இணைந்து வாழ்தலால் பாலியல் குற்றங்கள் அதிகரிப்பு!

By ம.சுசித்ரா

திருமணம் செய்து கொள்ளாமல் இணைந்து வாழ்தல் முறை சட்டப்படி ஏற்றுக்கொள்ளப்பட்டு நடைமுறைக்கு வந்ததால் பாலியல் குற்றங்கள் அதிகரித்திருப்பதாக மத்தியப் பிரதேச உயர் நீதிமன்றம் அண்மையில் தெரிவித்துள்ள கருத்து புதிய சர்ச்சையை கிளப்பியுள்ளது.

மத்தியப் பிரதேச மாநிலம் இந்தூரில், திருமணம் செய்து கொள்ளாமல் இணைந்து வாழ்ந்த ஒரு ஜோடி, கருத்து வேறுபாட்டால் பிரிந்தனர். அதன் பிறகு, அப்பெண்ணுக்கு இன்னொருடன் திருமணம் நிச்சயிக்கப்பட்டது. இதை அறிந்த முன்னாள் ஆண் இணையர், அப்பெண்ணுக்கு நிச்சயம் செய்யப்பட்டவரின் குடும்பத்துக்கு வீடியோ ஒன்றை அனுப்பியுள்ளார். அதில், ’என்னுடன் இணைந்து வாழ்ந்த பெண்ணை மணமுடித்தால் நான் தற்கொலை செய்து கொள்ள நேரிடும் அதற்கான பொறுப்பை நீங்கள்தான் ஏற்க வேண்டிவரும்’ என்றும் மிரட்டல் விடுத்தார். இதனால் அந்தப் பெண்ணின் திருமணம் தடைபட்டது. இதையடுத்து, தனது முன்னாள் இணையர் தன்னை பாலியல் வன்புணர்வு செய்ததாக காவல் நிலையத்தில் அப்பெண் புகார் அளித்தார்.

இந்த வழக்கில் முன் ஜாமீன் கோரிய அப்பெண்ணின் முன்னாள் இணையருக்கு ஜாமீன் வழங்க மறுத்த மத்திய பிரதேச மாநிலத்தின் இந்தூர் உயர் நீதிமன்றக் கிளை நீதிபதி சுபோத், “ அண்மைக் காலமாக அதிகரித்து வரும் இதுபோன்ற குற்றங்களை அவதானிக்கும்போது இந்திய அரசமைப்பு சட்டப்பிரிவு 21, திருமணம் செய்துகொள்ளாமல் இணைந்து வாழ்தலை அனுமதித்ததன் பின்விளைவுதான் இது என்றே சொல்லத் தோன்றுகிறது. இதனால் இந்தியச் சமூகப் பண்பாடு பாழ்பட்டு விட்டது, பிறழ் காம நடத்தைகள் ஊக்குவிக்கப்படுகிறது, மொத்தத்தில் பாலியல் குற்றங்கள் பெருகத்தொடங்கிவிட்டது” என்று தனது கருத்தைப் பதிவு செய்தார்.

இந்நிலையில், இணைந்து வாழ்தல் தொடர்பான பல்வேறு கோணங்கள் குறித்தும் நீதிபதியின் சுபோத்தின் கருத்தை முன்வைத்தும் வழக்கறிஞர்கள் சிலருடன் பேசினோம்.

“எங்களுக்கு எந்தச் சட்டமும் வேண்டாம், நாங்கள் எவ்வித சட்டதிட்ட கட்டுப்பாட்டுக்குள்ளும் வரமாட்டோம், விருப்பப்பட்டால் சேர்ந்து வாழ்வோம் இல்லையேல் பிரிந்து செல்வோம் என்கிற மனப்பான்மையில் இருப்பவர்கள்தான் இணைந்து வாழ்தல் முறையை தேர்ந்தெடுக்கிறார்கள். ஆனால், நண்பர்கள் போல் கூடி வாழ்வோம்; சிக்கல் ஏற்பட்டால் கண்ணியமாகப் பிரிந்து செல்வோம் என்கிற மனப்பக்குவத்தை இந்திய ஆண்கள் இன்றுவரை அடையவில்லை. அதன் மோசமான விளைவுகளைப் பெண்களே அதிக அளவில் சந்திக்கிறார்கள்” என்று தனது தரப்பு வலுவான வாதத்தை முன்வைத்தார் வழக்கறிஞர் சுமதி.

வழக்கறிஞர் சுமதி

“திருமண முறை 100 சதவீதம் பூரணமானது என்று சொல்வதற்கில்லை. ஆனால், அதில்தான் பெண்களுக்குக் குறைந்தபட்ச பாதுகாப்பேனும் உள்ளது. இணைந்து வாழ்தல் முறையால் நிர்க்கதியாகும் பெண்கள்தான் அதிகம். இங்கு பெண்களைப் பற்றி மட்டுமே பேசுவதேன், ஆண்களும் கைவிடப்படுகிறார்களே எனக் கேட்கலாம்! அதுவரை இணைந்து வாழ்ந்த பெண் பிரிந்து செல்ல முடிவெடுத்தால் தன்னுடன் அப்பெண் பாலியல் உறவுகொண்ட தருணத்தை வீடியோ பதிவு எடுத்து வைத்துக்கொண்டு ‘என்னை தவிர நீ வேறு யாருடனும் வாழக்கூடாது’ என்று மிரட்டல் விடுபவர்கள் ஆண்கள்தான்.

இது தவிர, இத்தகைய உறவால் உடல்ரீதியாகவும், மனரீதியாகவும் அதிகம் பாதிக்கப்படுவதும் பெண்கள்தான். உதாரணத்துக்கு, சேர்ந்து வாழ்ந்த காலத்தில் பலமுறை கருக்கலைப்பு செய்ய நேரிட்டால் ஒரு பெண் உடலளவிலும் சிதைவுக்குள்ளாகிறார். அந்தப் பாதிப்பு ஏற்படுத்தும் மன உளைச்சல் அப்பெண்ணின் வாழ்க்கையை பல நேரம் முற்றிலுமாக சூறையாடிவிடுகிறது. ஆகையால் பெண்களின் நலன் கருதியேனும் இணைந்து வாழ்தல் முறையைத் தவிர்ப்பது நல்லது” என்கிறார் சுமதி.

வழக்கறிஞர் அஜிதா

“நீதிமன்றங்களும் ஆணாதிக்க மனநிலையிலிருந்து விடுதலை பெறவில்லை என்பதைத்தான் மத்தியப் பிரதேச நீதிபதியின் கூற்று நிரூபிக்கிறது” என்று தனது வாதத்தை முன்வைக்கத் தொடங்கினார் வழக்கறிஞரும், சமூகசெயற்பாட்டளருமான அஜிதா.

இணைந்து வாழ்தல் முறை பெண்களுக்குப் பாதுகாப்பானதாக இல்லை என்கிற பார்வையும் மத்தியப் பிரதேச நீதிபதியின் தீர்ப்பில் உள்ளது. இது பெண்கள் மீது அக்கறை கொண்ட பார்வைதானே என அஜிதாவிடம் கேட்டபோது, “இணைந்து வாழ்தல் முறையில் எவ்வளவுக்கு எவ்வளவு சுதந்திரம் இருக்கிறதோ அதே அளவுக்குப் பாதுகாப்பு இல்லாத தன்மையும் உள்ளது என்பது உண்மைதான். அதிலும் இதுவரை இணைந்து வாழ்தலுக்கென தனிச்சட்டம் இயற்றப்படவில்லை. வாழ்வதற்கான, தனிநபர் சுதந்திரத்துக்கான உரிமையின் கீழ்தான் இது அனுமதிக்கப்படுகிறது” என்றார்.

தொடர்ந்து அவர் கூறுகையில், “பெரும்பாலும் பெண்களை அடிமைப்படுத்துவதே குடும்ப அமைப்பின் முதன்மையான நோக்கமாக உள்ளது. குழந்தை பெற்றெடுக்க கட்டயப்படுத்துவதும், கணவர் பாலியல் வல்லுறவுக்கு மனைவியை வற்புறுத்துவதும் குடும்ப முறையில் சகஜம். ஆனால், கட்டாயத்தின் பெயரில் வாழ்வதல்ல; விருப்பத்தின் அடிப்படையில் இல்வாழ்க்கை நடத்துவது என்பதுதான் இணைந்து வாழ்தலின் சாரம். அதேபோல, முறை தவறி போனாேலோ வன்முறையை கையாண்டாலோ உடன் வாழும் பெண் பிரிந்து செல்ல நேரிடும் என்ற பொறுப்புணர்வையும் பயத்தையும் ஆண்களுக்கு இம்முறை ஏற்படுத்துகிறது. தன்னுடைய உரிமையைப் பற்றி, உடலைப் பற்றி, தனது சுயாட்சியைப் பற்றிய தெளிவான புரிதலை கைக்கொள்ளும் பெண்கள் மட்டுமே இணைந்து வாழ்தலின்போது தன்னை அதிகாரப்படுத்தும் நிலைக்கு நகர்கிறார்கள். இத்தகைய புரிதல் இல்லாத பெண்களுக்குத் திருமணம் மூலமாக உண்டாகும் குடும்ப அமைப்புதான் ஒரே தீர்வு. அதில்தான் சட்ட ரீதியான பாதுகாப்பும் வலுவாக உள்ளது” என்றார்.

இணைந்து வாழ்பவர்களுக்குப் பிரச்சினை ஏற்பட்டால் அவர்கள் சட்டத்தின் உதவியைக் கோரமுடியுமா என கேட்டதற்கு, ”இத்தனை ஆண்டுகள் இணைந்து வாழ்ந்தால் சட்டப்படி செல்லும் என்றெல்லாம் இதுவரை வரையறுக்கப்படவில்லை. அதேசமயம், சமூகத்தின் பார்வையில் கணவன் - மனைவியாக அந்தத் தம்பதி இணைந்து ஒரே வீட்டில் வாழ்ந்திருந்தால், வங்கியில் கூட்டுக் கணக்கு வைத்திருந்தால், அவர்களுக்குக் குழந்தை பிறந்திருந்தால், இருவரும் சேர்ந்து சொத்து வாங்கியிருந்தால், காப்பீட்டுத் திட்டத்தில் இணையரின் பெயராகச் சேர்க்கப்பட்டி ருந்தால் அவை அத்தாட்சியாக ஏற்றுக் கொள்ளப்படுகிறது. அது மட்டுமின்றி, இணைந்து வாழ்பவர்களுக்கு குடும்ப வன்முறை சட்டமும் பொருந்தும். ஒருவேளை, இணையரால் சித்தரவதைக்கு ஆளானால் குடும்ப வன்முறை சட்டத்தின் உதவியையும் அவர்கள் நாடலாம்” என்றார் அஜிதா.

அடக்கு முறையிலிருந்து விடுபட்டு ஆணும், பெண்ணும் சமமாக இணைந்து பயணம் மேற்கொள்வதுதான் இணைந்து வாழ்தல் முறை என்பது ஆதர்சம். ஆனால், சுதந்திரமும் பொறுப்பும் ஒரே நாணயத்தின் இரு பக்கங்கள் என்கிற புரிதல் நம் சமூகத்தில் எட்டப்படாதவரை இணைந்து வாழ்தல் முறை என்பது ஆண்களைக் காட்டிலும் பெண்களுக்குப் பாதகமானது என்பதே நிதர்சனம்!

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE