திருச்செந்தூர் கடற்கரைப் பகுதியில் கரை ஒதுங்கிய செஞ்சொறி ஜெல்லி மீன்கள்: பக்தர்களுக்கு எச்சரிக்கை

By ரெ.ஜாய்சன்

தூத்துக்குடி: திருச்செந்தூர் கோயில் கடற்கரையில் அதிக அளவு செஞ்சொறி ஜெல்லி மீன்கள் கரை ஒதுங்கியதால் பரபரப்பு ஏற்பட்டது. பக்தர்கள் கவனமுடன் நீராட கோயில் நிர்வாகம் ஒலிபெருக்கி மூலம் அறிவிப்பு செய்தது.

திருச்செந்தூர் கோயில் கடற்கரையில் கடந்த சில மாதங்களுக்கு முன்பு ஜெல்லி மீன்கள் அதிகளவு கரை ஒதுங்கின. இந்த வகை மீன்கள் உடலில் பட்டால் அந்த இடத்தில் அரிப்பு ஏற்பட்டு தீகாயம் போல் மாறிவிடுகிறது. இதனால் பக்தர்கள் பாதுகாப்புடன் நிராட கோயில் நிர்வாகம் எச்சரிக்கை செய்தது. இது குறித்து பக்தர்களிடையே விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது. அதற்குரிய மருந்துகள் கோயில் முதலுதவி மையத்தில் இருப்பு வைக்கப்பட்டது. பின்னர் ஜெல்லி மீன்கள் வருகை குறைந்து காணப்பட்டது.

இதற்கிடையே நீண்ட நாட்களுக்கு பிறகு இன்று காலை 6 மணி முதல் கோயில் கடற்கரையில் அதிக அளவு ஜெல்லி மீன்கள் கரை ஒதுங்கின. சுமார் 30-க்கு மேற்பட்ட ஜெல்லி மீன்கள் கரை ஒதுங்கியதால் அங்கு பணியில் இருந்த கோயில் கடற்கரை பாதுகாப்பு பணியாளர்கள் உடனடியாக கோயில் நிர்வாகம் மற்றும் மீன் வளத்துறை அதிகாரிகளுக்கு தகவல் தெரிவித்தனர். இதனை தொடர்ந்து கோயில் இணை ஆணையர் கார்த்திக், மீன்வளம் மற்றும் மீனவர் நலத்துறை உதவி இயக்குனர் புஷ்ரா ஷபனம், ஆய்வாளர்கள் சுப்பிரமணியன், சிவராமகிருஷ்ணன் ஆகியோர் கரை ஒதுங்கிய ஜெல்லி மீன்களை ஆய்வு செய்தனர்.

இது குறித்து மீன்வளத்துறை அதிகாரிகள் கூறுகையில், “பொதுவாக ஏப்ரல் மற்றும் மே மாதங்களில் இந்த வகையான செஞ்சொறி மீன்கள் மன்னார் வளைகுடா கடல் பகுதிகளில் கடல் நீரின் திசை மாறுபாட்டுக்கு ஏற்ப காணப்படுகிறது. இது கொட்டும் தன்மையுடைய ஜெல்லி மீன்களாகும். ஆதலால் நீரில் இருக்கும் போதோ அல்லது கடற்கரை பகுதிகளில் கிடந்தாலோ அவற்றை கையினால் தொடுதல் கூடாது. அவற்றை அறியாமல் தொடுவதால் ஏற்படும் எரிச்சல் மற்றும் காந்தலை குறைக்க வினிகரை காயம் ஏற்பட்ட பகுதியில் சுமார் ஒரு நிமிடங்கள் தெளித்து பயன்படுத்தவும். பின்னர் கலமைன் அல்லது கலட்ரைல் மருந்தினை உடனடியாக பயன்படுத்தினால் 24 மணி நேரத்துக்குள் ஏற்பட்ட காயம் சரியாகிவிடும்” என்றனர்.

தொடர்ந்து கரை ஒதுங்கிய ஜெல்லி மீன்கள் உடனடியாக அங்கிருந்து அப்புறப்படுத்தப்பட்டு வள்ளி கோயில் கடல் பகுதியில் விடப்பட்டன. மேலும் பக்தர்கள் அதிக நேரம் கடலில் புனித நீராட கூடாது என கோவிலில் நிர்வாகம் சார்பில் ஒலிபெருக்கி மூலம் எச்சரிக்கை செய்யப்பட்டது.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE