கபினி வேகமாக நிரம்புவதால் மேட்டூர் அணைக்கு நீர் வரத்து அதிகரிக்க வாய்ப்பு

By எஸ்.விஜயகுமார்

சேலம்: மேட்டூர் அணைக்கு வந்து கொண்டிருக்கும் நீரின் அளவு விநாடிக்கு 227 கனஅடி என்ற அளவில் இருந்து, இன்று விநாடிக்கு 1,038 கனஅடியாக அதிகரித்துள்ளது. கர்நாடகாவின் கபினி அணை வேகமாக நிரம்பி வருவதால், அந்த அணையின் உபரி நீர் மேட்டூர் அணைக்கு வரும் வாய்ப்பு ஏற்பட்டுள்ளது.

காவிரி நீர்ப்பிடிப்புப் பகுதிகளில் தென்மேற்கு பருவமழை பெய்யத் தொடங்கியுள்ளது. இதனால், காவிரியில் நீர் வரத்து உயர்ந்து, கர்நாடகாவில் உள்ள அணைகளுக்கு வந்து கொண்டிருக்கும் நீரின் அளவும் அதிகரித்துள்ளது. குறிப்பாக, நீர் வரத்து அதிகரித்துள்ளதால், கர்நாடகாவின் கபினி அணையில் இருந்து, காவிரியில் விநாடிக்கு 1,000 கனஅடி வீதம் நீர் திறக்கப்பட்டு வருகிறது. இதன் காரணமாக, மேட்டூர் அணைக்கு வந்து கொண்டிருக்கும் நீரின் அளவு தற்போது அதிகரித்துள்ளது. குறிப்பாக, அணைக்கு நேற்று விநாடிக்கு 227 கனஅடியாக இருந்த நீர் வரத்து, இன்று விநாடிக்கு 1,038 கனஅடியாக அதிகரித்துள்ளது.

இது குறித்து நீர்வளத்துறை அதிகாரிகள் கூறியது: "கபினி அணையின் நீர்ப் பிடிப்புப் பகுதிகளில் கனமழை பெய்து வருவதால், அந்த அணைக்கு நீர் வரத்து விநாடிக்கு 5 ஆயிரம் கனஅடிக்கும் கூடுதலாக இருக்கிறது. இந்நிலையில், கபினி அணையில் இருந்து தற்போது விநாடிக்கு 1,000 கனஅடி நீர் காவிரியில் திறக்கப்பட்டுள்ளது. கபினி அணையின் மொத்த கொள்ளவு 19.52 டிஎம்சி- என்ற நிலையில், தற்போது அணையில் 15 டிஎம்சி-க்கும் கூடுதலாக நீர் இருக்கிறது.

இந்த அணைக்கு நீர் வரத்து அதிகமாக இருப்பதால், அதிகபட்சம் ஒரு வார காலத்துக்குள் கபினி அணை முழுக்கொள்ளளவை எட்டிவிடும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. கபினி அணை நிரம்பிவிட்டால், அந்த அணைக்கு வரக்கூடிய நீர் முழுவதும் உபரியாக, காவிரியில் வெளியேற்றப்பட்டு, நேரடியாக மேட்டூர் அணைக்கு நீர் வந்தடையும். எனவே, மேட்டூர் அணைக்கான நீர் வரத்தும், இனி படிப்படியாக அதிகரிக்கும் வாய்ப்பு உள்ளது." என்றனர்.

இதனிடையே, காவிரி கரையோர மாவட்டங்களின் குடிநீர் தேவைக்காக, மேட்டூர் அணையில் இருந்து விநாடிக்கு 1,000 கனஅடி வீதம் நீர் திறக்கப்பட்டு வருகிறது. இந்நிலையில், மேட்டூர் அணையின் நீர் மட்டம் நேற்று 39.75 அடியில் இருந்து, இன்று 39.74 அடியாகவும், நீர் இருப்பு 11.96 டிஎம்சி-யில் இருந்து, நேற்று 11.95 டிஎம்சி-யாகவும் சற்று குறைந்துள்ளது.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE