கிடுகிடுவென உயர்ந்து வரும் நீர்மட்டம்: ஜூன் 12க்கு முன்பே மேட்டூர் அணை திறக்கப்படுமா?

By காமதேனு

காவிரியில் வரும் அதிக அளவு தண்ணீரால் மேட்டூர் அணை வேகமாக நிரம்பி வருகிறது. இதே அளவு வரத்து தொடர்ந்தால் இன்னும் இரண்டு மூன்று தினங்களில் மேட்டூர் அணை நிரம்பி விடும் என்பதால் ஜூன் 12க்கு முன்பே பாசனத்திற்காக தண்ணீர் திறக்கப்படுமா அல்லது கொள்ளிடம் ஆற்றில் திறக்கப்பட்டு கடலில் விடப்படுமா என்ற கேள்வி எழுந்திருக்கிறது.

காவிரி நீர்பிடிப்பு பகுதியில் பெய்து வரும் கனமழை காரணமாக இன்று காலை நிலவரப்படி பிலிகுண்டுவுக்கு வரும் நீரின் அளவு விநாடிக்கு 50 ஆயிரம் கன அடியாக உள்ளது. ஒகேனக்கல் காவிரியாற்றில் நீர்வரத்து அதிகரித்துள்ளதால் அருவிகளில் தண்ணீர் ஆர்ப்பரித்து கொட்டுகின்றன. பாறைகளை மூழ்கடித்து தண்ணீர் பெருக்கெடுத்து ஓடுகிறது. அருவியில் குளிக்கவும், பரிசல்களில் பயணம் செய்யவும், சுற்றுலாப் பயணிகளுக்கு மூன்றாவது நாளாக தடை விதிக்கப்பட்டிருக்கிறது.

பொதுவாக ஜூன் மாதம் தொடங்கிய பிறகு தென்மேற்கு பருவமழை ஆரம்பித்தால் தான் இந்த அளவுக்கு நீர் காவிரியில் வருவது வழக்கம். ஆனால் இந்த ஆண்டு தென்மேற்கு பருவமழை தொடங்குவதற்கு முன்பாகவே அந்த மழை பெறும் இடங்களில் மிகக் கடுமையான மழை தொடங்கி, சில நாட்களாகவே தொடர்ந்து பெய்து வருகிறது. இதன் காரணமாகவே காவிரி ஆற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது.

மேட்டூர் அணையில் தொடர்ந்து பல நாட்களாகவே 100 அடி தண்ணீர் இருப்பில் இருந்தது. அதனால் தற்போது அணைக்கு வரும் அதிக நீரின் அளவால் அணையின் நீர்மட்டம் மளமளவென உயர்ந்து வருகிறது. இன்று காலை நிலவரப்படி அணையின் நீர்மட்டம் 112 அடியாக இருக்கிறது. வேகமாக அணை நிரம்புவதால் விவசாயிகள் மகிழ்ச்சியடைந்துள்ளனர்.

அதே நேரத்தில் வழக்கமாக அணை திறக்கப்படும் நாளான ஜூன் 12க்கு இன்னும் இருபத்தி இரண்டு தினங்களுக்கு மேல் இருக்கிறது. அதற்குள் அணை நிரம்பிவிட்டால் அந்த தண்ணீரை திறந்துவிட்டே ஆக வேண்டிய கட்டாயம் ஏற்படும். அப்படி ஒரு நிலை வந்தால் பாசனத்திற்காக ஜூன் 12-ம் தேதிக்கு முன்னரே தண்ணீர் திறக்கப்படுமா? அல்லது கொள்ளிடம் ஆற்றில் திறக்கப்பட்டு கடலுக்கு அனுப்பப்படுமா? என்பதுதான் விவசாயிகளின் கேள்வியாக இருக்கிறது.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE