அடுத்து ‘தி கழக ஃபைல்ஸ்’ தான்!

By சானா

அதிகாலையில் வாக்கிங் போயிருந்த பாச்சா, ஒரு சந்தில் அகஸ்மாத்தாகத் திரும்பியபோது பெரிய சைஸ் கறுப்புப் பூனைகள் பல ஒன்று திரண்டு ஒன்றுக்கொன்று சண்டையிட ஆயத்தமாகி நின்றதைப் பார்த்துத் திடுக்கிட்டு நின்றான். ஒரு சில நொடிகளில் கியாம்...புயாம் என கிளம்பிய சத்தத்தைக் கேட்டு கிறுகிறுத்துப்போனவன், கிலோமீட்டரையெல்லாம் தாண்டி டன் மீட்டரில் தடதடவென ஓடி அறை வந்து சேர்ந்தான். வழக்கம்போல் வருத்தப்படாமல் அசுவாரசியமாக அவனைப் பார்த்த பறக்கும் பைக், “இப்பல்லாம் பேட்டி ஆரம்பிக்கிறதுக்கு முன்னாடியே பேயறைஞ்ச மாதிரி ஆயிடுற... இன்னிக்கு என்ன பஞ்சாயத்து?” என்று கேட்டது.

பாரிய பூனைகள் நடத்திய ஏரியா சண்டை பற்றி எடுத்தியம்பிய பாச்சாவைப் பார்த்து ஏளனமாகச் சிரித்த பறக்கும் பைக், “இதுக்கெல்லாம் பயப்படக் கூடாது. பெருமைப்படணும். கறுப்புப் பூனைகள்னாலே நம்மைக் காக்க வந்திருக்கும் கடமை வீரர்கள்தானே! தமிழக எதிர்க்கட்சித் தலைவர் (!) அண்ணாமலையைப் பார்த்தியா? அன்றாடம் அரசியல் பேசி அடுத்தடுத்து பல பிரச்சினைகளைச் சந்திக்கிறதால அரசாங்கமே அவருக்கு ‘எக்ஸ்ஒய்இஸட்ஏபிசி’ பாதுகாப்பு குடுத்திருக்கு. கறுப்புப் பூனைகள் என்ன கறுப்பு டைனோசரே கம்பீரமா அவரைச் சுத்தி நிற்கும். அவரைப் பார்த்து தைரியத்தையும் தன்னம்பிக்கையையையும் கத்துக்குவியா... சதா தடுமாறிக்கிட்டு இருக்கியே!” என்றது.

ஆக, அன்றும் அண்ணாமலைதான் முதலில் என முடிவானது.

‘காத்திருந்து காத்திருந்து... காலங்கள் போகுதடி’ பாடல் காற்றில் ஒலிக்க கமலாலயத்தில் நாட்கணக்கில் தவமிருந்ததில் தாடையில் தாடி படர நின்றிருந்தார் தாமரைக் கட்சித் தலைவர். அவரைச் சுற்றி நேட்டோ படைகளுக்கு நிகராக நெட்டுக்குத்தலான உயரத்தில் சில பல செக்யூரிட்டி அதிகாரிகள் நின்றிருந்தார்கள்.

சற்றே கிலியெடுத்தாலும், சஞ்சலத்தைக் கட்டுப்படுத்திக்கொண்டு அவர் முன்னே சென்று நின்ற பாச்சா, “கைது பண்ண காவல் துறை வரும்னு காத்துக்கிட்டே இருக்கீங்களே... அதுக்குக் கட்சிப் பணியிலேயே இருந்தா எப்படி ஒர்க் அவுட் ஆகும்? திராவிடக் கட்சிக்காரங்க மாதிரி தெருவுல இறங்கி திகைக்க வச்சாத்தானே காவல் துறை வந்து கைது பண்றதுக்குக் கொஞ்சமாச்சும் கவுரதையா இருக்கும்! இப்படி செட் பிராப்பர்ட்டி மாதிரி சீனியர் தலைகளைக்கூட வச்சிக்கிட்டு சிரிச்சிக்கிட்டே பேசிக்கிட்டு இருந்தா எப்படி?” என்றான்.

“இது ரொம்ப சீரியஸ் பிரச்சினைங்கண்ணா. திமுககாரங்க இப்பெல்லாம் எங்களுக்குப் போட்டியா எல்லாத்தையும் செய்ய ஆரம்பிச்சுட்டாங்க. இப்பெல்லாம் நிறைய பொய் பேசுறாங்க” என்று அண்ணாமலை சொன்னதும் பக்கத்தில் இருந்த பஞ்சாபி செக்யூரிட்டி ஆபீஸரே பகபகவெனச் சிரித்தார்.

“அதெல்லாம் உங்களுக்குள்ள இருக்கிற அரசியல் போட்டி சார். ஆட்சிக்கு வந்துட்டாலே அப்படித்தானே” என்று சிரிப்பைக் காட்டாமல் செப்பிய பாச்சா, “ஐபிஎஸ் ஆபீஸரா இருந்தவர்னு அவ்ளோ பில்டப் கொடுத்துட்டு கடைசியில 600 கோடி ரூபாய்க்கே ஒர்த் இல்லைன்னு சொல்றீங்களே? ‘காஷ்மீர் ஃபைல்ஸ்’ மாதிரி ரெண்டு மூணு படங்களை ப்ரொமோட் பண்ணி கலெக்‌ஷனை அள்ள வச்சா கணிசமா சில பல கோடி ரூபாயை நஷ்ட ஈடா நச்னு கொடுத்துடலாமே?” என்றான்.

“நல்ல ஐடியா! உடனடியா அதுக்கான முயற்சிகள்ல நாங்க சீரியஸா இறங்குறோம். அடுத்து, விவேக் அக்னிஹோத்ரியை, ‘தி கழக ஃபைல்ஸ்’னு ஒரு படம் எடுக்கச் சொல்லப்போறோம். அதுல பல கலகக்காரர்களைக் காலி பண்ணப்போறோம். ஈவு இரக்கம், தயவுதாட்சண்யம் பார்க்காம அரசியல் பண்ணணும்னு முடிவு பண்ணிட்டோம். இறங்கி அடிக்காம விடுவோம்ங்களாண்ணா?” என்றார் அண்ணாமலை.

“சரிதான் சார். கமலாலயத்துல ஏழு மணி நேரம் காத்திருந்ததா சொல்லியிருக்கீங்க. இன்னும் ஒரு அரை மணி நேரம் காத்திருந்தா ஏதாச்சும் இன்டரஸ்டிங்கா நடந்திருக்கும்ல?” என்று பாச்சா உள்குத்துடன் கேட்டதை உவகையுடன் காதில் வாங்கிக்கொண்ட அண்ணாமலையின் காதில் கரகரவென கிசுகிசுத்தார் அருகில் இருந்த கரு நாகராஜன். சட்டென நிமிர்ந்து, “என்ன சொன்னீங்கண்ணா?” என்று அண்ணாமலை கேட்டதும் அங்கிருந்து எஸ்கேப்பானான் பாச்சா.

அடுத்து முதல்வர் மு.க.ஸ்டாலின்.

துபாய் ஷேக்குகளுடன் ஹேண்ட்-ஷேக் செய்த களைப்பே தெரியாமல், டெல்லியில் அரசியல் புள்ளிகளுடன் அளவளாவிய முதல்வர், செல்ஃபி எடுக்கவந்த மக்களுடன் பேசிக்கொண்டு ஜாலியாக ஜாகிங் செய்தபடி சரியாக வழி தெரியாமல் சென்னைக்கே வந்து சேர்ந்திருந்தார்.

“என்ன சார் இது! உங்களுக்குச் சரியா வழிகாட்ட அவ்வளவு பேர் இருக்கிறதா சொன்னாங்க. ஆனாலும், சபை காட்டுற வழியைவிட சபரீசன் காட்டுற வழியே சாலச் சிறந்ததுங்கிற மாதிரி குடும்ப சகிதமாவே சுத்துறீங்களே... பாருங்க இப்ப வழி தெரியாம முழிக்கிற மாதிரி ஆய்டுச்சு” என்று அவரிடம் சொன்னான் பாச்சா.

“நீங்க சொல்ற கோரிக்கையை கவனத்துல வச்சுக்கிறேன். கூடிய சீக்கிரம் அதைத் தீர்க்கிற வேலையை இந்தக் கழக அரசு செய்யும்ங்கிறத இந்த நேரத்துல நா உறுதியா தெரிவிச்சிக்க விரும்புறேன். முந்தைய ஆட்சியில...” என்று நீளமாகப் பேசிக்கொண்டே போன ஸ்டாலினிடம் எப்படி ஸ்டாப் சொல்வது எனத் தெரியாமல் ஸ்டன்னாகிப்போய் நின்றான் பாச்சா.

பின்னர் சுதாரித்துக்கொண்டு, “சார் நான் கேட்டது கேள்வி சார். என்ன கேட்டாலும் ஏதாவது ஒரு விளக்கத்தைச் சொல்லி எஸ்கேப் ஆகிறதை விட மாட்டீங்களா?” என்றான் பாச்சா.

உடனே அருகில் இருந்த உதயநிதி, இன்பநிதி... இத்யாதி குடும்பத்தினர், “முதல்வர் தன்னோட மக்களுக்காக... வீ மீன் தமிழக மக்களுக்காக உழைச்சுட்டு இப்பத்தான் சென்னைக்கு வந்திருக்கார். சீரியஸா எதுனா கேட்கிறதுன்னா கேளுங்க!” என்று உத்தரவிட்டனர்.

“ஒருபக்கம் மத்திய அரசு பெட்ரோல், டீசல் விலையை மானாங்கன்னியா ஏத்துதுன்னு மைக் பிடிச்சுப் பேசுறீங்க. ஆனா, நீங்களே... ஐ மீன் உங்க அரசாங்கமே சொத்து வரியை 100 சதவீதம் வரைக்கும் ஏத்திவிட்டுருக்கீங்களே... எக்ஸ்போவுல எக்கச்சக்க காஸ்ட்லி பொருளா பார்த்துப் பார்த்து ஏழைகளையும் அந்த லெவலுக்கு நினைச்சு டாக்ஸ் போடுறீங்களாக்கும்?” என்று கேட்டான் பாச்சா.

இந்தக் கேள்விக்கு யார் பதில் சொல்வது என குடும்பத்தினர் ஒருவரையொருவர் பார்த்தபடி குழம்பி நிற்க, “அதுக்கு... சம்பந்தப்பட்ட அமைச்சர் பதில் சொல்வார்” என்று குரல் வந்தது. குரல் வந்த திசை நோக்கிப் பார்த்தால், துபாய் எக்ஸ்போவில் வாங்கிய ‘கிச்சன்’வேர் பொருட்களைக் கையில் வைத்துப் பார்த்தபடி துர்கா ஸ்டாலின் நின்றிருந்தார்.

பேட்டியை அத்துடன் முடித்துக்கொண்டான் பாச்சா.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE