சுவை மணக்கும் புகைப்படம்: காஷ்மீர் கபாப் நளபாகரைப் படம் பிடித்தவருக்குச் சர்வதேச விருது

By காமதேனு

உணவு சார்ந்த புகைப்படக் கலைஞர்களுக்காக வழங்கப்படும் ‘பிங்க் லேடி’ விருதை வென்றிருக்கிறார், இந்தியாவைச் சேர்ந்த தேவ்தத்தா சக்கரவர்த்தி. காஷ்மீர் தலைநகர் ஸ்ரீநகரில் உள்ள சாலையோர உணவகத்தின் சமையல் கலைஞர் கபாப் தயாரிக்கும் அழகை நேர்த்தியாகப் பதிவுசெய்த அந்தப் புகைப்படம் இந்த விருதை அவருக்குத் தேடித் தந்திருக்கிறது.

என்ன விருது அது?

‘பிங்க் லேடி’ சிறந்த உணவு புகைப்படக் கலைஞர் விருது 2011 முதல் வழங்கப்பட்டுவருகிறது. உலகம் முழுவதுமிருந்து, உணவு சார்ந்த பின்னணியில் எடுக்கப்படும் சிறந்த புகைப்படங்கள் மற்றும் கணொலிகளுக்கு இந்த விருது வழங்கப்படுகிறது. இதில் பல்வேறு பிரிவுகளின்கீழ் விருதுகள் வழங்கப்பட்டாலும், ஒட்டுமொத்தமாகச் சிறந்த புகைப்படம் எனும் விருதும் வழங்கப்படுகிறது. அந்த வகையில், தனது அபாரக் கலைத் திறன் மூலம் அனைவரையும் அசத்தி இந்த விருதைக் கைப்பற்றியிருக்கிறார் தேவ்தத்தா.

பாராட்டித் தள்ளிய நிறுவனர்

ஸ்ரீநகரின் கய்யாம் சவுக் பகுதியில் இந்தப் புகைப்படத்தை தேவ்தத்தா எடுத்திருக்கிறார். பகல் நேரங்களில் வழக்கமான தெருவாகக் காணப்படும் கய்யாம் சவுக், மாலை நேரங்களில் மணம் நிறைந்த உணவுத் தெருவாகிவிடும். அங்கு சாலையோர உணவகங்களில் ருசியான உணவு வகைகள் சுடச்சுடத் தயாராகும். குறிப்பாக, அசைவ உணவான கபாப் அங்கு பல வாடிக்கையாளர்களைக் கவர்ந்திழுக்கும். அப்படியான ஒரு மாலை நேரத்தில், சாலையோர சமையல் கலைஞர் கபாப் உணவைத் தயாரிக்கும் அழகை தேவ்தத்தா தனது கேமராவில் பதிவுசெய்தார்.

உலகம் முழுவதும் இருந்து அனுப்பப்பட்ட பல்வேறு புகைப்படங்களுக்கு நடுவே இதை ஒட்டுமொத்தமான சிறந்த படமாகத் தேர்ந்தெடுத்திருக்கிறார்கள் ‘பிங்க் லேடி’ தேர்வுக்குழுவினர். உணவகம் ஒன்றின் உரிமையாளரும் ‘மாஸ்டர்செஃப்’ சமையல் போட்டி நிகழ்ச்சியில் நடுவராகப் பணியாற்றியவருமான மோனிகா கலெட்டி இந்த ஆண்டுக்கான வெற்றியாளர்களின் பெயர்களை யூடியூப் நேரலையில் இன்று அறிவித்தார்.

திரட்சியான புகை, பொன்னிற வெளிச்சம் ஆகியவற்றின் பின்னணியில், உணவைப் பரிமாறும் அக்கறையுடன் கூடிய சமையல் கலைஞரின் முகபாவனையை தேவ்தத்தா அற்புதமாகப் பதிவுசெய்திருப்பதாக ‘பிங்க் லேடி’ விருதின் நிறுவனர் கரோலின் கேன்யான் புகழ்ந்திருக்கிறார். தீப்பொறி தெறிக்க தயாராகும் அந்த உணவின் வாசனையைக் கூட நம்மால் உணர முடியும் என்றும் அவர் பாராட்டியிருக்கிறார்.

படத்தைப் பார்த்தால் பலருக்கும் நிச்சயம் பசியெடுக்கும்!

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE