இந்தாண்டு குறுவைக்கு குறை இருக்காது: மேட்டூரில் நீர்வரத்து அதிகரிப்பு

By காமதேனு

மேட்டூர் அணை தொடர்ந்து 100 அடிக்கு மேலே இருப்பதாலும், கடந்த சில நாட்களாக நீர்வரத்து அதிகரிப்பாலும் இந்த ஆண்டு குறுவை மற்றும் சம்பா சாகுபடிக்கு எந்த குறையும் இருக்காது என்று மகிழ்ச்சியில் இருக்கிறார்கள் விவசாயிகள்.

தொடர்ந்து 250 நாட்களுக்கு மேலாக மேட்டூர் அணையின் நீர்மட்டம் 100 அடிக்கு குறையாமல் இருக்கிறது. இந்த நிலையில் அணையின் நீர் பிடிப்பு பகுதிகளில் பெய்து வரும் மழையின் காரணமாக மேட்டூர் அணைக்கான நீர்வரத்து தொடர்ந்து அதிகரித்து வருகிறது. நேற்று காலை வினாடிக்கு 7661 கன அடியாக இருந்த நீர்வரத்து இன்று காலை வினாடிக்கு 9314 கன அடியாக அதிகரித்துள்ளது.

நீர்வரத்து அதிகரித்தன் காரணமாக அணையின் நீர்மட்டம் இன்று காலை நிலவரப்படி 108.60 அடியாக உயர்ந்துள்ளது. அணையிலிருந்து வினாடிக்கு 1500 கன அடி நீர் வெளியேற்றப்பட்டு வருகிறது. அணைக்கான நீர்வரத்து அதிகரித்து வருவதால் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்து உள்ளனர். உரிய காலமான ஜூன் 12-ல் மேட்டூர் அணை திறக்கப்பட்டு விடும், அதன் மூலமாக குறுவை சாகுபடி செய்யலாம், சம்பா சாகுபடிக்கும் எந்தவித குறையும் இருக்காது என்று விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE