சிறகை விரி உலகை அறி-47: மரணச் சுவர்!

By சூ.ம.ஜெயசீலன்

தேகம் தழுவிய மழைத்துளி, சூடு தணித்த மர நிழல், முத்தமிட்டு விலகிய பந்துகள், வாகனம் தெளித்த செந்நீர், ரகசியக் கதையாடல்கள், நாய்களின் அந்தரங்கம் அனைத்தின் சாட்சிகளாய் நிற்கின்றன நம்வீட்டுச் சுவர்கள். கொலைகளின் சாட்சியாய் ஒரு சுவர் ஆஸ்விட்ச்சில் நிற்கிறது.

கைதிகளின் கழிவறை

வாழ்வின் சிலுவைகள்

கைதிகளின் வாழ்க்கையையும் வாழ வகையற்ற பொழுதுகளையும் பார்த்துக்கொண்டே சென்றபோது, 1941-1945 வரை கைதிகள் பயன்படுத்திய கழிவறையைப் பார்த்தோம். மேற்கத்திய பாணியில் அமைந்திருந்தது. ஒரே அறையில் பல கழிவறைக் கோப்பைகள் இருந்தன. தண்ணீர் உள்ள பெட்டி பின்பக்கச் சுவரில் உயரத்தில் இருந்தன. “ஆரம்ப காலத்தில், வாளியில் தண்ணீர் கொண்டு செல்லும் முறைதான் இருந்தது. ஆயிரக்கணக்கான கைதிகள் இருந்த இடத்தில் போதுமான கழிப்பறைகளே இல்லை” என்றார் வழிகாட்டி.

‘தலைவர்களின்’ அறை

தலைவர்களாக இருந்த கைதிகளின் அறை மாதிரியை அடுத்ததாகப் பார்த்தோம். எல்லா கைதிகளையும் மேற்பார்வையிடுவதும், வேலை வாங்குவதும், கட்டுப்படுத்துவதும் நாஜி அதிகாரிகளால் இயலாதல்லவா! அதனால், கைதிகள் சிலரை மேற்பார்வையாளர்களாக நியமித்திருந்தார்கள். சிறையில் அடைக்கப்பட்ட ஜெர்மன் குற்றவாளிகளே பெரும்பாலும் தேர்வு செய்யப்பட்டார்கள். அதிகபட்ச அதிகாரத்துடன் வலம் வந்த ‘இத்தலைவர்கள்’ மிகக்கொடூரமாக வேலை வாங்கினார்கள். கைதிகளின் அறையில், மூன்றடுக்கு கட்டில்கள் இருந்ததைப் பார்த்தோம். ஒவ்வோர் அடுக்கிலும் ஒருவர் தூங்குவதற்குதான் இடம் இருக்கிறது. ஆனாலும், இரண்டு அல்லது மூன்றுபேர் தூங்கியுள்ளார்கள்.

அடுத்த கட்டிடத்துக்குள் நுழையும்போது, அங்கு நடந்த கொடுமைகளை வழிகாட்டி விவரித்தார், “பலநூறு பெண் கைதிகள், குறிப்பாக, யூத பெண்கள் இந்த இரண்டு மாடி கட்டிட அறைகளில் அடைக்கப்பட்டிருந்தார்கள். இங்கேதான், ஜெர்மன் மகப்பேறு மருத்துவர் பேராசிரியர் கார்ல் கிளாபர்க் (Carl Clauberg), கருவுற இயலாமல் செய்வதற்கான பரிசோதனைகளை பெண்கள் மீது நடத்தினார். தங்களுக்கு அளிக்கப்பட்ட மருத்துவத்தால் பெண்கள் சிலர் இறந்தார்கள். சிலர் கொல்லப்பட்டார்கள்.

ஆய்வின் அடுத்தக்கட்டமாக, அவர்களின் பிணங்களை பிண பரிசோதனைக்குப் பயன்படுத்தினார்கள். இவை இரண்டில் இருந்தும் தப்பியவர்கள், வாழ்நாள் முழுவதும் நோயாளிகளாக விடப்பட்டார்கள். ஜெர்மனியின் மற்ற சில மருத்துவர்களுமேகூட இந்தக் கட்டிடத்தில் பெண்கள் மீது மருத்துவ பரிசோதனைகளை மேற்கொண்டுள்ளனர்.”

கதறல் கேட்ட சுவர்

கட்டிடப் பிரிவு 10 மற்றும் 11 இரண்டுக்கும் இடையில் முற்றம் இருக்கிறது. 1941- 1943 காலகட்டத்தில் ஆயிரக்கணக்கானோர் இவ்விடத்தில் சுட்டுக்கொல்லப்பட்டார்கள். போலந்து நாட்டு அரசியல் கைதிகள், ரகசிய இயக்கங்களின் தலைவர்கள், உறுப்பினர்கள், முகாமிலிருந்து தப்பிக்க முயன்றவர்கள், வெளி உலகத்துடன் தொடர்பில் இருந்தவர்கள், அருகில் இருந்த நகரங்களில் மரண தண்டனை விதிக்கப்பட்ட போலந்து நாட்டினர் அனைவரும் இங்கே கொண்டுவரப்பட்டு சுட்டுக் கொல்லப்பட்டுள்ளனர்.

மரணச் சுவர்

ஜெர்மன் ஆக்கிரமிப்புக்கு எதிராகப் போராடியவர்களை பழிக்குப்பழி வாங்குவதற்காக ஆண்கள், பெண்கள் மற்றும் குழந்தைகளை பணயக்கைதிகளாக கொண்டு வந்து கொன்றார்கள். பிற நாடுகள் மற்றும் இனத்தைச் சேர்ந்தவர்களும் சில வேளைகளில் இங்கே கொல்லப்பட்டுள்ளனர். அனுமதிக்கப்பட்ட 25 சவுக்கடிகளுக்குப் பதிலாக, 70 சவுக்கடிகள் வரை கொடுத்ததும் உண்டு. சிறைக் கைதிகளின் கைகளை முதுகுக்குப் பின்னால் கட்டி கம்பத்தில் தூக்கிலிட்டு கொன்றார்கள். இதை ‘கம்பம் சித்தரவதை’ என்று அழைத்தார்கள். 1944-ல் முகாம் அதிகாரிகளால் மரணச் சுவர் நீக்கப்பட்டது. அதேவேளை, வேறு இடத்தில், விஷவாயு கூடத்தில் தண்டனை இன்னும் அதிக எண்ணிக்கையில் தொடர்ந்தது.

முற்றத்துக்குள் சென்றோம். ‘போர் முடிந்தபிறகு, அருங்காட்சியக நிர்வாகத்தால், சுவரின் ஒரு பகுதி மறுபடியும் கட்டப்பட்டது. நீங்கள் இப்போது நுழையும் வளாகம், ஆயிரக்கணக்கானோர் கொலைசெய்யப்பட்ட வளாகம். தயவுசெய்து, இங்கே அமைதி காத்திடுங்கள். அவர்களின் துயரங்களை நினைவுகூருங்கள், அவர்களின் வாழ்வுக்கு மரியாதை செலுத்துங்கள்’ என்று எழுதியிருந்தது. உள்ளே சென்றோம். உறவினர்களும், பயணிகள் பலரும் விளக்கேற்றி, மலர்கள் வைத்திருந்தார்கள். நாங்களும் வணக்கம் செலுத்தினோம்.

கட்டிடப் பிரிவு 11-ன் வரைபடம்

நாட்டுப்பற்று

இந்தச் சுவரைப் பற்றியும் கொல்லப்பட்டவர்கள் குறித்தும் நாஜி அதிகாரி பெரி பிராட் (Pery Broad) சொன்ன தகவலை வாசித்தேன், ‘கட்டிடப் பிரிவு 11-ன் முற்றத்தில், சுற்றுச்சுவருக்கு முன்பாக ஒரு கறுப்புச் சுவர் வைக்கப்பட்டது. ஆயிரக்கணக்கான அப்பாவி மக்களின் எல்லைக்கல்லாக அச்சுவர் மாறியது. பணத்துக்காகவும், பொருளுக்காகவும் தங்கள் தந்தை நாட்டை காட்டிக்கொடுக்க விரும்பாதவர்கள்; ஆஸ்விட்ச் நரகத்திலிருந்து எப்படியாவது தப்பிக்க வேண்டும் என முயன்று, அவர்களின் கேடுகெட்ட விதியினால், கைது செய்யப்பட்டு மறுபடியும் கொண்டுவரப்பட்டவர்கள்; எலும்பும் தோலுமாக தள்ளாடி நிமிர்ந்து நிற்கவே முடியாயதவர்கள் எல்லோரும் சிறை கண்காணிப்பாளரால் சுட்டுக் கொல்லப்பட்டார்கள். அதில் சிலர் பல மாதங்களாக துர்நாற்றமுள்ள பாதாளச் சிறையில் செத்த பிணங்கள் போல கிடந்தவர்கள்.

விலங்குகள்கூட அதில் தாக்குப்பிடிக்க முடியாது. சாகும் முன்பாக கடைசி நொடியில், ’போலந்து வாழ்க... போலந்தின் சுதந்திரம் வாழ்க’ என பலர் கத்தினார்கள். ஆமாம், யூதர்களும் போலந்து நாட்டினரும் அப்படித்தான் செத்தார்கள். ஆனால், தங்களை விட்டுவிடும்படி கெஞ்சியதாக, அழுததாக நாஜிக்கள் தொடர்ந்து சொல்லிக்கொண்டிருக்கிறார்கள்.’

மரண வீடு

கட்டிடப் பிரிவு 11-க்கு ‘மரணத் தொகுதி’ (Death Block) என்று பெயர். முகாமின் மத்திய சிறையாக இப்பகுதி இருந்துள்ளது. முகாமின் தொடக்க காலத்தில், யூத ஆண்கள் மற்றும் போலந்து பாதிரியார்கள் உள்ளிட்ட தண்டனைப் பிரிவைச் சேர்ந்த அனைவரையும் இங்குதான் அனுப்பினார்கள். முதுகு ஒடியும் அளவுக்கு வேலை பார்த்தே பலர் செத்தனர். எதிர்ப்பு இயக்கங்களில் சேர்ந்து செயலாற்றியதாக சந்தேகத்துக்குரிய போலந்துக்காரர்கள், ரகசிய செயல்களில் ஈடுபட்டவர்கள், தப்பிக்க முயன்றவர்கள், கலகங்களை ஒருங்கிணைத்தவர்கள் மற்றும் வெளியுலகத்துடன் தொடர்பில் இருந்தவர்கள், சிறைக் கைதிகளுக்கு வெளியில் இருந்து உதவிய போலந்து நாட்டினர் என ஆண்களும் பெண்களும் இங்கே வைக்கப்பட்டிருந்தனர். மிகக்கொடூரமான குறுக்கு விசாரணைக்குப் பிறகு, பொதுவாக, சுட்டுக் கொல்லப்பட்டனர். இறந்த கைதிகளின் உடல்களை எரிப்பவர்கள் தங்கியிருக்கும் பகுதியாகவும் சில காலம், இக்கட்டிடம் இருந்தது.

கைதிகளின் அறை

கட்டிடத்தின் தரைத்தளத்தில் நுழைந்தோம். வலது பக்கமும் இடது பக்கமும் அறைகள். நடுவில் நடந்தோம். தரைத்தளத்தில் அதிகாரிகளின் அறைகள், விசாரணை அறைகள், சுடப்படுவதற்கு முன்பாக ஆடை கழற்றும் இடம் உள்ளன. இங்கிருந்துதான் கைதிகளை நிர்வாணமாக அழைத்துச் சென்று மரணச் சுவரில் சுட்டுக் கொன்றார்கள். சித்திரவதை செய்யப்படுகின்ற சுடப்படுகின்ற சத்தத்தை கட்டிடத்துக்குள் இருந்த கைதிகள் கேட்டு அச்சத்திலேயே வாழ்ந்தார்கள்.

நடுவில் உள்ள படி வழியாக மேல் தளத்துக்குச் சென்றோம். இருட்டு, குறுகலான வழிகள், உயரமும் குறைவு. தலை இடித்துவிடாலும், குழுவை விட்டு பிரிந்துவிடாமலும் இருக்க மிகக்கவனமாக நடந்தேன். கைதிகள் மொத்தமாகத் தங்க வைக்கப்பட்டிருந்த நீண்ட பொது அறைகள் அங்கு இருந்தன.

பிறகு, கட்டிடத்தின் தரைத்தளத்துக்கு வந்து, அங்கிருந்து கீழ்தளத்துக்குச் சென்றோம். முகாம் விதிமுறைகளை மீறியவர்களுக்கான தண்டனைப் பகுதியாக இத்தளம் விளங்கியது. 28 அறைகள் இங்கே உள்ளன. ‘1941-செப்டம்பர் 3-ம் தேதி முதல் 5-ம் தேதிவரை இப்பகுதியில்தான், யூதர்களை விஷவாயு மூலம் கொல்வதற்கான பரிசோதனையாக, முகாம் மருத்துவமனையில் இருந்த 600 சோவியத் மற்றும் 250 அரசியல் கைதிகளை விஷவாயு செலுத்திக் கொன்றார்கள்’ என்று எழுதியிருந்தது. எந்தச் சிறையையும் நின்று பார்க்க நேரமில்லை. நடந்துகொண்டே பார்த்தோம். எல்லார் முகத்திலும், சிறையின் இருளும், துடிதுடித்து இறந்தவர்களின் துயரமும் படிந்திருந்தது.

அறை எண் 21

சிலுவையில் இயேசு தொங்குவது போன்ற ஓவியத்தை 21-வது அறையின் சுவரில் பார்த்தேன். தன் தனிமைக்கும் துயரத்துக்கும் வடிகாலாக பக்தியையும் ஓவியத்தையும் யாரோ ஒரு கைதி பயன்படுத்தியிருக்கிறார். 8 மற்றும் 20-ம் எண் சிறைகள் இருட்டு சிறைகள் எனப்பட்டன. இங்கே மிகக் குறைவான காற்றும் வெளிச்சமுமே உட்புகும். நா வறண்டு, மூச்சுவிட முடியாமல் காற்றுக்காக ஏங்கித் துடிதுடித்து இறந்தார்கள். 22-ம் சிறை, நிற்கும் சிறை. மிகச் சிறிய இடம். படுக்க முடியாது. 90 செ.மீ x 90 செ.மீ இட அளவில் ஒரே நேரத்தில் 4 கைதிகளை நிற்க வைத்து தண்டனை கொடுத்தார்கள். அவர்கள் நின்றபடியே செத்து விழுந்தார்கள்.

அறை எண் 18

1941-ல் பட்டினிபோட்டு கைதிகளைக் கொல்வதும் கீழ்த்தளத்தில்தான் நடந்தது. உயிருடன் இருக்கிறார்களா இல்லையா என்பதை கதவின் சிறு ஓட்டை வழியாக அதிகாரிகள் பார்த்து அறிந்தார்கள். மாக்சிமில்லியன் கோல்பே எனும் பாதிரியார், தனக்கு முன்பின் அறிமுகமில்லாத கைதிக்காக பட்டினி கிடந்து உயிர்விட்ட அறை எண் 18 இத்தளத்தில்தான் உள்ளது. 1980 அக்டோபர் 10-ல் கோல்பேயை புனிதராக அறிவித்தது கத்தோலிக்க திருச்சபை. வரிசையாக வந்துகொண்டிருந்த மக்களிடம், ‘ஒரு நிமிடம்’ என்று சொல்லிவிட்டு அறையைப் படம் எடுத்தேன்.

(பாதை நீளும்)

பெட்டி செய்தி:

மதம் கடந்த மனிதம்

மாக்ஸிமில்லியன் கோல்பே உயிர்நீத்த இடத்துக்கு, வருகைதந்த கத்தோலிக்கத் திருச்சபையின் திருத்தந்தையர் வழங்கிய மெழுகுதிரிகள் அறை எண் 18-ல் வைக்கப்பட்டுள்ளன. ஆஸ்விட்ச்சுக்கு அருகில் வோடோவைஸில் பிறந்து, இரண்டாம் உலகப் போரின் துயரத்தை அனுபவித்திருந்த திருத்தந்தை இரண்டாம் ஜான் பால் இவ்விடத்துக்கு வந்தபோது, “இதைப்போன்ற எத்தனையோ சாகசங்கள் இங்கே நடந்துள்ளன. அவை அனைத்தும், வெவ்வேறு நம்பிக்கைகள், வெவ்வேறு கருத்தியல் உள்ளவர்களால் நடத்தப்பட்டுள்ளது – நிச்சயமாக சமய நம்பிக்கையினால் மட்டுமல்ல” என்றார்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE