குற்றாலத்தில் களைகட்டியது சாரல் மழை: சுற்றுலா பயணிகள் மகிழ்ச்சி

By த.அசோக் குமார்

தென்காசி: தென்காசி மாவட்டத்தில் ஜூன் மாத தொடக்கத்தில் தென்மேற்கு பருவமழை தீவிரம் அடையவில்லை. ஒரு சில இடங்களில் மட்டும் லேசான பெய்தது. இந்நிலையில், கடந்த சில நாட்களாக மேற்குத் தொடர்ச்சி மலையையொட்டிய பகுதிகளில் லேசான மழை பெய்து வருகிறது.

இன்று காலை வரை, 24 மணி நேரத்தில் ராம நதி அணையில் 8 மி.மீ., கருப்பாநதி அணையில் 5.50 மி.மீ., குண்டாறு அணையில் 2 மி.மீ., அடவி நயினார் அணையில் 1 மி.மீ. மழை பதிவானது. இன்று காலையில் இருந்து வானம் மேக மூட்டத்துடன் காணப்பட்டது. குற்றாலம் மற்றும் மேற்குத் தொடர்ச்சி மலைப் பகுதிகளில் அவ்வப்போது சாரல் மழை பெய்தது.

குளிர்ந்த காற்றுடன் சாரல் களைகட்டியுள்ளதால் குற்றாலம் அருவிகளில் தண்ணீர் ஆர்ப்பரித்து கொட்டுகிறது. இதனால் சுற்றுலாப் பயணிகள் வருகை அதிகரித்துள்ளது. நேற்று வார நாளிலும் சுற்றுலாப் பயணிகள் கூட்டம் அதிகமாக இருந்தது. அருவிகளில் சுற்றுலாப் பயணிகள் மகிழ்ச்சியுடன் குளித்துச் சென்றனர்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE