ஶ்ரீவில்லிபுத்தூரில் குப்பை கொட்ட இடம் இல்லாமல் திணறும் நகராட்சி: எரிப்பதால் சுற்றுச்சூழல் சீர்கேடு

By அ.கோபால கிருஷ்ணன்

ஶ்ரீவில்லிபுத்தூர்: ஸ்ரீவில்லிபுத்தூர் நகராட்சி குப்பை கிடங்கில் புதிய பேருந்து நிலைய கட்டுமான பணிகள் நடைபெறுவதால், குப்பை கொட்டுவதற்கு இடமின்றி நகரில் பல்வேறு இடங்களில் குப்பையை கொட்டி தீ வைப்பதால் சுற்றுச்சூழல் மாசுபடுகிறது.

ஸ்ரீவில்லிபுத்தூர் நகராட்சியில் உள்ள 33 வார்டுகளில் தினசரி சேகரிக்கப்படும் 60 டன் குப்பையை தரம் பிரித்து வழங்குவதற்காக திடக்கழிவு மேலாண்மை திட்டத்தின் கீழ் ரூ.5 கோடிக்கு கடந்த ஆண்டு மே மாதம் டெண்டர் விடப்பட்டது. சில மாதங்களிலேயே தூய்மை பணி ஒப்பந்தம் எடுத்த தனியார் நிறுவனம் போதிய ஒப்பந்த பணியாளர்களை நியமிக்காததால் சுகாதர பணிகள் பாதிக்கப்படுவதாக கூறி ஒப்பந்தம் ரத்து செய்யப்பட்டது. இதையடுத்து ஏற்கனவே நகராட்சியில் தூய்மை பணி மேற்கொண்ட தனியார் ஒப்பந்த நிறுவனத்திற்கு தற்காலிகமாக தூய்மை பணி மேற்கொள்ள அறிவுறுத்தப்பட்டது.

வீடுகளில் சேகரிக்கும் குப்பைகளை சிவகாசி சாலையில் நீதிமன்றம் அருகே உள்ள குப்பை கிடங்கில் கொட்டி தரம் பிரிக்கப்பட்டது. குப்பை கிடங்கு இருந்த இடத்தில் ரூ.16 கோடியில் புதிய பேருந்து நிலையம் கட்டுப்படுவதாலும், நான்கு வழிச்சாலை பணி நடப்பதாலும் குப்பை கொட்டுவதற்கு இடம் இல்லை. இதனால் நகரில் பல்வேறு இடங்களில் குப்பையை கொட்டி தீ வைப்பதால் சுற்றுச்சூழல் மாசுபடுகிறது. கடந்த மே 31ம் தேதி கிருஷ்ணன்கோவில் அருகே லட்சுமியாபுரத்தில் குப்பை கொட்டிய நகராட்சி வாகனத்தை பொதுமக்கள் சிறை பிடித்து காவல் துறையில் ஒப்படைத்தனர்.

இது குறித்து நகராட்சி ஒப்பந்ததாரர், நில உரிமையாளர், வாகன ஓட்டுநர் ஆகியோர் மீது நத்தம்பட்டி போலீஸார் வழக்குப் பதிவு செய்தனர். இந்நிலையில் மதுரை - கொல்லம் தேசிய நெடுஞ்சாலையில் திருப்பாற்கடல் தெப்பம் எதிரே உள்ள ஆண்டாள் கோயிலுக்கு சொந்தமான இடத்தில் குப்பை கொட்டி தரம் பிரித்த பின்னர், குப்பைக்கு தீ வைப்பதால் பகுதியைச் சேர்ந்தவர்கள் மிகுந்த சிரமத்திற்கு ஆளாகின்றனர். ஶ்ரீவில்லிபுத்தூர் மின் மயானம் பின்புறம் கண்மாய் கரையில் குப்பையை கொட்டுவதால் கண்மாய் நீர் மாசடையும் சூழல் நிலவுகிறது. அந்த குப்பையில் இரு நாட்களுக்கு முன் இரவு நேரத்தில் தீப்பற்றி எரிந்ததில் அப்பகுதி முழுவதும் புகை மண்டலமாக மாறியது.

இது குறித்து பொதுமக்கள் கூறுகையில்: "ஸ்ரீவில்லிபுத்தூர் நகராட்சியில் சேகரிக்கப்படும் குப்பைகளை தரம் பிரிக்காமல் கண்மாய், ஓடைகள் உள்ளிட்ட நீர் நிலைகளில் கொட்டி தீ வைத்து எரிக்கின்றனர். கடந்த சில மாதங்களுக்கு முன் திருமுக்குளம் அருகே ஓடையில் குப்பையை கொட்டிய போது, பொதுமக்கள் எதிர்ப்பு தெரிவித்த பின் அள்ளி சென்றனர். தொடர்ந்து நகரில் பல்வேறு பகுதியில் குப்பையை கொட்டி தீ வைத்து எரித்து வருகின்றனர். இது குறித்து நகராட்சி அதிகாரிகளிடம் புகார் அளித்தாலும் கண்டு கொள்வதில்லை. மாவட்ட நிர்வாகம் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும், என்றனர்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE