சிறகை விரி உலகை அறி-53: அழகுப் பெட்டகத்தினுள் துயரங்கள்!

By சூ.ம.ஜெயசீலன்

மழலையின் முதல் புன்னகை போன்று கவித்துவமானது பேருந்து பயணங்களினூடாக உறவுகள் அறிமுகமாவது. தடையற்று அமர்ந்து, தயக்கம் தவிர்த்து, தலை திருப்பி கருவிழியால் கண்ணியம் கடத்தி, கதைகள் பேசி, நினைவுகளுடனோ அல்லது முகநூல் நட்புடனோ பிரிவோம். சிற்றோடையில் நீந்தும் மீன்களாக துள்ளி நடப்போம்.

நிஜ்மேகனிலிருந்து புறப்பட்ட ஃபிளிக்ஸ் பேருந்தில், அயர்லாந்து நாட்டவர் என்னருகில் அமர்ந்தார். பேசிக்களித்தோம். நிலவு பூத்த நள்ளிரவில் இமைகளை மடக்கி இரவைக் குடிவைத்தோம்.

ஃபிளிக்ஸ் பேருந்து

ஐரோப்பிய நகரங்களுக்கிடையே பேருந்திலும் பயணிக்கலாம். கட்டணம் குறைவு. நான் பயணித்த, ஃபிளிக்ஸ் பேருந்து 40 நாடுகளில், 2,500 இடங்களை இணைக்கிறது. தரைத்தளமும், மேல்தளமும் உண்டு. கழிப்பறை, இலவச அருகலை, மற்றும் அலைபேசியை மின்னேற்றம் செய்யும் வசதிகள் இருக்கின்றன. முன்பதிவு செய்தபிறகு, ஏதாவது காரணத்தால் பயணிக்க இயலாதென்றால், கிளம்புவதற்கு 15 நிமிடங்களுக்கு முன்புவரை முன்பதிவை ரத்து செய்யலாம். 30 நாட்களுக்குள் ரத்து செய்தால் பிரச்சினை இல்லை. இல்லாவிட்டால், கட்டணத்தில் சிறிது பணம் பிடித்துக்கொண்டு, மீதியை அவரவர் கணக்கில் வரவு வைப்பார்கள், ரகசியக் குறியீடு தருவார்கள். அவைகளைப் பயன்படுத்தி அடுத்த 12 மாதங்களுக்குள் வேறு முன்பதிவு செய்யலாம்.

நேரம், சென்று சேரும் இடம், பயணியின் பெயர், அலைபேசி எண், கூடுதல் எடை உள்ளிட்ட தகவல்களை முன்பதிவு செய்தபிறகு தேவையென்றால் மாற்றலாம். ஆனால், நேரம் மற்றும் சென்று சேரும் இடத்தை மாற்றுவதற்கு, முன்பதிவை முதலில் ரத்து செய்ய வேண்டும். ஒரு ஃபிளிக்ஸ் பேருந்தில் பயணித்து, அடுத்த ஃபிளிக்ஸ் பேருந்தைப் பிடிக்கத் தாமதமாகிவிட்டால், பேருந்து நிறுவனமே, அடுத்த பேருந்தில் இலவசமாக அப்பயணியை அனுப்பி வைக்கும்.

ஒருபோதும் இனி நிகழவே கூடாது

பியர் குடிக்கும் திட்டம்

அதிகாலை வானம் செம்பட்டு விரித்து சூரியனுக்காகக் காத்திருந்த வேளையில் ஜெர்மனியின், மியூனிக் நகரத்தின் மத்திய பேருந்து நிலையத்தில் இறங்கினேன். ஜெர்மனியில் வாழும், தமிழ் நண்பர் வழிநடத்தியபடி தொடர்வண்டி நிலையம் சென்று, பயணச் சீட்டு வாங்கினேன். நகரத்தில் புறப்பட்ட தொடர்வண்டி, மடி முட்டும் கன்றுபோல, கிராமத்துக் காற்றை முட்டி முன்னேறியது. Eurail தொடர்வண்டிச் சலுகைக்கான செயலியைப் பார்த்தபோதுதான், பயணச்சீட்டு இல்லாமல் சலுகை அட்டையுடனே பயணித்திருக்கலாம் என்பதை அறிந்தேன். ஒரு மணி நேரம் பயணித்து இறங்கியபோது மழைத் தூறலில் மனிதர்கள் ஒதுங்கி நிற்க புல்லும் பூவும் குலுங்கி மகிழ்ந்ததைக் கண்டேன். என்னை அழைத்துச் செல்ல, தமிழ் சகோதரி ஒருவர் மகிழுந்து ஓட்டி வந்திருந்தார்.

நண்பரின் இல்லத்தில் குளித்து களைப்பு நீக்கினேன். இந்திய உணவகத்துக்கு அழைத்துச் சென்ற நண்பர். “பியர் குடிக்கிறீர்களா?” என்று கேட்டார். தனியாகப் பயணிக்கத் திட்டமிட்ட தொடக்க நாட்களில், வெளிநாடுகளுக்குச் செல்லும்போது, அந்நாட்டின் பியரை ஒருமுறை சுவைத்துப் பார்க்க வேண்டும் என நினைத்திருந்தேன். முதல் பயணத்தில், நாகசாகி தொடர்வண்டி நிலையத்தில் அருந்தினேன். பிடிக்கவில்லை. அதோடு அந்த எண்ணத்தையே விட்டுவிட்டேன்” என்றேன். “ஜெர்மனியில், சாப்பிடும்போதெல்லாம் புதிதாக ஒரு பியரைச் சுவைக்கத் தொடங்கினால் வருடங்கள் போதாது. அவ்வளவு வகைகள் இங்கே இருக்கின்றன” என்றார். புதிய தகவலுடன் அன்றைய நாளில் ஓய்வெடுத்தேன்.

டச்சாவ் முகாம்

முதல் முகாம்

மூன்றாம் பேரரசின் (Third Reich) அதிகாரியாக ஹிட்லர் நியமிக்கப்பட்ட சில வாரங்கள் கழித்து டச்சாவ் (Dachau) என்னுமிடத்தில் மார்ச் 22, 1933-ல் முதல் வதை முகாம் உருவாக்கப்பட்டது. இது, அரசியல் கைதிகளுக்கானது. பின்னாட்களில் கட்டப்பட்ட அனைத்து வதை முகாம்களுக்கும் இதுவே மாதிரியாக அமைந்தது. 12 ஆண்டுகள் செயல்பட்ட இம்முகாமில் உயிருடன் இருந்த கைதிகளை ஏப்ரல் 29, 1945 அன்று அமெரிக்க வீரர்கள் விடுவித்தார்கள்.

முன்னாள் கைதிகளின் முன்னெடுப்பு மற்றும் அரசாங்கத்தின் ஆதரவுடன் 1965-ல் உருவான, ‘வதைமுகாம் அருங்காட்சியகத்துக்கு’ நண்பர்களுடன் சென்றேன். சிதிலமான அடித்தளத்தின் அருகில் இருந்தக் குறிப்பை வாசித்தேன். நாஜி காவலர்களின் கண்காணிப்பில் முகப்பு கட்டிடம் அங்கு இருந்ததாகவும், தொடர்வண்டி, பேருந்து, மற்றும் சரக்குந்துகளில் கொண்டுவரப்பட்ட கைதிகள் இக்கட்டிடத்தின் வழியாக முகாமுக்குள் நடந்து சென்றதாகவும் அறிந்தேன். நடைபாதையின் ஓரத்தில் இரும்பு கம்பிகள் சில ஊன்றப்பட்டிருந்தன. ரகசிய காவலர்களின் (Gestapo) அரசியல் பிரிவு கட்டிடம் அமைந்திருந்த இடம் அது.

அங்கிருந்து பெரிய பொட்டல் வெளியில் நடந்தோம். இவ்விடத்தில்தான் தினந்தோறும் காலையில் கைதிகள் வரிசையாக நின்றார்கள். அதிகாரிகள் கணக்கெடுத்தபிறகு வேலைக்குச் சென்றார்கள். மாலையிலும் அதேபோல் நின்று கணக்கு கொடுத்துவிட்டு குடிசைக்குத் திரும்பினார்கள்.

டச்சாவ் முகாமில் எரியுலை

மருத்துவப் பரிசோதனைகள்

இம்முகாமில் பல்வேறு மருத்துவப் பரிசோதனைகள் கைதிகள் மீது நடந்தப்பட்டுள்ளன. மருத்துவர் க்லாஸ் சிலிங் தலைமையில் மலேரியா நோய் பரிசோதனை மற்றும் ஜெர்மன் மருத்துவ ஆணையத்தால் காசநோய் பரிசோதனை நடத்தப்பட்டுள்ளது. விமானம் அதிக உயரத்தில் பறக்கும்போது, பயணிகளுக்கு என்னென்ன விளைவுகள் ஏற்படும்? அவ்வளவு உயரத்தில் எவ்வாறு பணியாற்றுவது? அழுத்தம் குறையும்போது எப்படியெல்லாம் பயணிகளைப் பாதுகாப்பது? போன்றவற்றை அறிய இம்முகாம் கைதிகளிடம் ஆய்வு செய்தார்கள். அதில், எழுபதுக்கும் மேற்பட்ட கைதிகள் உயிரிழந்தார்கள்.

விமானம் சுடப்பட்டு வீரர்கள் கடலில் விழுந்து மடிவதால், பேராசிரியர் ஆல்ஸ்லோக்னர், மருத்துவர் ராஷர் மற்றும் ஃபிங்க் ஆகியோரின் வழிகாட்டுதலில் மற்றுமோர் ஆய்வு தொடங்கியது. கைதிகளின் உடலில் விமானியின் ஆடை அணிவித்தார்கள். பல்வேறு கருவிகளும் உயிர் காக்கும் கருவிகளும் பொருத்தினார்கள். மிகவும் குளிர்ந்த நீர் நிறைந்த உலோகத் தொட்டியினுள் அமிழ்த்தினார்கள். உடலின் எந்த உறுப்பு முதலில் செயலிழக்கிறது? எந்த நிலையில் இறப்பு நிகழ்கிறது? இறப்புகளைக் தடுப்பதற்கான வாய்ப்புகள் மற்றும் காப்பாற்றுவதற்கான வழிமுறைகள் என்னென்ன? போன்ற கேள்விகளுக்குப் பதில் தேடினார்கள். இதில், ஏறக்குறைய 90 கைதிகள் இறந்தார்கள்.

நல்லிணக்க ஆலயம்

ராஷரின் மரணம்

மருத்துவர் ராஷரின் துணைவி பெயர் கரோலின். இருவருக்கும் 16 வயது வித்தியாசம். திருமணம் முடிக்காமல் சேர்ந்து வாழ்ந்தனர். இருவருமே படைத்தளபதி ஹெய்ன்ரிச் ஹிம்லரின் நண்பர்களாக விளங்கியதால் மிக எளிதில் பதவி உயர்வுகளும் கிடைத்தன. நாஜிக்களின் விதிமுறைப்படி, தம்பதியினருக்கு திருமணம் நடக்க வேண்டும், குழந்தை பெற்றெடுக்கும் தகுதி இருக்க வேண்டும் என நினைத்தார் ஹிம்லர். எனவே, ராஷர் மற்றும் கரோலின் இருவரும் 1941-ல் திருமணம் செய்துகொண்டார்கள். திருமணத்துக்கு முன்பே, இரண்டு குழந்தைகள் இருந்த நிலையில் குறுகிய காலத்திலேயே மூன்றாவதாக ஒரு மகன் ‘பிறந்தான்’. 3 குழந்தைகளின் படங்களையும் பிரச்சாரத்துக்குப் பயன்படுத்தினார் ஹிம்லர்.

4-வது குழந்தையும் ‘பிறந்தது’. அப்போதுதான், மியூனிக் தொடர்வண்டி நிலையத்திலிருந்து ஒரு குழந்தையைக் கடத்த கரோலின் ஏற்பாடு செய்திருந்தது தெரிய வந்தது. விசாரணையில், 4 குழந்தைகளுமே சட்டத்துக்குப் புறம்பாகப் பெறப்பட்டதுதான் என்ற உண்மை வெளியானது. தான் ஏமாற்றப்பட்டதாக உணர்ந்த ஹிம்லர் பழிவாங்க முடிவெடுத்தார். ராவன்ஸ்புரூக் முகாமுக்கு அனுப்பப்பட்ட கரோலின் 1945-ல் கொல்லப்பட்டார். புங்கன்வால்டு முகாமுக்கு சிறப்புக் கைதியாக அனுப்பப்பட்ட ராஷர், 1945 ஏப்ரல் மாதம் மறுபடியும் டச்சாவ் முகாமுக்கு கொண்டுவரப்பட்டு கொல்லப்பட்டார்.

ரஷ்யர்கள் எழுப்பிய நினைவிடம்

நினைவிடங்கள்

சில நினைவிடங்களும் இம்முகாமில் இருக்கின்றன. யூதர்களுக்கான நினைவிடம் சாய்ந்த கூரை வடிவத்தில் அமைந்துள்ளது. அதனடியில் விளக்கு எரிகிறது. புராடெஸ்டான்ட் திருச்சபையினர் ‘நல்லிணக்க ஆலயம்’ எழுப்பியுள்ளனர். இம்முகாமில் கொல்லப்பட்ட ரஷ்யர்களின் நினைவாக, ஜெர்மனியில் இருந்த ரஷ்ய ஆர்த்தடாக்ஸ் சபையினர் ‘நமது ஆண்டவர் இயேசுவின் உயிர்ப்பு’ எனும் சிறு ஆலயத்தை நினைவிடமாக எழுப்பியுள்ளனர்.

கிறிஸ்துவின் மரண வேதனை- ஆலயம்

‘கிறிஸ்துவின் மரண வேதனை’ ஆலயம் கத்தோலிக்கத் திருச்சபையினரால் கட்டப்பட்டுள்ளது. உருளை வடிவத்தில் அமைந்துள்ள ஆலயத்தின் ஒரு பகுதி திறந்துள்ளது. இரும்பிலான முள்முடி மேலே தொங்குகிறது. கோியிலுக்கு அருகில் மணிக்கூண்டு இருக்கிறது. இயேசு இறந்த நேரமாகச் சொல்லப்படும், மதியம் 3 மணிக்குச் சிறிது முன்பாக, தினமும் இந்த மணியை ஒலிக்கச் செய்கிறார்கள். ‘திரு ரத்தத்தின் கார்மல் துறவு சபை’ அருள்சகோதரி மரிய தெரசியா தொடங்கிய துறவுமடமும் அருகிலேயே உள்ளது. டச்சாவ் முகாமில் கொடுமைகளை அனுபவித்தவர்கள் மற்றும் கொல்லப்பட்டவர்களுக்காக ஜெபம் ஒப்புக்கொடுக்கும் இடமாகவும் உயிருள்ள நம்பிக்கையின் அடையாளமாகவும் இத்துறவு மடம் திகழ்கிறது.

யாருமறியாத கைதிகளின் சாம்பல்

மற்றோர் இடத்தில், பெரிய சாம்பல் கலன் கட்டப்பட்டுள்ளதைப் பார்த்தேன். அதைச் சுற்றிலும், ‘வதைமுகாமில் இறந்த யாருமறியாத கைதிகளின் சாம்பல்’ என்று எழுதியிருந்தது. பின்புறச் சுவரில், எபிரேயம், பிரெஞ்சு, ஆங்கிலம், ஜெர்மன் மற்றும் ரஷ்ய மொழிகளில் ‘ஒருபோதும் இனி நிகழவேக்கூடாது’ (Never Again) என்று எழுதப்பட்டிருந்தது.

போரில்லா பூமிக்கான ஏக்கத்துடன், அங்கிருந்து வெளியேறினோம். நண்பர்களோடு இரண்டு நாட்கள் செலவழித்துவிட்டு, சுவிட்சர்லாந்துக்குக் கிளம்பத் தயாரானேன்.

(பாதை விரியும்)

பெட்டிச் செய்தி:

ஆன்மாக்களைக் காணவில்லை!

ஆஸ்விட்ச்போல, ரத்தமும் சதையுமாக டச்சாவ் முகாமில் ஏதுமில்லை. படங்களும் செய்திகளும் அழகுபடுத்தப்பட்ட அறைகளில் இருக்கின்றன. அனைத்தையும் பொறுமையாக வாசிப்பவர்கள், நடத்தப்பட்ட கொடுமைகளைக் கொஞ்சம் உணரலாம். அப்படி யாருமில்லை. மற்றவர்களுக்கு, அது ஒரு படக்காட்சி அரங்கு, அவ்வளவுதான். கைதிகள் வாழ்ந்த அறைகள் மற்றும் எரியூட்டப்பட்ட அறைகள் அனைத்தையும் செயற்கையாகவே செய்து வைத்திருக்கிறார்கள். விஷ வாயுவால் கொல்லப்பட்ட அறைக்குள் சென்றபோதும் சுற்றுலா உணர்வுடனே பலரும் நடந்ததைப் பார்த்தேன். இறந்தவர்களின் ஆன்மாக்களை இங்கே உணர இயலவில்லை.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE