’கல்வி அக்கா’ பிரியதர்ஷினி!

By ம.சுசித்ரா

இந்தியாவில் கடந்த 20 ஆண்டுகளாகப் பெரும்பாடுபட்டுக் கட்டுப்படுத்தப்பட்ட குழந்தைத் தொழிலாளர் முறை கரோனா காலத்தில் உயிர்ப்பித்தெழுந்து தலைவிரித்தாடுகிறது. மீண்டும் பள்ளிக்கூடங்கள் முழு வீச்சில் செயல்படத் தொடங்கிய பிறகும் ஆயிரக்கணக்கான குழந்தைகள் பள்ளி திரும்பாமல் இருக்கிறார்கள். அவர்களில் பலர் அக்கம்பக்கத்திலிருக்கும் குடிசைத்தொழிலிலும், கடை வேலைகளிலும் சேர்ந்துவிட்டார்கள்.

ஏற்கெனவே குழந்தைத் தொழிலாளர்களாக இருந்துவரும் குழந்தைகளோ கூடுதல் நேரம் வேலை செய்யக் கட்டளையிடப்படுகிறார்கள் அல்லது மிக மோசமான சூழ்நிலையில் வேலை செய்ய நிர்ப்பந்திக்கப்பட்டு இருக்கிறார்கள். சர்வதேச தொழிலாளர் அமைப்பு, யூனிசெப் உள்ளிட்டவை இது குறித்து அபாய சங்கு ஊதிக்கொண்டே இருக்கின்றன. ஆனால், அதைக் காதில் வாங்கவோ, பொருட்படுத்தவோ யாரும் இல்லை.

திருவாரூர் மாவட்ட ஆட்சியர் காயத்ரி கிருஷ்ணன் எழுதிய முகநூல் பதிவு

இந்நிலையில், திருவாரூர் மாவட்டம் வலங்கைமான் அரசு பெண்கள் மேல்நிலைப் பள்ளியில் ப்ளஸ்1 படித்துவரும் பிரியதர்ஷினி தனியொருத்தியாக 20-க்கும் மேற்பட்ட குழந்தைத் தொழிலாளர்களை மீட்டிருக்கிறார். திருவாரூர் மாவட்ட ஆட்சியர் காயத்ரி கிருஷ்ணன், சமக்ர சிக்‌ஷா மாநில திட்ட இயக்குநர் சுதன் ஐஏஎஸ், இல்லம் தேடி கல்வி சிறப்புப் பணி அலுவலரும், நூலகத்துறை இயக்குநருமான இளம்பகவத் ஐஏஎஸ், மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் உள்ளிட்டோர் பிரியதர்ஷினியை நேரில் சந்தித்து வாழ்த்துகளையும், பாராட்டுகளையும் தெரிவித்துள்ளனர். அதைவிடவும் குழந்தைத் தொழிலாளர்களாகச் சிக்கிக் கொண்டிருக்கும் குழந்தைகள் பலர், “அக்கா எனக்கும் திரும்பவும் பள்ளிக்குப் போக ஆசை வந்திருச்சு சேர்த்துவிடுறியா?” என்று கேட்கும் அளவுக்கு ’கல்வி அக்கா’வாக உருவெடுத்திருக்கிறார் பிரியதர்ஷினி.

பிரியதர்ஷினி

ஒரு சிறுமியால் இதை எப்படிச் சாதிக்க முடிந்தது என்கிற வியப்புடன் பிரியதர்ஷினியை தேடி கண்டடைந்தோம். பூண்டுகளைத் தரம் பிரித்து பொட்டலமிடும் கம்பெனியில் பணி செய்யும் தாய் மாரியம்மாள், பெயின்டிங் வேலை செய்து பிழைக்கும் தந்தை ராஜா - இத்தகைய எளிய குடும்பப் பின்னணியைச் சேர்ந்த பிரியதர்ஷினியிடம்தான் மலையளவு தன்னம்பிக்கையும், கடலளவு சமூக அக்கறையும் ததும்புகிறது.

குழந்தைத் தொழிலாளர்களைக் காப்பாற்றும் சிந்தனை உனக்குள் எப்படி உதித்தது எனக் கேட்டபோது, “நான் ஏழாவது படிக்கும்போது கொஞ்ச காலம் நானே எங்க தெருவில் இருந்த மளிகைக்கடையில பலசரக்கு பொருட்களை எடைபோட்டு பொட்டலம் கட்டும் வேலை செஞ்சு குடும்பத்த காப்பாத்துனேன். அப்ப கடை முதலாளி என்னை கடை உள்ளறையிலிருந்து வேலை செய்யச் சொல்வாரு. ’யார் கேட்டாலும் டியூஷன் போறேனு சொல்லிட்டுவா, இல்லாட்டி என்னைய தூக்கி உள்ள வெச்சுருவாய்ங்க’ என்பார்.

சாயந்தரம் வேலைக்குபோனா 50 ரூபாய் கிடைக்கும், சனி, ஞாயிறுகளில நாள் முழுக்க வேலை பார்த்தா 100 ரூபாய் கொடுப்பாங்க. இருந்தாலும், அப்பவும் ஒருநாளும் நான் பள்ளிக்கு போகாம இருந்ததில்ல. பள்ளிக்கூடத்திலேயே மதிய உணவு இடைவெளி நேரத்தில வேக வேகமா வீட்டுப்பாடத்தையெல்லாம் முடிச்சுட்டு வீடு திரும்பினதும் கடைக்கு வேலைக்கு போயிடுவேன்” என்று நமக்கு அதிர்ச்சி ஊட்டினார் பிரியதர்ஷினி.

கரோனா உக்கிரம் தணிந்து கடந்த செப்டம்பரில் மீண்டும் பள்ளி திறக்கப்பட்ட போது சக மாணவிகளில் பாதிக்கும் குறைவானவர்கள் மட்டுமே பள்ளி திரும்பியது பிரியதர்ஷினிக்கு மன உளைச்சலை ஏற்படுத்தியது. அப்போதுதான், தனது பகுதியில் உள்ள மளிகைக்கடை, பூக்கடை, வாகனம் பழுதுபார்க்கும் பட்டறை ஆகியவற்றில் அதிக எண்ணிக்கையில் சிறுவர், சிறுமியர் வேலை செய்துவருவதைக் கவனிக்கத் தொடங்கினார்.

தனது பள்ளியின் நூலக பொறுப்பாளர் ஆசிரியை புவனேஸ்வரியிடம் இதுகுறித்து அக்கறையுடன் விவாதித்தார் பிரியதர்ஷினி. அப்போதுதான், தேசிய அறிவியல் குழந்தைகள் மாநாட்டில் குழந்தைத் தொழிலாளர்கள் முறை குறித்து கட்டுரை எழுதி புராஜெக்ட் சமர்ப்பிக்கலாம் என்ற யோசனையை பிரியதர்ஷினிக்கு சொல்லி இருக்கிறார் புவனேஸ்வரி.

இதைத் தொடர்ந்து, திருவாரூரில் உள்ள நான்கு அரசுப் பள்ளிகளுக்குச் சென்று அப்பள்ளி தலைமையாசிரியர்களைச் சந்தித்து மாணவர்களின் நிலை குறித்து பிரியதர்ஷினி விசாரித்திருக்கிறார். கரோனா காலத்துக்குப் பிறகு பெரும் எண்ணிக்கையிலான மாணவர்கள் பள்ளி திரும்பவில்லை என்பதும், பள்ளி ஆசிரியர்கள் அம்மாணவர்களை அழைத்துப் பேசிய பிறகும் பல குழந்தைகளுக்குப் பள்ளி வர மனமில்லை என்பதும் தெரியவந்துள்ளது.

பிறகு நடந்ததை நம்மிடம் விவரித்த பிரியதர்ஷினி, “ ஆசிரியர்கள் அழைத்தும் பள்ளிக்கு வராத மாணவர்களை நான் தேடிப்போய் அழைக்க முடிவு செய்தேன். இதுக்காக ஒன்றரை மாசம் தினசரி அந்த பசங்க வேலை செய்ற கடை, அவங்க வீடுனு தேடிப் போய் பேசினேன். ஆனா கரோனா காலத்துல, இந்த பசங்க வேலை பார்த்து கையில காசு பாத்ததால திரும்பவும் பள்ளிக்குப்போய் என்னவாகப்போகுதுனு வீட்டுப் பெரியவங்களே நினைச்சாங்க.

அவங்ககிட்ட, ’நம்மை மாதிரி வறுமைக் கோட்டுக்குக் கீழே இருக்கிறவங்களுக்கு கல்விதான் ஆயுதம்’னு சொன்னேன். பொண்ணுங்ககிட்ட சாவித்ரிபாய் பூலே பெண் குழந்தைகளுக்கு கல்வி கிடைக்க எவ்வளவு கஷ்டபட்டாங்கனு சொன்னேன். இப்படி பேசிப் பேசித்தான் பலரோட மனச மாத்தினேன். பிறகு, சைல்டு ஹெல்ப் லைன் (1098) மூலமாக அதிகாரிகளை வரவெச்சு ஜவுளி கடைகள்ல வேலை பார்த்த 3 சிறுமிகளையும் வொர்க் ஷாப், இரும்பு பட்டறை, ரோஸ்மில்க் கடை, பட்டாசு தொழிற்சாலை, பூக்கடை, மளிகைக் கடைனு வேலை பார்த்த 17 சிறுவர்களையும் வேலையிலிருந்து மீட்டு மீண்டும் அவங்களோட பள்ளியில சேர்த்துவிட்டேன். அவங்க எல்லாரும் நல்லா படிக்கிறாங்களானு இப்ப வரைக்கும் விசாரிச்சுட்டு இருக்கேன்” என்றார்.

இவ்வளவு துணிச்சலான காரியத்தில் அதிலும் ஒரு பெண் குழந்தை ஈடுபடும்போது தடைக் கற்கள் இல்லாமல் போகுமா!? அக்கம்பக்கத்தில் வசிப்பவர்களின் பொருமலும், ஆங்காங்கே சில ஆண்களின் சீண்டலும் பிரியதர்ஷினிக்கு இருக்கவே செய்கிறது. அதையெல்லாம் பற்றி கவலைப்படாமல் கொண்ட கொள்கையில் உறுதியாகச் செயல்படுகிறார் இந்த துணிச்சல்காரி.

“14 வயது வரைதான் குழந்தைகளைக் குழந்தைகளாகச் சட்டம் பார்க்குது. இதனால், பத்தாம் வகுப்பு, ப்ளஸ் 1, ப்ளஸ் 2 படிக்கிற பிள்ளைகள் குழந்தை தொழிலாளரா இருக்கிறதைத் தடுக்கப் போனா, ‘இதெல்லாம் சட்டப்படி செல்லும் நீ உன்னோட வேலைய பார்த்துட்டு போ’னு சொல்றாங்க. 14 வயசுக்கு உட்பட்ட குழந்தைகளா இருந்தாலும் குடும்பத் தொழிலில் ஈடுபடுத்தலாம்; இலகுவான வேலைகளைச் செய்யவைக்கலாம்னும் சட்டம் சொல்லுது.

குழந்தைத் தொழிலாளர்களை ஊக்குவிக்கும் இந்த சட்டத்தை மாத்தணும். 18 வயது வரை குழந்தைகள் தான்னு சட்டத்துல திருத்தம் கொண்டுவரணும். அதுமட்டுமில்லாம, கொத்தடிமை முறையில இன்னும் நிறையக் குழந்தைகள் சிக்கிட்டிருக்காங்க. தனியாளா அங்கெல்லாம் என்னால நெருங்கவே முடியாது. இதுக்கு அரசு தனிக் குழு அமைச்சு நடவடிக்கை எடுக்கணும். எல்லாத்துக்கும் மேல, ஆசிரியர் செய்ய முடியாததை என்னால் செய்ய முடிஞ்சிருக்குனா நான் மாணவிங்கிறதுதான். அதனால என் போன்ற மாணவர்களை ஊக்கப்படுத்தினாலே குழந்தைத் தொழிலாளியாக மாறிக்கிடக்கும் பல குழந்தைகளை மீட்கலாம். இதற்காக ஒரு மாணவர் படையை பள்ளிக் கல்வித் துறை உருவாக்கணும்” என்று அரசுக்கான தனது கோரிக்கைகளை அடுக்குகிறார் பிரியதர்ஷினி.

மாணவச் சமூகம் மனது வைத்தால் எதையும் சாதிக்கலாம் என்பதற்கு சாட்சியாக நிற்கும் பிரியதர்ஷினியைப் போல ஆயிரம் பிரியதர்ஷினிகள் மலரட்டும்!

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE