜகவுக்கு எதிரா அதிமுகவுல யார் பேசினாலும் அது அவங்க சொந்தக் கருத்துன்னு பாஜககிட்ட பாசமா இருக்கிற பழனிசாமி மேல ஊழல் குற்றச்சாட்டு சுமத்தியிருக்கீங்களே... இது அடுக்குமா?” என்றான் பாச்சா.

அருகில் இருந்த நிர்வாகி பக்கம் திரும்பிய அண்ணாமலை, “எந்த வருஷம் நடந்த ஊழல்னு நான் சொன்னேன்?” என்று விசாரித்தார். “2019-ன்னு சொல்லிருக்கீங்க” என்று அவர் சொன்ன பதிலைக் கேட்டவாறு பாச்சா பக்கம் திரும்பிய அண்ணாமலை, “அதை 2022-ன்னு மாத்திக்கோங்க. அதிமுகன்னு சொல்லியிருந்தா அதை திமுகன்னு மாத்திக்கோங்க. இதெல்லாம் ஒரு விஷயமா? நாம பேசுறதுதாங்கண்ணா ஃபேக்ட்டு” என்றவர், தொண்டையைச் செருமியபடி, “அடுத்த நாலு வருஷத்துக்குத் திமுக அமைச்சர்கள் நானூறு(!) பேர் மேலயும் ஊழல் பட்டியலை வெளியிடப் போறோம்ங்கண்ணா. அப்புறம் தமிழ்நாட்டுல உள்ள ஐயாயிரம்(!) தொகுதியிலயும் தாமரை சின்னத்துக்குத்தான் மக்கள் ஓட்டு போடுவாங்க” என்றார்.

“என்ன சார், இப்படி தப்புத் தப்பா தகவல் சொல்றீங்க?” என்று பாச்சா படக்கென கேட்க, பக்கத்தில் இருந்த பாஜகவினர் பாயத் தயாரானார்கள்.

பயத்தை வெளிக்காட்டிக்கொள்ளாத பாச்சா, “அடுத்த வருஷம்தான் திமுக ஆட்சியிலயே இருக்காதுன்னு ஈபிஎஸ் ஆரூடம் சொல்லியிருக்கார். அப்ப நீங்க சொன்னது தப்புதானே?” என்று கேட்க, அங்கு மீண்டும் ஆழ்ந்த மகிழ்ச்சி ஆரவாரம் எழுந்தது!

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE