இன்னொரு விஸ்மயா போல் ஆகிவிடாத நவுஜிஷா!

By ம.சுசித்ரா

வரதட்சணைக் கொடுமை தாளாமல் தன் உயிரை மாய்த்துக் கொண்ட கொல்லம் விஸ்மயாவுக்கு நீதி பரிபாலனம் செய்யப்பட்டிருக்கும் இந்த நேரத்தில் கோழிக்கோடு நவுஜிஷாவிடம் உலகிற்குச் சொல்ல வேறொரு சேதி உள்ளது.

விஸ்மயாவைப் போலவே கணவரால் சித்திரவதைக்கு ஆளாக்கப்பட்டவர்தான் நவுஜிஷாவும். ஓராண்டு முன்பு கணவர் வீட்டின் குளியலறையில் விஸ்மயா தூக்கில் தொங்கி தற்கொலை எனும் கொடூர முடிவை எட்டினார் என்றால் ஆறு ஆண்டுகளுக்கு முன்பே கிணற்றில் குதிக்கச் சென்றார் நவுஜிஷா.

கிரண்குமார் - விஸ்மயா

விஸ்மயா 2020-ல் திருமண பந்தத்தைத் தொட்டபோது அவர் ஆயுர்வேத மருத்துவ இறுதியாண்டு மாணவி. அவரது அச்சன் திரிவிக்கிரமன் நாயரும், அம்மே ஸஜிதாவும் அரசு உத்தியோகம் ஆதர்ச புருஷ லட்சணம் என்ற ஒற்றைக் காரணத்துக்காக மோட்டார் வாகன ஆய்வாளரான கிரண்குமாருக்கு மகளை மணமுடித்து வைத்தனர். அதே அரசு உத்தியோகம் தங்களது மகள் படித்து முடித்ததும் அவளுக்கே கிடைக்கும் என்பது அவர்களுக்கு ஏனோ தோன்றவில்லை! கிரண்குமாருக்கு ஒன்றேகால் ஏக்கர் நிலம், 100 சவரன் நகைகள், 10 லட்ச ரூபாய்க்கு சொகுசுக் கார் என வரதட்சணையும் கொடுத்து விஸ்மயாவையும் திரிவிக்கிரமன் நாயர் தாரைவார்த்தார்.

அதேபோல், எம்.சி.ஏ. முதுநிலை பட்டதாரியாக கல்லூரி ஒன்றில் வருகைதரு பேராசிரியையாக கௌரவமாக பணிபுரிந்துகொண்டிருந்த நவுஜிஷாவுக்கு 2013-ல் வாப்பா அப்துல்லாவும், உம்மா பாத்திமாவும் நிக்கா முடித்துவைத்தனர். நவுஜிஷாவுக்கும் அவரது பெற்றோர் வரதட்சணையை வாரி இறைக்க வேண்டியதாயிற்று. திருமணமான கையோடு வேலையை விடும்படி கணவரும், அவரது பெற்றோரும் நவுஜிஷாவுக்கு கட்டளையிட அதற்கு அவரும் கீழ்ப்படிந்தார்.

விஸ்மயா தனது படிப்பைத் தொடர விரும்புவதாகக் கெஞ்சவே, மருத்துவப்படிப்பை கணவர் வீட்டிலிருந்து படிப்பதற்கு போனால் போகட்டுமென அனுமதித்தார்கள். விஸ்மயாவுக்கு வரதட்சணையாகக் கொடுக்கப்பட்ட கார் அதிக மைலேஜ் கொடுக்கவில்லை எனக்கூறி மேலும் 10 லட்சம் ரூபாய் கேட்டார் கணவர் கிரண்குமார். இனிமேல் பணம் தர முடியாது என விஸ்மயாவின் தந்தை மறுக்கவே விஸ்மயாவை அடித்துத் துன்புறுத்தினார் கிரண்குமார்.

தங்கைக்காக நியாயம் கேட்கச் சென்ற விஸ்மயாவின் அண்ணனையும் கிரண்குமார் அடித்தார். பிரச்சினை காவல்நிலையம் வரை சென்று சமாதானம் ஆனார்கள். அதன் பிறகு விஸ்மயாவை பிறந்த வீட்டுக்கு கிரண்குமார் அனுப்பவில்லை. தான் அனுபவிக்கும் துன்பத்தை நேரடியாகச் சொல்லத் தயங்கி தோழிகளிடம், “நீங்களாவது படிச்சு முடிச்சு வேலைக்குப் போன பிறகு திருமணம் செஞ்சிக்கோங்க” என்றார் விஸ்மயா.

தான் பட்ட காயங்களையும் கஷ்டங்களையும் அம்மாவிடம் அடிக்கடி சொல்லவே செய்தார். ஒரு நாள், கணவர் செய்யும் சித்திரவதை பொறுக்க முடியாமல் தனக்கு ஏற்பட்ட காயங்களை புகைப்படங்கள் எடுத்து வாட்ஸ் அப் மூலம் உறவினருக்கு பகிர்ந்தார். தந்தையை அலைபேசியில் அழைத்து மனம் வெதும்பி, “எனக்கு ரொம்ப பயமா இருக்கு அடிச்சு துன்புறுத்துறார்... இனியும் என்னை நீங்க அழைச்சுட்டுப் போகலைனா நான் இல்லாமல் போய்டுவேன் அச்சா” என்று தேம்பித்தேம்பி அழுதார். “வாழ்க்கை என்றால் இப்படித்தான் இருக்கும் மோளே” என்று திரிவிக்கிரமன் நாயர் தேற்ற முயன்றார். அடுத்த நாள் 2021 ஜூன் 21 அன்று விஸ்மயாவின் மரணச் செய்திதான் உலகுக்கு வந்து சேர்ந்தது.

கேரளத்தை உலுக்கிய இந்த வரதட்சணைக் கொடுமை சம்பவத்தை அடுத்து கிரண்குமார் கைது செய்யப்பட்டார். எந்த அரசு வேலைக்காக கிரண்குமாரிடம் தாங்கள் பெற்றெடுத்து பாராட்டி சீராட்டி வளர்த்த பெண்ணையும் பொருளையும் பறிகொடுத்தார்களோ அந்த அரசுப் பணியிலிருந்து கேரள அரசு கிரண்குமாரை டிஸ்மிஸ் செய்தது. வாட்ஸ் அப் தகவல்கள், அலைபேசி அழைப்புப் பதிவுகள் அடிப்படையில் வன்கொடுமை தடுப்புச் சட்டம் உள்ளிட்ட பல்வேறு பிரிவுகளின் கீழ் கிரண்குமார் மீது வழக்குப் பதிவானது. ஓராண்டுக்குள் துரிதமாக விசாரணை நடத்தப்பட்டு கொல்லம் கூடுதல் அமர்வு நீதிமன்றம் கடந்த வாரம் கிரண்குமாரிக்கு 10 ஆண்டு சிறை தண்டனையும் 12.50 லட்சம் ரூபாய் அபராதமும் விதித்துத் தீர்ப்பளித்தது.

2016-ல் கைக்குழந்தையோடு இருந்த நவுஜிஷா இதேபோன்று வரதட்சணைக்காக கணவரால் கொடுமைப்படுத்தப்பட்டார். தற்கொலை செய்துகொள்ளக் கிணற்றின் விளிம்புக்குச் சென்ற நவுஜிஷாவுக்கு வாழ்க்கையின் விளிம்பு இதுவல்ல என்ற எண்ணம் மின்னல்போல சட்டென மனத்துக்குள் பாய்ந்தது. பச்சிளம் குழந்தையோடு கணவர் வீட்டைவிட்டு வெளியேறி தாய்வீடு வந்துசேர்ந்தார். அந்த நொடியில் வாப்பாவும், உம்மாவும் மகள் நவுஜிஷாவையும், அவரது மகனையும் வாரி அணைத்தனர்.

“வாழ்க்கை என்றால் இப்படித்தான் இருக்கும் மோளே” என்று நடக்கும் கொடுமையை அவர்கள் சகித்துக் கொள்ளச் சொல்லவில்லை. தான் படும் துன்பத்தை வாட்ஸ் அப் வழி புகைப்படங்களாக பகிர்ந்தபோதும், ‘இதுவும் கடந்துபோகும்’ என விஸ்மயாவின் உறவினர்கள் உதாசினப்படுத்தியதுபோல நவுஜிஷாவின் அக்கா நவுஃபா இருந்துவிடவில்லை. ’மீண்டும் எழுந்துவா, மீண்டு எழுந்துவா’ என்று தங்கைக்கு உற்ற துணையாக நின்றார் மேல்நிலைப் பள்ளி ஒன்றில் லேப் அட்டெண்டராக பணிபுரிந்து வந்த அக்கா நவுஃபா. அந்த ஆறுதலில் மீண்டும் ஒரு கல்லூரியில் தற்காலிகமாக விரிவுரையாளராக வேலைக்குச் செல்ல ஆரம்பித்தார் நவுஜிஷா.

போலீஸ் அதிகாரி பரேடில் நவுஜிஷா...

ஆனால், சட்டப்படி மணமுறிவு பெற நீதிமன்றத்தின் படிகளை ஏறி இறங்கியவருக்கு கடும் மன உளைச்சல் ஏற்பட்டதால் வேலையைத் தொடரமுடியாமல் ராஜினாமா செய்தார். அந்த வேளையில் அக்கா நவுஃபா மற்றும் பெற்றோர் நவுஜிஷாவை தேற்றினர். மகனை நாங்கள் வளர்க்கிறோம் நீ உன்னை வளர்த்தெடு என்று நம்பிக்கை விதைத்தனர். தான் கணவரால் கொடுமைப்படுத்தப்பட்டபோதுகூட காவல்நிலையத்துக்குச் சென்று புகார் அளிக்க அச்சப்பட்ட நவுஜிஷா, தானே ஒரு போலீஸ் அதிகாரியாக முடிவெடுத்தார். பெண் சிவில் போலீஸ் அதிகாரியாகும் இலக்கோடு கடந்தாண்டு பப்ளிக் சர்வீஸ் கமிஷன் தேர்வெழுதினார். திருச்சூர் மாவட்டத்தில் முதலிடம் பிடித்தார். அண்மையில் கேரள காவல்துறையில் இணைந்த 446 பெண் போலீஸ் அதிகாரிகளில் இவரும் ஒருவர். ஓராண்டுகால பயிற்சி முடிந்து போலீஸ் ’பரேட்’ எனும் அணிவகுப்பு நிகழ்ச்சியில் சிறப்பாகச் செயலாற்றி சிவில் போலீஸ் அதிகாரியாக தற்போது நிமிர்ந்து நிற்கிறார் நவுஜியா.

மகனுடன் நவுஜிஷா...

வாழ்க்கையே போர்க்களம் வாழ்ந்துதான் பார்க்கணும் என்று உறுதிகொண்டு வாகைசூடியிருக்கும் அம்மா நவுஜிஷாவின் மடியில் பெருமிதத்துடன் அமர்ந்து அவரது போலீஸ் தொப்பியை உயர்த்திப்பிடிக்கும் ஏழு வயது மகனின் புகைப்படம் பெண் அடிமைத்தனத்துக்குச் சாட்டையடி.

விஸ்மயா, நவுஜிஷாவை பொறுத்தவரை இருவருமே தங்களுக்கு நேர்ந்த அநீதியை பெற்றோர், உறவினரிடம் வெளிப்படுத்தினர். விஸ்மயாவுக்கு இழைக்கப்பட்ட கொடுமை காவல் நிலையத்திலும் புகார் செய்யப்பட்டது. இருந்தபோதும் அதைச் சகித்துக்கொள்ளவும் சுயமரியாதையைத் துறந்து வாழவும் பழகச் சொன்னது சமூகம். அப்படியானால் குற்றவாளியின் பக்கம் தான் நிற்பதாக சமூகம் அறிவித்துக் கொண்டது என்றே அர்த்தம். அதை கண்டு மனம் புழுங்கித்தான் விஸ்மயா உயிர் துறந்தார்.

அதிலும் கேரளா போன்ற கல்வியில் முன்னேறிய மாநிலத்தில், அடிமைத்தளையை வேரறுக்கும் பொதுவுடமைக் கொள்கை வேரூன்றிய மண்ணில் அரை நூற்றாண்டுக்கும் முன்பே பெருங்குற்றமாக அறிவிக்கப்பட்ட வரதட்சணைக் கொடுமை இன்றும் தலைவிரித்தாடுவது பெருத்த அவமானம் தான். தன் மீது திணிக்கப்படும் உடல்ரீதியான, மனரீதியான துன்புறுத்தலைப் பெண்ணைச் சகித்துக்கொள்ளச் சொல்லும் ஆணாதிக்கத்தின் விளைவே விஸ்மயாவின் மரணம் . ஆண்-பெண் சமம் என்பதையும் வரதட்சணை பெறுதல் இழி செயல் என்பதையும் குடும்ப வன்முறையில் ஈடுபடுதல் மன்னிக்க முடியாத குற்றம் என்பதையும் ஒட்டுமொத்த சமூகத்துக்கும் கற்பிக்கத் தவறியதன் விளைவே விஸ்மயாவின் மரணம்.

விஸ்மயாவை இழந்து வாடும் அதேசமயத்தில், குடும்ப வன்முறையில் சிக்கிக்கொண்டு செய்வதறியாமல் தவிக்கும் எண்ணற்ற பெண்களுக்கு நவுஜிஷா ஒளிக்கீற்றைப் பாய்ச்சியபடி உயர்ந்து நிற்கிறார். காவல்துறை அதிகாரியாகத் தன்னை தானே மீட்டெடுத்துக் கொண்ட தருணத்தில் நவுஜிஷா உச்சரித்த சொற்கள்தான் இங்கு அனைவருக்குமான பாடம். கிட்டதட்ட அதைதான் விஸ்மயாவும் தன்னுடைய இறுதி நாட்களில் தனது தோழிகளிடம் சொல்லிச் சென்றார். “திருமணம் அல்ல... பணி வாழ்க்கைதான் பெண்ணுக்கான உண்மையான அதிகாரம் மௌனமாக இன்னல்களை அனுபவிப்பதைவிட வெளியே வந்து உங்களுடைய கனவுகளைத் துரத்திப் பிடியுங்கள்”.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE