புலிகளால் புகழின் உச்சிக்குச் சென்ற புகைப்படக் கலைஞர்!

By ம.சுசித்ரா

வனப்பகுதிகளை மனிதர்கள் ஆக்கிரமிப்பதால் காட்டுயிர்கள் மனிதர்களின் வாழ்விடங்களில் புகுந்து தாக்குதலில் ஈடுபடுகின்றன என்பது கடந்த இரு தசாப்தங்களாக சூழலியலாளர்களாலும் செயற்பாட்டாளர்களாலும் விவாதிக்கப்பட்டு வருகிறது. இதையும் கடந்து மனிதர்கள்-விலங்குகள் எதிர்கொள்ளல் தொடர்பாக அறிந்துகொள்ள எவ்வளவோ உள்ளது என்பதை காட்சி வடிவில் அழுத்தமாக உணர்த்துகின்றன புகைப்படக் கலைஞர் செந்தில் குமரனின் படங்கள்.

ஊருக்குள் புகுந்த புலிக்கு மயக்க ஊசி செலுத்தும் வனத்துறையினர்...

தடோபா-அந்தாரி புலிகள் புகலிடத்தில் சாலையைக் கடந்து செல்லும் ஆண் புலி

கடந்த பத்தாண்டுகளாக இந்தியாவின் அறுபதுக்கும் அதிகமான வனக்கிராமங்களுக்குப் பயணித்து அம்மண்ணின் பூர்வக்குடிகளோடும், காட்டுயிர்களோடும் தன் கேமரா லென்ஸ் வழியாக பேசிப் பழகியவர் மதுரையைச் சேர்ந்த செந்தில் குமரன். இவரது கேமரா கண்கள் அகப்படுத்திய புலிகள் மற்றும் அதுசார்ந்த மனிதர்களின் வாழ்க்கை உலகின் தலைசிறந்த புகைப்படங்களுக்கு வழங்கப்படும் ‘வேர்ல்டு பிரெஸ் போட்டோ’ விருதுக்குத் தேர்வாகியுள்ளது.

செந்தில் குமரன்

130 நாடுகளைச் சேர்ந்த 4 ஆயிரம் புகைப்படக் கலைஞர்களின் 65 ஆயிரம் புகைப்படங்களில் செந்தில் குமரனின் 30 படங்கள் தேர்வு செய்யப்பட்டுள்ளன. ஆசிய பிராந்தியத்திலிருந்து இந்த விருதுக்குத் தேர்வாகியிருக்கும் நால்வரில் ஒருவர் செந்தில் குமரன். சர்வதேச அங்கீகாரம் பெறுவது செந்தில் குமரனுக்கு புதிதல்ல. கம்போடியா நாட்டில் உள்ள விலங்குகளுக்கான கள்ளச்சந்தை குறித்த ஆவணப்புகைப்பட பதிவை ஏற்படுத்தியதற்காக 2014-லேயே ’ஹோப் ஃபிரான்காய்ஸ் டிமுல்டர் கிராண்ட்’ விருது இவருக்கு வழங்கப்பட்டது.

வால்பாறையில் மீட்கப்பட்ட 9 மாத புலிக்குட்டி...

இதுதவிர, நேஷனல் ஜியாகிரஃபிக் சொசைட்டி வழங்கும் வளரும் ஒளிப்படக் கலைஞர் விருது, ’பிக்சர்ஸ் ஆஃப் தி இயர் இன்டர்நேஷனல்’, ’ஜியாகிரஃபிகல்’ ஆண்டு புகைப்படக் கலைஞர் விருது, இஸ்தான்புல் புகைப்பட விருது உள்ளிட்ட 15 சர்வதேச விருதுகளால் கவுரவிக்கப்பட்டிருக்கிறார். இத்தனை மகத்தான சாதனைகளைப் படைத்த தமிழரை தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் உட்பட பலரும் பாராட்டிக்கொண்டிருக்கும் வேளையில் நாமும் டைட் குளோசப்பில் பிடித்துப் பேசினோம்.

தடோபா-அந்தாரி புலிகள் பகுதி வாழ் மக்கள்

மனிதர்களுக்கும் விலங்குகளுக்கும் இடையிலான மோதலை மையப்படுத்தி புகைப்படம் எடுக்க உங்களைத் தூண்டியது எது? என்று கேட்டபோது, “கல்லூரி நாட்களில் ஓவியப்போட்டியில் வென்றதற்காக பரிசாகக் கிடைத்த 1,500 ரூபாயைக் கொண்டு வாங்கியதே என்னுடைய முதல் கேமரா. தொடக்கத்தில் 2004-ம் ஆண்டு வாக்கில் சமூகப் பிரச்சினைகள் சார்ந்த படங்களை எடுப்பதிலேயே அதிக நாட்டமாக இருந்தேன். அந்த வகையில் ஜல்லிக்கட்டு பற்றிய புகைப்படத் தொடர், திருநங்கைகளின் வாழ்க்கை உள்ளிட்டவற்றுக்கு முக்கியத்துவம் கொடுத்தேன். அந்த சமயங்களில், ’வேர்ல்டு பிரெஸ் ஃபோட்டோ' விருதுவென்ற புகைப்படங்களைத் தேடி ஆர்வதோடு பார்ப்பேன்.

அப்போது, ’இயற்கை’ என்ற பிரிவில் அந்த விருதை வென்ற படங்கள் பிரமிக்கச் செய்தன. வேட்டையாடப்பட்ட யானை, தந்தம் பிடுங்கப்பட்ட யானை, யானையின் இறைச்சியை அறுத்தெடுக்கும் பழங்குடிகள், கோடீஸ்வரர்கள் பொழுதுபோக்காக வனவிலங்குகளை வேட்டையாடி அதன் தலைகள்,கொம்புகள், பற்களை பிடுங்கி எடுத்தல் போன்ற புகைப்படத் தொடர்களைப் பார்க்கப் பார்க்க எனக்குள்ளும் அத்தகைய ஆழமான பிரச்சினைகள் குறித்துப் பதிவு செய்ய வேண்டும் என்கிற உந்துதல் உண்டானது” என்றார் செந்தில் குமரன்.

ஆனைமலையில் இறந்து கிடந்த புலிக்கு பிரேத பரிசோதனை

மேலும் அவர் கூறுகையில், “புலிகளைக் கேமராவில் பதிவு செய்வது லேசான காரியமல்ல. 2012-ல் முதுமலை காட்டில் தங்கியிருந்து யானைகள் குறித்த படங்களை எடுத்துக்கொண்டிருந்தபோது வால்பாறை அருகே ஒரு கிராமத்துக்குள் ஒரு வீட்டுக்குள் புலி பதுங்கியிருப்பதாகத் தகவல் வந்தது. அதை மீட்டு மீண்டும் காட்டுக்குள் விடுவதற்காக மருத்துவர்கள் அடங்கிய அதிகாரிகள் குழு முதுமலையிலிருந்து புறப்பட்டபோது நானும் உடன் கிளம்பினேன்.

நாங்கள் அந்த வீட்டை அடைந்தபோது இருட்டி விட்டிருந்தது. உடல் முழுக்க காயங்களுடன் வாரக் கணக்கில் இரை கிடைக்காமல் சோர்ந்து படுத்திருந்தது அந்த புலி. ஊர்மக்களோ அச்சத்தில் அந்த புலியை அடிக்க ஆயுதங்களோடு சுற்றி வளைத்து நின்றுகொண்டிருந்தனர். காட்டுயிர் புகைப்படக் கலைஞராக அதுவரை நான் பார்த்த வன விலங்குகள் பலமும் ஆரோக்கியமும் மிக்கவை. ஆனால், உயிர் ஊசலாடும் நிலையில் பரிதாபமாகக் கிடந்த இந்த புலி என்னை அதிர்ச்சிக்குள்ளாக்கியது. மயக்க மருந்து செலுத்தி சிகிச்சை கொடுத்து அடுத்தநாள் காட்டுக்குள் கொண்டு விடுவதற்குள் அந்தப் புலி இறந்துபோனது. அன்று எனது கேமராவில் பதிந்த அந்தப் புலியின் படங்கள் என் ஆழ்மனத்திலும் பதிந்துவிட்டன. புலிகள்-மனிதர்கள் எதிர்கொள்ளல் குறித்து பதிவு செய்யும்படி இயற்கை என்னை அழைப்பதாக அந்த நொடியில் தோன்றியது” என்றார்.

பறவைப் பார்வையில் ஆனைமலை புலிகள் காப்பகம்...

இந்தச் சம்பவத்தைத் தொடர்ந்து, மனிதர்களை வேட்டையாடும் புலிகளைத் தேடி மேற்கு வங்கத்தின் சுந்தரவனக் காடுகள், மகாராஷ்டிரா தடோபா-அந்தாரி புலிகள் புகலிடம் என நாட்டில் உள்ள 12 புலிகள் காப்பகங்களுக்கு பயணித்திருக்கிறார் செந்தில் குமரன். புலிகளின் நடமாட்டம் அதிகரிப்பதாலும் ஊருக்குள் இருக்கும் கால்நடைகளைப் புலிகள் அடித்துக் கொல்வதாலும் ஒட்டுமொத்த ஊரையே காலி செய்துவிட்டுப் புலம்பெயர்ந்த ஆயிரக்கணக்கான மனிதர்களையும் அரசு அம்மக்களுக்கு நிவாரணம் வழங்குவதையும் இந்தப் பயணங்களில் சந்தித்திருக்கிறார்.

ஒருபுறம், ஊர் மக்களால் விஷம்வைத்து அல்லது அடித்துக் கொல்லப்படும் புலிகள், மறுபுறம், புலிகளால் வேட்டையாடப்படும் மனிதர்கள், கால்நடைகள் என விலங்குகள் தரப்பு, மக்கள் தரப்பு, வனத்துறையினர் தரப்பு, அரசு தரப்பு போன்ற பல்வேறு கோணங்கள் செந்தில் குமரனுக்கு முன் விரியத் தொடங்கியதால் காட்டுயிர் புகைப்படக் கலைஞர் என்கிற நிலையிலிருந்து சூழலியல் புகைப்படக் கலைஞராக தன்னை இன்னும் விசாலப்படுத்திக் கொண்டார்.

சுந்தர்வன நதியோரம் நண்டு பிடி...

அதுகுறித்து பேசிய அவர், “புலிகளை மட்டுமே காக்க வேண்டும் என்கிற கண்மூடித்தனமான தரப்பை சேர்ந்தவன் நான் அல்ல. வனத்தைச் சார்ந்த வாழ்வியலைக் கொண்ட பழங்குடிகளின் வாழ்வாதாரமும் முக்கியம். ஆதிகாலப் பழங்குடிகள் தங்களுடைய அடிப்படைத் தேவைகள் தவிர வேறெதையும் வனத்திலிருந்து எடுப்பதில்லை. அவர்களால் காடுகளுக்கும், காட்டுயிர்க்கும் பாதிப்பில்லை. ஆனால் அண்மைகாலமாக, புலிகளின் எண்ணிக்கை பல மடங்கு பெருகி உள்ளது. இதனால் அவற்றுக்கு காட்டு நிலப்பரப்பு அதிகம் தேவைப்படுகிறது. இத்தகைய சூழலில் விவசாயிகளையும், பழங்குடியினரையும் அரசு காப்பாற்றினால் மட்டுமே காட்டுயிரையும் காப்பாற்ற முடியும்” என்றார்.

நிறைவாக, “துல்லியமாக படம்பிடிக்கூடிய அதிநவீன கேமராக்கள் தினத்துக்கும் வந்துகொண்டே இருக்கும் நிலையில், புகைப்படக் கலைஞராக எத்தனிப்பவர்களிடம் பகிர்ந்துகொள்ள ஏதேனும் செய்தி உண்டா” எனக் கேட்டபோது, “கேமரா என்பது கருவி மட்டுமே. ஓவியம் தீட்டப் பயன்படும் கேன்வாஸ் பலகை போன்றதுதான் படம் பிடிக்கும் கேமராவும். கேன்வாஸ் பலகையில் நீங்கள் என்ன வரையப்போகிறீர்கள் என்பதே கேள்வி. 10 லட்ச ரூபாய் கேமராவில் கல்யாண போட்டோ எடுப்பது பெரிதா அல்லது 10 ஆயிரம் ரூபாய் கேமராவில், மனித உரிமைகள் பிரச்சினை குறித்தோ, சமூகச் சிக்கல் குறித்தோ பதிவு செய்வதன் மூலம் பேசா பொருளை கேள்விக்குட்படுத்துவது முக்கியமா என்பதை நீங்கள்தான் தீர்மானிக்க வேண்டும்” என்று விடைகொடுத்தார் உலகப் புகழ்பெற்ற அந்த புகைப்படக் கலைஞர்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE