தொழில் அல்லது வியாபாரம் தொடங்க விரும்புபவரா நீங்கள்? உங்களுக்குச் சில யோசனைகள்!

By ஆர்.என்.சர்மா

கோவிட்-19 பெருந்தொற்றுக்குப் பிறகு உலகம் மாறிக்கொண்டிருக்கிறது. அதாவது உலக மக்கள் தங்களுடைய தொழில், வாழ்க்கை, குடும்பம் குறித்து மறுபரிசீலனை செய்யத் தொடங்கியிருக்கிறார்கள். இதுவரை லட்சியம் இல்லாமல் வாழ்ந்தவர்கள்கூட இனி எப்படிப்பட்ட வேலைக்குச் செல்ல வேண்டும், எப்படி சேமிக்க வேண்டும், எதையெல்லாம் தவிர்க்க வேண்டும் என்றெல்லாம் மனதளவில் தயார் செய்துகொண்டுவிட்டார்கள். உணவு, உடை, இருப்பிடம் இம்மூன்றில் இருப்பிடத்துக்காக லட்சக்கணக்கில் கடன் வாங்கிவிட்டு ஆயிரக்கணக்கில் தவணை கட்டிக்கொண்டு அத்தியாவசியச் செலவுகளைக் கட்டுப்படுத்த முடியாமல் திணறக் கூடாது என்ற முடிவிலேயே பலரும் தங்களுடைய பெருநகர வாழ்க்கையைச் சிறு நகரங்களுக்கோ, சொந்த ஊர்களுக்கோ மாற்றிக்கொண்டிருக்கிறார்கள்.

கிராமங்களில் இதுநாள் வரை அலட்சியப்படுத்திவந்த மஞ்சம்புல் கூரை வேய்ந்த அல்லது ஆஸ்பெஸ்டாஸ் கூரை போட்ட வீடுகளைத் திருத்தி நல்ல கட்டிடங்களாக மாற்றிக்கொண்டிருக்கிறார்கள். சதா ஹோட்டல்களிலும் துரித உணவகங்களில் சாப்பிட்டுவந்ததைக் குறைத்துக்கொண்டு நல்ல சத்துள்ள, காய்கறிகள் அடங்கிய பாரம்பரிய உணவுக்கு மாறுகிறார்கள். மருத்துவ இன்சூரன்ஸ், ஆயுள் இன்சூரன்ஸின் அவசியத்தை உணர்ந்திருக்கிறார்கள். நிறைய பேர் வங்கி சேமிப்புக் கணக்குகளுக்கு வாரிசுதாரர்களை நியமித்துவிட்டனர். இவையெல்லாம் காலம் உணர்த்திய பாடங்கள்.

தனியார் நிறுவனங்களில் – ஐ.டி. உட்பட – வேலை செய்தவர்கள், நெருக்கடி நேரத்தில் ஊதியத்தைக் குறைத்தோ, வேலையிலிருந்து நீக்கியோ நிர்வாகம் செய்த அதிரடியான நடவடிக்கைக்குப் பிறகு தங்களுடைய வேலையின் நிலைமை குறித்தே ஆராய்கிறார்கள். கிராமங்களுக்குத் திரும்பியவர்களில் பலர் வீட்டிலிருந்தே வேலை என்பதால், ஒரே சமயத்தில் இரண்டு வேலைகளைச் செய்யப் பழகி வருகின்றனர். குடும்பங்களில் பாரம்பரியமாக செய்த விவசாயம், வியாபாரம் அல்லது சிறு தொழில்களைத் திருத்தமாகச் செய்யத் தொடங்குகின்றனர்.

இப்போது பள்ளி, கல்லூரி ஆண்டுத் தேர்வுகள் முடிந்து அல்லது முடியப்போகும் நிலையில் இருக்கும் பருவம். பள்ளிக்கூட மாணவர்கள் அடுத்து கல்லூரிகளில் சேர முக்கியத்துவம் தர வேண்டும். பட்டம் முடித்தவர்கள் வேலைக்கு மனு செய்வதோடு நிற்காமல் சுயமாக ஏதும் செய்ய முடியுமா என்றும் ஆராய்வது நல்லது. சமுதாயத்தில் 100 சதவீத வேலைவாய்ப்பு என்பதை எந்த நாட்டிலும் எப்போதும் அமல்படுத்த முடிந்ததில்லை. சர்வாதிகார நாடுகளில் வேலையில்லாத் திண்டாட்டம் இல்லாததைப் போல அரசு காட்டும், வேலையில்லை என்று யாராவது சொன்னால் அதற்குப் பிறகு அவர்களுடைய வாழ்க்கையே திண்டாட்டமாகப் போய்விடும். முதலாளித்துவ நாடுகளில் வேலை கிடைப்பது, வேலை போவது இரண்டும் சகஜம். அமெரிக்கா போன்ற நாடுகள் வேலையில்லாதவர்கள் உயிர்வாழ்வதற்கான குறைந்தபட்ச மாத உதவித் தொகையை வழங்குகின்றன. எனவே நல்ல வேலை கிடைக்கும்வரையில் முழுப் பட்டினியாக இல்லாமல் காலம் தள்ளுகிறார்கள்.

நம் நாட்டைப் பொறுத்தவரை நாம் எப்போதும் பெற்றோருடன் - இன்னும் சில குடும்பங்களில் உடன் பிறந்தவர்களுடன் - வாழ முடிவது பெரிய சமுதாய பாதுகாப்பு. அரசாங்கம் நம்மிடம் மனு பெற்று வட்டாட்சியர் மூலம் சரிபார்த்து, ஆமோதித்து பண உதவி வழங்குவதற்கு அவசியமே இல்லாமல் நம்முடைய குடும்பமே பட்டினிகிடக்க விடாமல் சோறு போட்டு தங்கவும் இடம் தந்துவிடுகிறது. எனவே அடுத்து என்ன செய்தால் நமக்கும் குடும்பத்துக்கும் நல்லது என்று யோசிப்பது நல்லது. இதைக் குடும்ப உறுப்பினர்களிடமே பேசுவது அதைவிட நல்லது.

உடன்படித்தவர்கள், அக்கம்பக்கத்து வீட்டு நண்பர்கள் ஆகியோரைவிட குடும்பத்தாருக்கு வெளியுலக அனுபவம் குறைவென்றாலும், நம்முடைய உழைக்கும் சக்தி, கல்வி, பணியார்வம் ஆகியவை குறித்து அவர்களுக்குத்தான் அதிகம் தெரியும். ‘உன்னால் முடியாது தம்பி’ என்று அவர்கள் தடுத்தால், ஆத்திரப்படாமல் அவர்களுடைய வார்த்தைக்குப் பின்னால் உண்மை இருக்கிறதா என்று பார்த்து, தவறுகளைத் திருத்திக்கொள்வது நல்லது.

கடையோ, தொழிலோ ஆரம்பித்த மறு நாளிலிருந்தே கல்லாவில் பணம் கொட்டிவிடாது. எனவே தொடங்குவதற்கு முன்னால் நாமிருக்கும் பகுதியில் எந்தெந்தத் தேவைகளுக்கு கடை அல்லது உற்பத்தி அலகுகள் இல்லை என்று முதலில் ஆராய வேண்டும். இதில் நமக்குத் தரவுகள் கிடைக்கவில்லை என்றால் மாவட்ட நிர்வாகத்தில் உள்ள தொழில் முதலீட்டுக் கழகம் போன்ற அமைப்புகளை அணுகலாம்.

நாமே முன்கூட்டியே ஏதேனும் ஒரு தொழிலைத் தீர்மானித்து வைத்திருந்தால் அதற்கு எவ்வளவு முதல் தேவை, எப்படிப்பட்ட ஆட்களைக் கொண்டு வேலை செய்ய வேண்டும், எங்கே மூலப் பொருட்களை வாங்குவது, அதற்கு உரிமம் வேண்டுமா, முதலீட்டுக்கு யார் கடன் தருவார்கள், எங்கே சந்தைப்படுத்துவது, அந்தப் பொருளுக்கு எதிர்காலத் தேவை எப்படி இருக்கும் என்று குத்துமதிப்பாக அல்லாமல் திட்டவட்டமாகவே தெரிந்துகொண்டுவிடலாம். ஒரு வேலையைத் தொடங்குவதாக இருந்தால் சதா அந்த நினைவாகவே இருக்க வேண்டும்.

இதை கடை அல்லது தொழில் ஆரம்பிக்கும் முன்னர் இளைஞர்கள் தெரிந்துகொள்வது அவசியம். எடுத்த காரியத்தில் கண்ணாக இருந்தால், தோல்வி ஏற்பட்டாலும் தோற்றது ஏன் என்று தெரிந்து தவறைச் சரிசெய்து வாழ்க்கையில் வெற்றி பெற முடியும். கவனக்குறைவாக இருந்தால் தவறு எது, எப்படி வந்தது என்றுகூட தெரியாமல் தொடர்ந்து அதையே செய்துகொண்டிருப்போம்.

புதிய கடை அல்லது தொழில் தொடங்கிவிட்டால், நேரம் காலம் பார்க்காமல் உழைக்க வேண்டும். தொழிலுக்காகச் செய்யும் ஒவ்வொரு செலவையும் திட்டமிட்டுச் செய்ய வேண்டும். நல்ல தரத்தில் குறைந்த செலவில் செய்து தரக்கூடியவர் யார் என்பதைத் தேடி அலைந்து அவரிடம் அந்தந்தச் சேவைகளைப் பெற வேண்டும். வேலைக்கு ஆட்களை அமர்த்தும்போதும் ஊதியத்தைக் குறைப்பதற்கு முக்கியத்துவம் தராமல் - திறமையான, ஆர்வமுள்ள, தொழில் அல்லது வியாபாரத்துக்கு உதவக்கூடியவரா என்று மட்டும் பார்த்து அமர்த்திக்கொள்ள வேண்டும்.

வேலைக்கான இடத்தைத் தேர்வு செய்யும்போது, அதற்கான இடம்தானா அது என்று ஆராய்வது நல்லது. நம்முடைய வீட்டுக்குப் பக்கத்தில் இருக்கிறது, வாடகைக் குறைவு என்றெல்லாம் பார்த்து தீர்மானிக்கக் கூடாது. தொழில் அல்லது வியாபாரம் குறித்து மனதிலேயே கோட்டை கட்டிக் கொண்டிராமல், காகிதத்தில் எழுதிப் பார்ப்பது மிகவும் நல்லது. முதலீடு எவ்வளவு, உற்பத்தி எவ்வளவு, விற்பதற்கான முயற்சிகளுக்காகக் கூடிய செலவு எவ்வளவு என்று ஒவ்வொன்றையும் எழுத்தில் எழுதி கூட்டுவது நல்லது.

தொழில் செய்ய வேண்டும் என்றால் நிலம், தொழிலாளர், முதலீடு, நிர்வாக அமைப்பு அவசியம் என்பார்கள். இப்படி ஒவ்வொன்றுக்குமான அடிப்படைகளைத் தனித்தனியாகப் பிரித்து ஆராயும்போதுதான் அதற்குள் மேலும் பல அடுக்குகள் இருப்பது தெரியவரும். அந்தந்தத் துறையைச் சேர்ந்தவர்கள் எழுதியுள்ள புத்தகங்களையும் கட்டுரைகளையும் படிப்பதும் உதவியாக இருக்கும்.

தொழிலில் ஏற்கெனவே இருப்பவர்கள் யார் அவர்கள் எப்படி சம்பாதிக்கிறார்கள், எந்தவிதமான தொழில்நுட்பத்தைக் கையாள்கிறார்கள், யாரை வேலைக்கு அமர்த்துகிறார்கள், எங்கே சந்தைப்படுத்துகிறார்கள் என்பதையெல்லாம் தீர விசாரித்துத் தெரிந்துகொள்ள வேண்டும். உற்பத்தி செய்தாலே வந்து வாங்கிச் செல்வார்கள் என்று யாராவது சொன்னால் அதை அப்படியே நம்பிவிடக் கூடாது. ஒரு தொழிலைக் குறித்து வணிகப் பத்திரிகைகளில் என்ன எழுதுகிறார்கள் என்பதை அறிவதும் முக்கியம். ஏனென்றால் சிலவகைத் தொழில்கள் அரசின் தடையாலோ, கொள்கை மாற்றங்களாலோ எதிர்ப்பைச் சம்பாதித்துவிடும்.

பாலிதீன் பைகளைத் தயாரிக்கும் இயந்திரங்களை ஒருவர் விலை குறைத்துத் தருகிறார் என்பதற்காக கள நிலவரம் தெரியாமல் மலிவாக இயந்திரத்தை வாங்கி ஒரு பலனும் இல்லை. நாம் செய்யும் வேலை தொடர்பாக அடிப்படையான தகவல்களைத் திரட்டாமல் இருந்துவிடக் கூடாது. ஒரு நிறுவனத்தில் வேலைபார்த்தும் பெரிய பணப் பயன் இல்லை, இனி என் நிறுவனத்துக்காகவே உழைக்கப் போகிறேன் என்ற உணர்வு நல்லதுதான். அதற்காக உண்ணாமல், உறங்காமல் ஒரு வாரம் வேலைபார்த்துவிட்டு அடுத்த வாரத்திலிருந்து ஐசியுவில் அட்மிட் ஆகிவிடக் கூடாது. எனவே உடல், மன நலன்களிலும் கவனம் செலுத்துவது நல்லது. மேம்போக்கான தகவல்கள், தரவுகள் காலை வாரிவிடும். ஆழ்ந்து சிந்தித்து, அனுபவமுள்ளவர்களின் கருத்துகளையும் கேட்பது நல்லது.

வாடிக்கையாளர்கள்தான் முக்கியம், அவர்களுக்கு சேவையைத் திருப்திகரமாக அளிக்க வேண்டும் என்பதே முதல் லட்சியமாக இருக்க வேண்டும் – லாபம் அல்ல. இவ்வாறு அனைத்து தயாரிப்புகளையும் முன்கூட்டியே செய்து கொண்ட பிறகே தொழில் அல்லது வியாபாரத்தில் இறங்க வேண்டும். பரம்பரை பரம்பரையாக இவற்றைச் செய்கிறவர்கள்தான் என்றாலும் சந்தையை ஆராய்வதும் புதிய தரவுகளைத் தேடிப் பெறுவதும் மேலும் சிறப்பாகச் செயல்பட உதவும்.

ஒழுங்கான, கட்டுப்பாடான நடைமுறைகள் அவசியம். தொழில் முனைவோராகவும் வியாபாரியாகவும் முதலில் கணக்கு நோட்டுப் புத்தகம், கருத்து நோட்டுப் புத்தகம் இரண்டும் அவசியம். அன்றாடம் செய்ய வேண்டிய வேலைகளை அதில் குறிக்க வேண்டும். ஒவ்வொரு வேலையையும் செய்து முடித்த பிறகு டிக் செய்ய வேண்டும். செய்ய முடியாவிட்டால் காரணத்தை பக்கத்திலேயே பதிவு செய்ய வேண்டும். இது அடுத்த நாள் இலக்கை தவறவிடாமல் செய்ய உதவியாக இருக்கும்.

கடைகளில் ‘டே புக்’ என்று வைத்திருப்பார்கள். அன்றாடச் செலவுகளை ஒன்றுவிடாமல் அதில் எழுதுவார்கள். அன்றைக்கு கல்லாவில் ஆரம்ப இருப்பு என்ன, கடைசியில் வியாபாரம் முடிக்கும்போது எவ்வளவு என்று எழுதுவார்கள். இது லாப – நஷ்ட கணக்குக்காக அல்ல, என்னென்ன விதமான செலவுகள் ஏற்படுகின்றன என்பதை இனம் காண உதவும். இதே போல அன்றாடம் வரும் கடிதங்களையும் சீர்படுத்தி, நம்மிடம் பொருட்களைக் கேட்பவர்கள் யார், நமக்கு மூலப் பொருட்களையும் துணைப் பொருட்களையும் அனுப்புகிறவர்கள் யார், சேவைக்காக நாம் யாரை அணுகுகிறோம் என்பதையெல்லாமும் ஒழுங்கு செய்துகொள்ள இது உதவும்.

கடை அல்லது வியாபாரம் செய்கிறவர்கள் தங்களுக்கு வரும் கடிதங்கள், நோட்டீஸ்கள் போன்றவற்றைத் தவறவிடாமல் அன்றன்றே படித்து பாதுகாப்பான ஃபைல்களில் சேர்த்துவிட வேண்டும். தேவைப்படும்போது எடுத்துப் பயன்படுத்த இது அவசியம். பணம் கொடுக்கும்போதெல்லாம் ரசீது பெறவேண்டும் அல்லது அதைக் குறிக்கும் வகையில் விவரமாக எழுதி கோப்பில் சேர்க்க வேண்டும். எந்த ஒரு செலவும் சில நாள்களுக்குப் பிறகு எடுத்து ஆராயும்போது ஏன் – எதற்காக என்ற கேள்விக்கு விடையளிப்பதாக இருக்க இது அவசியம். வரும் கடிதங்களுக்கு உடனுக்குடன் பதில் அனுப்ப வேண்டும், அலட்சியம் செய்யக்கூடாது, ஒத்திப்போடக்கூடாது. இது தேவையற்ற சிக்கல்களுக்கு வழிவகுக்கும். இப்போது தரவுகளைச் சேகரிக்க கணினிகள் வந்துவிட்டதால் உடனுக்குடன் கணினியில் ஏற்றிவிடுவது மிகவும் நல்லது.

தொழிலில் அல்லது வியாபாரத்தில் போட்டியாளர்களைத் தொடர்ந்து கவனிக்க வேண்டும். லாபம் பெறும் அவர்களுடைய வழிகளைப் பின்பற்ற வேண்டும், இழப்பு ஏற்படுகிறது என்றால் எச்சரிக்கையாக இருக்க வேண்டும்.

உற்பத்தியில் அல்லது வியாபாரத்தில் புதிய பொருளைக் கையாள்வதால் கிடைக்கக் கூடிய அதிக லாபம், வாடிக்கையாளர்களின் ஆதரவு ஆகியவற்றைக் கணித்து அதற்கேற்பச் செயல்பட வேண்டும்.

புதுமைகளைப் புகுத்த வேண்டும். அதற்கு ஆக்கபூர்வமான சிந்தனை, கற்பனை வளம் அவசியம். நாம் தயாரிக்கும் பொருளுடன் இணைந்த வேறு பொருட்களையும் அவற்றுக்கான சந்தையையும் ஆராய்ந்து அவற்றையும் உடன் சேர்த்து தயாரிப்பது நல்ல லாபத்தையும் நிறைய வாடிக்கையாளர்களையும் பெற்றுத்தரும். தொழில் அல்லது வியாபாரம் தொடங்கிய உடனேயே லாபம் கிடைத்துவிடாதுதான் அதற்காக மாதக் கணக்கில் தொடர்ந்து செலவு மட்டும் செய்வதாக இருந்துவிடக்கூடாது. இடையிடையே நாம் சரியான பாதையில்தான் செல்கிறோமா என்றும் பார்க்க வேண்டும்.

வியாபாரத்தைப் பொருத்தவரை முக்கியமான பொன்மொழி ஒன்று உண்டு. லாபம் வரும் என்றால் அதை பெருக்கப் பார், நஷ்டம்தான் ஏற்படும் என்றால் அதைக் குறைக்கப் பார். இதை மறக்கவே கூடாது.

ஆற்றில் போட்டாலும் அளந்து போடு, அகலக்கால் வைக்காதே என்பதெல்லாம் குடும்பத்தாருக்கு மட்டுமல்ல தொழில் – வியாபாரத்துறையினருக்கும் பொருந்தக்கூடிய பழமொழிகள். துணிந்தவர்களால்தான் சாதனைகளைப் படைக்க முடியும். தன்னம்பிக்கையும் விடாமுயற்சியும் கடின உழைப்பும் தொழில் – வியாபாரம் இரண்டுக்குமான அடிப்படைத் தேவைகள். லட்சியத்தோடு வாழ நினைப்பவர்கள் இவற்றைத் தேர்வு செய்வார்கள்.

இப்போதைய உலகம் தரவுகள் உலகம். ஒரு தொழிலை அல்லது வியாபாரத்தைத் தொடங்குவதற்கு முன்னால் கூகுள் குட்டப்பாக்களைக் கேட்டாலே தகவல்கள் டன் கணக்கில் கொட்டிவிடும். பிறகு அவற்றைப் படித்து ஒரு முடிவுக்கு வர வேண்டியதுதான் பாக்கி. எங்கே முயற்சிகளைத் தொடங்குங்கள் பார்க்கலாம், வெற்றி பெற வாழ்த்துகள்!

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE