தமிழில் தனது பெயரை எழுதிய மகாத்மா காந்தி: எங்கே தெரியுமா?

By கி.பார்த்திபன்

திருச்செங்கோடு அருகே புதுப்பாளையம் கிராமத்தில் உள்ள காந்தி ஆசிரமத்திற்கு மகாத்மா காந்தி உள்ளிட்ட தலைவர்கள் வந்தபோது அவர்கள் எழுதிய வாழ்த்து மடல்கள் இன்றளவும் ஆசிரமத்தில் பொக்கிஷம் போல் பாதுகாக்கப்பட்டு வருகிறது.

இந்திய சுதந்திரத்திற்காக பாடுபட்ட தலைவர்களில் மகாத்மா காந்தி, நேருவும் முதன்மையானவர்கள். இருவரும் தேசம் கடந்து உலக மக்களால் இன்றளவும் போற்றப்படுகின்றனர். இத்தேசத் தலைவர்கள் நாமக்கல் மாவட்டம் திருச்செங்கோடு அருகே உள்ள புதுப்பாளையம் என்ற கிராமத்திற்கு கடந்த 70 ஆண்டுகளுக்கு முன்னர் வந்து சென்றுள்ளனர் என்பது பெரும்பாலானோர் அறியாத ஒன்று. ஆம், காந்திய சிந்தனைகளால் ஈர்க்கப்பட்ட மூதறிஞர் ராஜாஜி, தான் மேற்கொண்டு வந்த வழக்கறிஞர் தொழிலை கைவிட்டு, புதுப்பாளையம் கிராமத்தில் தொடங்கிய காந்தி ஆசிரமத்திற்கு தான், மகாத்மா காந்தி, நேரு, லால் பகதூர் சாஸ்தரி, கோபால கிருஷ்ண கோக்லே, காமராஜர் போன்ற தலைவர்கள் வந்து சென்றுள்ளனர்.

அவர்கள் வந்தபோது ஆசிரமம் குறித்தும், ஆசிரமம் மூலம் மேற்கொள்ளும் பணிகள் குறித்தும் அவர்கள் கைப்பட எழுதிய கடிதங்கள் இன்றளவும் ஆசிரமத்தில் பாதுகாக்கப்பட்டு வருகிறது. ஆசிரமத்திற்கு வரும் பார்வையாளர்கள் இவற்றைக் கண்டு வியப்பில் ஆழ்ந்து வருகின்றனர்.

இதுகுறித்து காந்தி ஆசிரம பணியாளர்கள் கூறுகையில், ``மகாத்மா காந்தியின் கிராமிய பொருளாதாரம் குறித்த சிந்தனைக்கு செயல்வடிவம் கொடுக்கும் வகையில் கடந்த 1925-ம் ஆண்டு (அப்போது சேலம் மாவட்டம்) நாமக்கல் மாவட்டம் திருச்செங்கோடு அருகே புதுப்பாளையம் என்ற குக்கிராமத்தில் காந்தி ஆசிரமத்தை மூதறிஞர் ராஜாஜி தொடங்கினார். இந்த ஆசிரமத்தை தந்தை பெரியார் திறந்து வைத்தார். நான்கு ஏக்கர் பரப்பளவில் தொடங்கப்பட்ட இந்த ஆசிரமம் தற்போது 27 ஏக்கர் பரப்பளவாக உள்ளது. ஆசிரமத்திற்கு மகாத்மா காந்தி 3 முறை வந்து சென்றுள்ளார். மகாத்மா காந்தியின் மனைவி கஸ்துாரிபா காந்தி ஆசிரமத்திற்கு வந்துள்ளார். இதுபோல், முன்னாள் பிரதமர் நேரு, கோபால கிருஷ்ண கோலே, காமராஜர் என பல்வேறு தேசிய தலைவர்கள் ஆசிரமத்திற்கு வந்து சென்றுள்ளனர்.

மகாத்மா காந்தி, மூதறிஞர் ராஜாஜியின் சம்மந்தியும் ஆவார். இவர்கள் ஆசிரமத்திற்கு வந்தபோது எடுத்த புகைப்படங்கள், எழுதிய குறிப்புகள் இன்றளவும் ‘பொக்கிஷம்’ போல் பாதுகாக்கப்பட்டு வருகிறது. கடந்த 1934-ம் ஆண்டு மகாத்மா காந்தி ஆசிரமத்திற்கு வந்தபோது அவர் எழுதிய வாழ்த்து மடலில் பாபு என தனது பெயரை ‘தமிழில்’ எழுதியுள்ளார். அந்த மடல் இன்றளவும் பாதுகாக்கப்படுகிறது. கடந்த 70 ஆண்டுகளுக்கு முன்பே முன்னணி வழக்கறிஞராக மூதறிஞர் ராஜாஜி இருந்தபோதும், ஆசிரமம் தொடங்கிய பின் எளிமையான வாழ்வையே மேற்கெண்டார். அதற்கு சான்றாக விளங்குவது ஆசிரமத்தில் உள்ள அவரின் சிறிய இல்லம். இந்த இல்லத்தில் இங்கு வந்து சென்ற தேசத் தலைவர்களின் புகைப்பட தொகுப்பு உள்ளது. அதுபோல் 1934-ம் ஆண்டு காந்தி கொடியேற்றிய இடம் இன்றளவும் பராமரிக்கப்படுகிறது.

இந்தியாவிலேயே முதன்முதலில் புதுப்பாளையம் கிராமத்தில் தான் பூரண மதுவிலக்கு அமுல்படுத்தப்பட்டது. மதுவால் ஏற்படும் தீமைகள் குறித்து அந்த காலகட்டத்தில் ராஜாஜி உள்ளிட்டோர் கிராமம் கிராமமாக சென்ற மேற்கொண்டனர். அந்த நடைமுறை இன்றளவும் மேற்கொள்ளப்படுகிறது. ஆசிரமத்தை பராமரிப்பு செய்யவும், தலைவர்களின் நினைவு குறிப்புகளை பாதுகாக்கவும் அரசு கூடுதல் நிதி ஒதுக்கினால் உதவியாக இருக்கும்" என்றனர்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE