கடைசியா மிஞ்சுனது காலி அடுக்கு!

By ரிஷபன்

அம்மிணி ஒரு பேப்பரை நீட்டுனாங்க. “என்னது”ன்னு கேட்டா, “கையில வாங்கித்தான் பாருங்களே”ன்னு அதட்டுனாங்க. பூசணிக்காய், வாழைக்காய், சேப்பங்கிழங்கு, கேரட், பச்சை மிளகாய், கருவேப்பிலைன்னு ஐட்டம்ஸ். எல்லாமே கிலோக் கணக்குல.

“கல்யாண காண்ட்ராக்ட் எடுத்திருக்கீங்களா”ன்னு விசாரிச்சேன். “ஒங்களுக்குத்தான் தெரியுமே. கதம்ப சாதம், அதாங்க... எல்லாக் காயும் போட்டு சாம்பார் சாதம் டைப்புல செய்வேனே... அது வேணுமாம். அபார்ட்மென்ட்ல, தெருவுல எல்லாரும் சொல்லிட்டாங்க. ரொம்ப நாளாச்சு ஒங்க கைப்பக்குவத்துல சாப்ட்டுன்னு . போய் வாங்கிட்டு வாங்க. அப்படியே நெ.1 பொன்னி அரிசில ஆறு கிலோ மறந்துடாதிங்க. முந்திரிப் பருப்பு அரைக் கிலோ, கிராம்பு... இன்னும் ஏதோ போடுவேன். கடைக்குப் போயிட்டு போன் போடுங்க. ஞாபகம் வந்துரும். சொல்லிடறேன். மசையா நிக்காம போங்க”ன்னு தார்க்குச்சி போட்டு ஓட்டுனாங்க.

அம்மிணிட்ட இருக்குற பலவீனமே யாராச்சும் நல்லா புகழ்ந்துட்டா அவங்க கேக்குறதைச் செஞ்சுருவாங்க. சட்டையை மாட்டுறதுக்குள்ர இன்னும் ரெண்டு ஐட்டம் சொன்னாங்க. எ வீ அம்மிணி டப்புனு உள்ர வந்துட்டாங்க. “அம்மிணி அதுல குணுக்கு மாதிரி சேர்த்து செய்வியே. மறந்துராதே. சாதத்துக்கு நடுவுல அதைக் கடிச்சா செம்மயா இருக்கும்”னு போட்டுவிட அம்மிணி என்னைப் பார்த்தாங்க.

“து பருப்பு, க பருப்பு எண்ணெய் சேர்த்துக்குங்க. என்ன செய்யப் போறேனோ எப்படிச் செய்யப் போறேனோ மலைப்பா இருக்கு”ன்னு சொன்னதும் எ வீ அம்மிணி “இப்டித்தான் ஒவ்வொரு தடவையும் சொல்லுவ. ஆனா, ஒதவிக்கு யாரும் வரக் கூடாது ஒனக்கு வேலை ஓடாதுன்னு எங்களை எல்லாம் விரட்டி விட்டுருவ. இந்தா இந்த தூக்குல எங்க வீட்டுக்கு போட்டு வச்சிரு. பாவம், ஒவ்வொரு தடவையும் ஒங்க வீட்டு பாத்திரத்துல போட்டு கொடுத்துட்டு திருப்பி வரலன்னு சங்கடப்படுவியே”ன்னு அரைப்படி சாதம் அடங்குற மாதிரி ஒரு சில்வர் தூக்கை வச்சுட்டுப் போனாங்க.

“ஏம்மா ஒனக்கு எதுக்கு இந்த சிரமம். கை நோவுது, கால் ஒளையுதுன்னு தைலம் தேச்சு விடச் சொல்லுவ. ஆசைக்கு கொஞ்சமா செஞ்சா போதாதா”ன்னு சும்மா இல்லாம கொட்டிட்டேன்.

அம்மிணி பொங்குனாங்க. “என்னதான் ருசியா சமைச்சுப் போட்டாலும் எங்கியோ மழை பேஞ்சுதுங்கிற மாதிரி தின்னுட்டு போயிருவீங்க. ஒங்களைக் கட்டிக்கிட்டு வரதுக்கு முன்னால எங்க வீட்டுல நாதான் சமைக்கணும்னு பிடிவாதம் பிடிப்பாங்க. ஒரு ரசம் வச்சாக்கூட அன்னிக்கு முழுக்கக் குடிக்கலாம்னு பாராட்டுவாங்க. இப்போ என் சமையல் பிடிச்சுப்போய் கேக்கறவங்க மனசை நோக விடலாமா”ன்னு நீதி கேட்டு வீதிக்குப் புறப்பட்டவங்களைத் தடுத்து நிறுத்தினேன்.

அஞ்சாறு பிக் ஷாப்பர் பை எடுத்துக்கிட்டேன். “அரை மணில, போனமா வந்தமான்னு வந்துரணும். அவனைப் பார்த்தேன் இவனைப் பார்த்தேன்னு அரட்டை அடிச்சுக்கிட்டு நிக்காம”ன்னு அம்மிணி மிரட்டுனாங்க. எதுவும் விட்டுப் போயிரக்கூடாதுன்னும் சொல்லிட்டாங்க. லிஸ்ட்டை நாலு தடவைத் திரும்பத் திரும்ப படிச்சதுல நல்லாவே மனப்பாடம் ஆயிருச்சு.

ஸ்கூட்டில நாலு பக்கமும் பையைத் தொங்க விட்டு வந்தேன். தெருவுல குறுக்கே வந்த ஸ்பீக்கர் வச்ச காய் வண்டிக்காக நிறுத்துனப்போ ரெண்டு அம்மிணி தப்பாப் புரிஞ்சுக்கிட்டு நிறுத்துனாங்க. “என்ன காய் வச்சிருக்க. கிலோ எப்படி... எடைக்கல் தராசு இல்லியா எப்படி எடை போட்டுத் தருவே”ன்னு விசாரிக்க ஆரம்பிச்சாங்க. அதுல ஒரு அம்மிணி, “தக்காளி நல்லா இல்லியே”ன்னு பைக்குள்ர எட்டிப் பார்த்துச்சு. “எங்க வீட்டுக்கு வாங்கிட்டு போறேன்”னு சமாளிச்சு வந்தேன்.

அம்மிணி பால்கனி வழியா பார்த்துட்டாங்க. பெருந்தன்மையா மகனாரைக் கீழே அனுப்பி வச்சாங்க. வெயிட் இல்லாத ஒரு பையை அவர் எடுத்துக்கிட்டு மேலே போக மீதியை ரெண்டு பக்கமும் தொங்க விட்டுக்கிட்டு மாடிக்கு வந்தேன்.

கீழே வச்சுட்டு மூச்சு விட்டப்போ, “அப்படியே வச்சா என்ன அர்த்தம். நசுங்காம கீழே கொட்டி பிரிச்சு வைங்க. காய் எல்லாம் அலசணும். ஒவ்வொண்ணா சொல்றேன்”னு அம்மிணி சுறுசுறுப்பாச் சொன்னாங்க.

கத்தி , அரிவாள்மனை உறைச்சாக்கு கொண்டு வந்து வச்சாங்க. “நல்லா கேட்டுக்குங்க. வாழைக் காயை இப்படி அரியணும். கத்தரிக்காயை இப்படி”ன்னு அரிச்சுவடி வகுப்பு எடுத்தாங்க. “தேங்காயைக் கடைசியா துருவிக் குடுங்க”ன்னு சொல்லிட்டு அரிசி மூட்டையோட கிச்சனுக்குள்ர போனாங்க.

“ம்ம் ஆச்சா ஆச்சா”ன்னு நடுநடுவுல எட்டிப் பார்த்தாங்க. “அட்ஜஸ்ட் பண்ணிக்குங்க. காபி சுமாராத்தான் இருக்கு. தெம்பா இருக்குமேன்னு போட்டுக் கொண்டு வந்தேன்”னு அரை டம்ளர் கஷாயத்தை எதிர்ல வச்சிட்டுப் போனாங்க. அதைக்குடிச்சதும் உசுரு வந்தாப்லயும் இருந்துச்சு, இருந்த உசுரு போனாப்லயும் இருந்துச்சு.

குக்கர் ஓய்வில்லாம விசிலடிச்சுக்கிட்டே இருந்துச்சு. ரக ரகமா வாசனை அபார்ட்மென்ட் முழுக்கப் பரவுனதுல, “அம்மிணி என்னவோ சமைக்கிறாங்க”ன்னு கீழ்த்தளத்துல பேசிக்கிட்டது எங்க வீட்டு வரைக்கும் கேட்டுச்சு.

எப்பவோ வாங்குன பெரிய எவர்சில்வர் அடுக்கை எடுக்கச் சொன்னாங்க. உப்பு போட்டேனா இல்லியான்னு அவங்களே முனகிட்டு கொதிக்கிற சாம்பாரை ஒரு கரண்டில எடுத்து நக்கிப் பார்க்கச் சொன்னாங்க. நாக்கு பொரிஞ்சதுல தெனாலிராமன் வளர்த்த பூனை மாதிரி உஸ் உஸ்ஸுனு சவுண்டு விட்டேன்.

“உப்பு போதுமான்னு கரெக்டா சொல்லுங்க. அப்புறம் என் பேர் கெட்டுப் போயிரும்”னு அதட்டுனதும் மகனாரைக் கை காட்டுனேன். அவனுக்குப் பக்குவமா ஒரு ப்ளேட்ல ஆற வச்சு கொடுத்தாங்க. அவரு கைவிரலை மடக்கி சூப்பர் முத்திரை காட்டுனதும் வெக்கப்பட்டுகிட்டே, “போடா... எப்பவும் நான் எது செஞ்சாலும் நல்லா இருக்குன்னுதான் சொல்ற”ன்னு கிச்சனுக்குள்ர போயிட்டாங்க.

எல்லா சைஸ் டப்பாலயும் போட்டு ஒவ்வொரு வீடாக் கொடுக்கிறதுக்கு என்னையும் இழுத்துக்கிட்டுப் போனாங்க. “முன்னாலயே சொல்லியிருந்தா சமைக்காம இருந்திருப்பேன்”னு ஒரு அம்மிணி சொன்னதும் எங்கம்மிணிக்கு சுர்ருன்னு ஏறுச்சு. வெளியே வந்ததும் சொன்னாங்க. “அவ சமைச்சதை அவளே திங்கமாட்டா.”

வீட்டுக்குள்ர வந்தா மகனாரோட ஃபிரெண்ட்ஸ்! ஆளுக்கொரு ப்ளேட் ஃபுல்லா வச்சு சூப்பர்னு சாப்டுக்கிட்டு இருந்தாங்க. அம்மிணியைப் பார்த்ததும், “ஆன்ட்டி... செம்ம”ன்னு கை தட்டுனாங்க.

கிச்சனுக்குள்ள எட்டிப் பார்த்தேன் வயித்துல பசி இரைச்சலோட. காலி அடுக்கு என்னயப் பாத்து, “வாப்பா... இப்பத்தான் வர்றியான்றப்ல” கேலியா சிரிச்சுது!

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE