சிறைக்குள் செடி வளர்க்கும் மகேந்திரன்!

By கரு.முத்து

கடந்த வாரத்தில் திருச்சியைச் சேர்ந்த ‘தண்ணீர்’ அமைப்புக்கு மகேந்திரன் கொடுத்திருக்கும் 2 ஆயிரம் மரக் கன்றுகளையும் சேர்த்தால் மொத்தம் 30 ஆயிரம் மரக்கன்றுகளுக்கும் மேல் கணக்காகிறது. மரக் கன்றுகளை மாத்திரமல்ல... இதுவரை ஐந்து லட்சம் விதைகளை சேகரித்து, சேமித்து அதையும் இயற்கை ஆர்வலர்களுக்குக் கொடுத்திருக்கிறார் ஆர்.மகேந்திரன்.

இது மற்றவர்களுக்கு சாதாரணமான விஷயமாக தோன்றலாம். ஆனால் மகேந்திரனை பொறுத்தவரை இது ஒரு சாதனை. காரணம், இவர் திருச்சி மத்திய சிறையின் சிறப்பு முகாமில் இருக்கும் ஒரு கைதி!

ஆட்சியர் முன்னிலையில் மரக்கன்றுகள் வழங்கும் மகேந்திரன்...

யார் இந்த மகேந்திரன்... இவர் எப்படி கைதியானார்... மரம் வளர்க்கத் தொடங்கியது எப்போது? என்பதெல்லாம் பெரிய கதை.

இலங்கையைச் சேர்ந்த மகேந்திரன், அங்கே உள்நாட்டுப் போர் உச்சம் பெற்றிருந்த நேரத்தில் 1990-ம் ஆண்டு தனது தாய் ராகினி, தந்தை ராமரின் கைபிடித்து தம்பி, தங்கையுடன் 14 வயது சிறுவனாக ராமேஸ்வரம் வந்தவர். அங்கே அகதிகளாக பதிவுசெய்யப்பட்டு வேலூர் மாவட்டம் காவேரிப்பாக்கத்தில் உள்ள அகதிகள் முகாமில் தங்க வைக்கப்பட்டது இந்தக் குடும்பம். 1991-ல் ராஜீவ் காந்தி படுகொலைக்குப் பிறகு பாதுகாப்பு கருதி அங்கிருந்து பாலாறு அணைக்கட்டு பகுதிக்கு மாற்றப்பட்டார்கள். அங்கு போனபிறகு தான் இயற்கை ஆர்வலரானார் மகேந்திரன்.

அப்போது அந்தப் பகுதியில் பணியில் இருந்த வன அலுவலர் ஒருவர் மரக்கன்றுகள் வளர்ப்பதில் ஆர்வமும், மரங்களைப் பாதுகாப்பதில் அக்கறையும் கொண்டிருந்தார். சில காலம் அவரிடம் வேலை பார்த்த மகேந்திரனுக்கு மரங்கள் மீதும், இயற்கையின் மீதும் இயல்பாகவே நாட்டம் ஏற்பட்டது. அந்த ஆர்வத்தில், தாங்கள் வசித்த அகதிகள் முகாம் பகுதியில் மரக்கன்றுகளை வளர்க்க ஆரம்பித்தார்.

அப்போது பாலாற்றங்கரையோர கிராமங்களில் நல்ல தண்ணீர் கிடைப்பது மிகவும் சிரமம். அம்மாதிரியான சூழலில் பாலாற்றுப் படுகையில் கைகளாலேயே ஊற்றுக்களைத் தோண்டி, அதை மக்கள் பயன்பாட்டுக்கு கொண்டுவந்தார். இப்படி இயல்பாகவே இயற்கை சார்ந்து வாழத்தலைப்பட்டார் மகேந்திரன். அகதிகளுக்கான கெடுபிடிகள் சற்றே தளர்த்தப்பட்ட நிலையில், சென்னை உள்ளிட்ட வெளியூர்களுக்கும் சென்று கிடைத்த வேலையைப் பார்க்க ஆரம்பித்தார் மகேந்திரன்.

அப்படி 2014-ல் கன்னியாகுமரி பகுதியில் பெயின்ட்டர் வேலைக்காக சென்றிருந்த மகேந்திரன் மீது, ‘இந்தியாவை விட்டு சட்டவிரோதமாக தப்ப முயன்றதாக வழக்குப் பதிவுசெய்யப்பட்டு கைது செய்யப்பட்டார். அந்த வழக்கிற்காக இவர் குழித்துறை கிளைச் சிறையில் இருக்கும்போதே ராமநாதபுரம் மாவட்டம் திருவாடானையிலும் இவர்மீது ஆஸ்திரேலியாவுக்கு தப்ப முயன்றதாக மேலும் ஒரு வழக்குப் பதிவு செய்யப்பட்டது. இந்த இரண்டு வழக்கிலும் ஜாமீன் பெற்றபோதும், வழக்கு நிலுவையில் இருப்பதால் மகேந்திரனை திருச்சி சிறப்பு முகாமில் அடைத்தது காவல்துறை.

கன்றுகள்

அந்த சமயத்தில் இவருடனும், அதன் பிறகு கைதுசெய்யப்பட்டவர்களிலும் பெரும்பான்மையானவர்கள் விடுதலை பெற்றுவிட்ட நிலையில், மகேந்திரன் மட்டும் இன்னும் சிறப்பு முகாமிலேயே இருக்கிறார். காரணம், அவர் மீது சிலருக்கு இருக்கும் காழ்ப்புணர்ச்சி என்கிறார்கள். இத்தனைக்கும், இவர் மீது போடப்பட்ட வழக்குகள் எல்லாம் முடிந்து 6 மாதங்களுக்கு மேலாகிவிட்டது. ஆனாலும், சுதந்திரக் காற்றைச் சுவாசிக்க முடியாமல் தவிக்கிறார் மகேந்திரன்.

மகேந்திரனின் பெற்றோர் இன்னமும் பாலாறு பகுதியில்தான் வசிக்கிறார்கள். 2005-ல் இவருக்கும் இலங்கையைச் சேர்ந்த பெண் ஒருவருக்கும் திருமணம் நடந்திருக்கிறது. அடுத்த சில வருடங்களிலேயே அந்தப் பெண் மகேந்திரனை பிரிந்து இலங்கைக்குப் போய்விட்டார். அதனால் யாரும் இல்லாத தனிமரமாகிப் போன மகேந்திரன், அப்போது தான் மரங்களை நேசிக்க ஆரம்பித்ததாகச் சொல்கிறார்.

‘’சிறப்பு முகாமுக்கு வந்த புதிதில் இங்கிருந்த சூழல் என்னை ரொம்பவே பாதித்தது. யாரும் என்னிடம் சரிவர பேசக்கூட மாட்டார்கள். அதனால் அங்கிருந்த மரங்களை நேசிக்க ஆரம்பித்தேன். அந்த மரங்களிலிருந்து விதைகளை சேகரித்தேன். பறவைகளின் எச்சத்தில் இருக்கும் விதைகளையும், அதிலிருந்து முளைக்கும் மரக்கன்றுகளையும் சேகரித்துப் பாதுகாப்பதையும் முழுநேர வேலையாகப் பார்க்க ஆரம்பித்தேன். இந்த வேலைகளை கவனிக்க ஆரம்பித்ததும் தனிமை எனக்கு ஒரு பாரமாக இல்லை. முகாமில் நான் வளர்த்த மரக்கன்றுகளை சிறப்பு முகாம் அதிகாரிகள் மூலமாக இயற்கை மீது நாட்டம் உள்ளவர்கள் கையில் ஒப்படைக்க ஆரம்பித்தேன்.

முதன்முதலில் லால்குடி கோட்டாட்சியர் மூலமாக அந்தப் பகுதியைச் சேர்ந்த ஒரு ஊராட்சிக்கு 8 ஆயிரம் கன்றுகளைக் கொடுத்தேன். அதன் பிறகு விஷயம் கேள்விப்பட்டு பல்வேறு தன்னார்வலர் அமைப்புகள் என்னிடம் மரக் கன்றுகளை வாங்கிச் செல்ல முன்வந்தார்கள். அதனால், மரம் வளர்ப்பில் எனக்கு இன்னும் உத்வேகம் கூடியது. எனக்கான சமையல் நேரம்போக எஞ்சிய முழு நேரத்தையும் விதைகளை சேமிக்கவும், அதிலிருந்து நாற்றுகளை உருவாக்கி பராமரிக்கவும் செலவழிக்க ஆரம்பித்தேன்.

தொடக்கத்தில், சிறப்பு முகாமில் பயன்படுத்தப்பட்ட பால் பாக்கெட்டுகள், எண்ணெய் பாக்கெட்டுகள், மளிகைப்பொருட்கள் அடைக்கப்பட்ட கவர்கள் உள்ளிட்டவற்றில் மண் நிரப்பி அதில் விதைகளைப்போட்டு முளைக்க வைத்தேன். திருநெல்வேலியைச் சேர்ந்த ’மரத்திற்குள் தமிழகம்’ என்ற அமைப்புதான் என்னைப்பற்றி கேள்விப்பட்டு, செடி வளர்க்கத் தேவையான பைகளை கொடுத்து உதவியது. இன்னும் அவர்கள் அந்த உதவியை நிறுத்தவில்லை.

முகாம் வளாகத்துக்குள்ளேயே எருக்குழி ஒன்று வெட்டி அதில் மர இலைகளை போட்டு மண்மூடி வைத்து மக்கச்செய்து அதனையே விதைகள் போடுவதற்கு பயன்படுத்துகிறேன். என்னால் வளர்க்கப்பட்ட 30 மரங்கள் இந்த முகாம் வளாகத்துக்குள்ளேயே கம்பீரமாக வளர்ந்து நிற்கின்றன. அந்த மரங்கள் இங்கிருந்து நான் வெளியே போய்விட்டாலும் காலத்துக்கும் என் பெயரைச் சொல்லிக் கொண்டிருக்கும்.

எனக்கென்று யாரும் இல்லை. நான் நேசிப்பதற்கும், என்னை நேசிப்பதற்கும் மனிதர்கள் இல்லை. எனது பெற்றோருக்கும் என்னால் உதவமுடியவில்லை. போலீஸ் வழக்குகளால் எனது இளமைக்காலம் முழுமையும் வீணாகிவிட்டது. இன்னமும் எனது முகாம் வாழ்க்கை முடிவுக்கு வரவில்லை. வாழவேண்டிய வயதில் வாழ முடியாமல் போன எனக்கு மரம் வளர்ப்பு தான் மனநிறைவைத் தரும் ஆறுதல். அதனால் தான் இயற்கையை நேசிக்கிறேன்; மரங்களோடு வாழ்கிறேன்” என்கிறார் மகேந்திரன்.

இயற்கையைப் போற்றும் மகேந்திரனுக்கு இப்போதைய தேவை சுதந்திரக் காற்று. தனக்கு விடுதலை கிடைத்தால் பெற்றோரையும் கவனித்துக் கொண்டு மரம் வளர்ப்பில் இன்னும் சாதிக்கமுடியும் என்கிறார்.

வாய்ப்புகள் இருந்தால் மகேந்திரனின் கோரிக்கையை தமிழக அரசு கனிவுடன் பரிசீலிக்கலாமே!

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE