கியாஸ் அடுப்பு வேகத்தில் ஒரு விறகடுப்பு!

By கரு.முத்து

ஆயிரம் ரூபாயைத் தாண்டி ஆட்டம்காட்டிக் கொண்டிருக்கிறது கியாஸ் விலை ஏற்றம். இன்னொரு பக்கம், என்னதான் கியாஸில் வேகமாக சமைத்தாலும், விறகடுப்பில் சமைப்பது போன்று ருசி இருப்பதில்லை என்று புலம்புகிறார்கள் பாரம்பரியத்தை விரும்புகிறவர்கள்.

இப்படியான இரண்டு தரப்பினரையும் ஒருசேர குஷிப்படுத்தும் விதமாக ஒரு அசத்தல் கண்டுபிடிப்பைத் தந்திருக்கிறார் சிதம்பரத்தைச் சேர்ந்த பொற்கொல்லர் ஒருவர். ஆம், கொஞ்சமே கொஞ்சமாய் விறகு வைத்து கியாஸைப் போன்றே எரியும் நவீன அடுப்பைத் தயாரித்திருக்கிறார் சிதம்பரத்தைச் சேர்ந்த வேல்முருகன். 12-ம் வகுப்புவரை படித்துள்ள இவர், சிறுவயதிலிருந்தே கவரிங் நகை செய்யும் தொழிலில் இருக்கிறார். விவசாயத்தில் தீராத ஆர்வம் உள்ள இவர், சுற்றுச்சூழலைக் காப்பதில் கரிசனம் காட்டுபவர்.

நகைத் தொழிலில் நெருப்புதான் பிரதானம். அப்படி நகை செய்யும்போதுதான் திடீரென சிந்தனை உதித்து இந்த நவீன விறகு அடுப்பை உருவாக்கியுள்ளார் வேல்முருகன். கியாஸ் இல்லாமல் சிறுசிறு சுள்ளிகளைக் கொண்டு, கியாஸைவிட எளிதாக சமைத்துவிடும் வகையில் இந்த அடுப்பை உருவாக்கியிருக்கிறார். விஷயம் கேள்விப்பட்டு வேல்முருகனின் கவரிங் நகை பட்டறைக்குச் சென்றோம்.

பட்டறையில் வேல்முருகன்...

நாம் போன சமயத்தில் தனது நவீன அடுப்புக்கு உயிரூட்டிக் கொண்டிருந்தார் வேல்முருகன். திடீரென பார்ப்பவர்களுக்கு அது கியாஸ் அடுப்பு என்றுதான் தோன்றும். அதே வடிவில், அதே அளவில் இருக்கிறது அந்த அடுப்பு. ஆனால் கியாஸைவிட அதிக சுவாலை இருக்கிறது. அதனைத் தேவைக்கேற்ப கூட்டவும், குறைக்கவும் முடிகிறது. எல்லாம் கியாஸ் அடுப்பு போன்றே இருந்தாலும் அந்த அடுப்பு கியாஸில் எரியவில்லை; சிறிய சுள்ளிகளில் தான் எரிகிறது. சுள்ளி எரிவதற்கு சாதாரண காற்று குழாய் வழியாக அனுப்பப்பட்டு நெருப்பு நன்கு எரிவதற்கு உதவுகிறது.

இரண்டு மூன்று சிறு சுள்ளிகளை ஒருபக்கத்தில் வழக்கமாக பர்னர் இருக்கும் இடத்தில் உள்ள அடுப்பில் வைத்து அதில் கொஞ்சமாய் எண்ணெய் ஊற்றி அடுப்பைப் பற்ற வைக்கிறார். நெருப்பு பிடித்ததும் இன்னொரு பக்கம் பர்னர் இருக்கும் இடத்தில் சிறு ஃபேனை கவிழ்த்து வைத்து அதை ஓடவிட்டால் அதிலிருந்து வரும் காற்று குழாய் மூலமாக விறகு எரியும் இடத்திற்கு சென்று அதை வேகமாக எரியவைக்கிறது. காற்றுத் தொடர்ந்து கிடைப்பதால் புகை வருவதில்லை. அடுப்பும் அணைவதில்லை. முழுமையான திறனுடன் எரிகிறது.

’’இந்த அடுப்பில் கியாஸைவிட குறைவான நேரத்தில் சமைத்துவிடலாம். ஐந்து பேர் கொண்ட ஒரு குடும்பத்துக்கு சமைக்க ஒரு கிலோ அளவுக்கு சுள்ளிகள் அல்லது விறகு இருந்தால் போதும். அக்கம் பக்கத்தில் கிடைக்கும் எந்த விறகாக இருந்தாலும் போதும், அதைக்கொண்டு அடுப்பை எரிக்கலாம்” என்று உற்சாகமாக பேசத் தொடங்கினார் வேல்முருகன்.

’’நகை செய்ய தேவைப்படும் நெருப்பு அடிக்கடி அணைந்துவிடும் போது அப்படி அணையாமல் இருக்க என்ன செய்யலாம் என்று யோசித்தேன். அப்போதுதான் அதில் காற்று செலுத்தலாம் என்ற எண்ணம் தோன்றியது. நம் முன்னோர்கள் கொல்லர் உலைக்களத்தில் பயன்படுத்திய உத்திதான் இது. இதனையே காலத்துக்கு ஏற்ப நவீன வகையில் பயன்படுத்திக்கொள்ள திட்டமிட்டு இப்படி ஒரு அடுப்பை உருவாக்கினேன்.

இதற்காக பெரிதாக ஸ்கெட்ச் போட்டெல்லாம் திட்டம் தயாரிக்கவில்லை. எனது மனதில் தோன்றிய ஒரு வடிவத்தை நானே உருவகம் செய்து கொண்டு அதை வெல்டிங் பட்டறை மூலம் வடிவமைத்தேன். இப்போது, ஒருபக்கம் நெருப்பும், இன்னொரு பக்கம் காற்றுக்கான காற்றாடியும் இருக்குமாறு இந்த அடுப்பு உள்ளது. விரைவில் இரண்டு பக்கமும் அடுப்பும் நடுவில் காற்றாடியும் வைக்கும் வகையில் அடுப்பை தயாரிக்க இருக்கிறேன்.

அந்த அடுப்பு

வெறும் 1,600 ரூபாய் இருந்தால் போதும் இந்த அடுப்பை எளிதில் தயாரித்துவிடலாம். இந்த அடுப்பைப் பற்றி கேள்விப்பட்டு அக்கம் பக்கத்தினர் தங்களுக்கும் அடுப்பு தயார்செய்து தரும்படி கேட்கிறார்கள். இருநூறு ரூபாய் லாபம் வைத்து 1,800 ரூபாய்க்கு அவர்களுக்கு அடுப்பை தயாரித்துக் கொடுக்கிறேன். இதுவரை ஐம்பதுக்கும் மேற்பட்டவர்கள் இந்த அடுப்பை வாங்கிச் சென்று பயன்படுத்தி வருகிறார்கள். யாரிடமிருந்தும் எந்த புகாரும் வரவில்லை. அனைவருமே இதனால் தங்களுக்கு நல்ல பயன் கிடைப்பதாகவும், சமையலும் சுவையாக இருப்பதாகவும் சொல்லிப் பாராட்டுகிறார்கள்.

இந்த அடுப்பில் பயன்படுத்தப்படும் ஃபேன் 22 வாட்ஸ் திறன் கொண்டது. அதனால் அதிக மின்சாரச் செலவும் ஏற்படாது. 72 மணிநேரம் இயங்கினால்தான் இதற்கு ஒரு யூனிட் மின்சாரம் செலவாகும். அதன்படி பார்த்தால் மாதத்துக்கு 5 யூனிட்டுக்கு மேல் ஆகவே ஆகாது. ஒரு நாளைக்கு சமைக்க ஒரு கிலோ விறகு இருந்தால் போதும் என்பதால் நாளொன்றுக்கு அதிகபட்சம் 10 ரூபாய் மட்டுமே செலவாகும். சமையல்கட்டில் கியாஸ் அடுப்பு இருக்கும் இடத்திலேயே வைத்து இந்த அடுப்பை பயன்படுத்திக் கொள்ளலாம்.

அடுப்புடன் வேல்முருகன்...

கரன்ட் கட்டானால் என்ன செய்வது என்ற கவலை வேண்டாம். அதுபோன்ற நேரத்தில் அடுப்பில் இரண்டு மூன்று சொட்டு வேஸ்ட் ஆயிலை விட்டால் போதும் தீ சுவாலை பழையபடி எரியத் தொடங்கும். தொடர்ந்து சமையலை முடித்துக் கொள்ளலாம். விறகும் தீர்ந்துபோய், மின்சாரம் இல்லாமல் காற்றாடியும் இயங்காமல் போனாலும்கூட கவலைப்பட வேண்டாம். அடியில் கிடக்கும் தணலில் மட்டுமே பத்து நிமிடத்துக்கு சமையல் செய்யலாம்” என்று தனது அரிய கண்டுபிடிப்பின் பெருமைகளை அடுக்கிக் கொண்டே போகிறார் வேல்முருகன்.

தேவைகளே பல புதிய கண்டுபிடிப்புக்களுக்கு வித்தாக இருக்கும். அப்படிப்பட்ட புதிய கண்டுபிடிப்புக்கள் உலகில் மகத்தான மாற்றங்களையும் உருவாக்கி இருக்கின்றன. தற்போது தறிகெட்டு எகிறும் கியாஸ் விலை உயர்வால் நடுத்தர மக்கள் மிகுந்த நிதி நெருக்கடிக்கு உள்ளாகி வருகிறார்கள். அந்த மக்களுக்கெல்லாம் வேல்முருகனின் இந்த கண்டுபிடிப்பு நிச்சயம் கைகொடுக்கும்!

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE