105 அரங்கங்கள், விதவிதமான பாரம்பரிய நெல் ரகங்கள்!- திருத்துறைப்பூண்டியில் தொடங்கியது திருவிழா

By கரு.முத்து

நெல் ஜெயராமனால் தொடங்கப்பட்ட புகழ் பெற்ற தேசிய நெல் திருவிழா திருவாரூர் மாவட்டம் திருத்துறைப்பூண்டியில் இன்று தொடங்கியது.

நமது பாரம்பரிய நெல் ரகங்களை மீட்டெடுத்த திருவாரூர் மாவட்டம் கட்டிமேடு கிராமத்தைச் சேர்ந்த நெல் ஜெயராமன் அந்த நெல்லை பாதுகாக்கவும், அதனை அனைத்து விவசாயிகளுக்கும் கொண்டு சேர்க்கவும் தோதாக விவசாயிகள் சந்திப்பு நிகழ்ச்சியாக வருடந்தோறும் நெல் திருவிழாவை நடத்தி வந்தார். அவரது மறைவுக்கு பிறகு ஜெயராமன் இயக்கத்தின் சார்பில் நெல் திருவிழா நடத்தப்பட்டு வருகிறது.

இந்த ஆண்டுக்கான தேசிய நெல் திருவிழா இன்று தொடங்கியது. அதையொட்டி திருத்துறைப்பூண்டி புதிய பேருந்து நிலையத்திலிருந்து பேரணி நடைபெற்றது. இதில் விதை நெல்லை சேமித்து வைக்க விவசாயிகள் பயன்படும் கோட்டை அலங்காரம் செய்து காட்சிப்படுத்தப்பட்டிருந்தது.

இந்த நெல் திருவிழாவில் 105 அரங்கங்கள் அமைக்கப்பட்டுள்ளன. இதில் விவசாயிகளின் பாரம்பரிய நெல் ரகங்கள், அரிசி வகைகள் உள்பட பல்வேறு கைவினைப் பொருட்கள், விவசாயத்துக்கு தேவையான இயந்திர கண்காட்சிகள் அமைக்கப்பட்டுள்ளன.

நெல் திருவிழாவின் முதல் அமர்வில் நெல் திருவிழா ஒருங்கிணைப்பாளர் ராஜு வரவேற்றார். விழாவை செந்தூர்பாரி ஒருங்கிணைத்து நடத்தினார். விழாவில் பள்ளிக் கல்வித் துறை அமைச்சர் மகேஷ் பொய்யாமொழி, மாநில கொள்கை வளர்ச்சித் திட்டக்குழு துணைத் தலைவர் ஜெயரஞ்சன், எம்எல்ஏக்கள் திருத்துறைப்பூண்டி மாரிமுத்து, திருவாரூர் பூண்டி.கலைவாணன், பத்மஸ்ரீ விருதுபெற்ற சேலம் பாப்பம்மாள் உட்பட பலரும் பங்கேற்றனர்.

சிறந்த விவசாயிகளுக்கு நம்மாழ்வார், நெல் ஜெயராமன் ஆகியோரின் பெயரில் விருதுகளையும், பாரம்பரிய நெல் சாகுபடி செய்யும் விவசாயிகளுக்கு நெல் விதைகளையும் அமைச்சர் மகேஷ் பொய்யாமொழி வழங்கினார்.

விருது

அதனைத் தொடர்ந்து அவர், செய்தியாளர்களிடம் கூறுகையில், "விளை நிலங்களை பாதிக்கும் எந்த ஒரு திட்டத்தையும் தமிழக அரசு அனுமதிக்காது. விவசாயிகளின் கோரிக்கைகள் மற்றும் கருத்துக்கள் ஆவணப்படுத்தப்பட்டு அதில் எது தேவையோ அதை தமிழக அரசு செயல்படுத்தி வருகிறது. திமுக அரசு பொறுப்பேற்றவுடன் வேளாண்மை பாதுகாப்பு மண்டலக் குழு கூட்டம் நடைபெற்றது. அந்தக் கூட்டத்தில் விளைநிலங்களை பாதிக்கும் எந்த ஒரு திட்டத்தையும் அனுமதிக்க மாட்டோம் என முதல்வர் தெரிவித்துள்ளார்" என்று கூறினார். தொடர்ந்து தோடர் சமூக மக்களின் நடன நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் நடனமாடியவர்களின் வேண்டுகோளை ஏற்று அமைச்சர் மகேஷ் பொய்யாமொழி, எம்எல்ஏ பூண்டி கலைவாணன் ஆகியோர் அவர்களுடன் நடனமாடினர். நாளை இரண்டாம் நாளாகவும் நெல் திருவிழா தொடர்ந்து நடைபெறுகிறது. அதில் உணவுத் திருவிழாவும் நடைபெறவுள்ளது.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE