பெரியகுளம் ஏலாவை பேசவைத்த வழக்கு!

By என்.சுவாமிநாதன்

‘இந்த நீதிமன்றம் பல விசித்திரமான வழக்குகளைச் சந்தித்திருக்கிறது’ என்ற பராசக்தி வசனம் போன்ற விசித்திரமான ஒரு வழக்குதான் அது. 1995-ம் ஆண்டு குமரி மாவட்டத்தின் இரணியல் நீதிமன்றத்தில் பெரியகுளம் நீரினைப் பயன்படுத்துவோர் சங்கத்தின் சார்பில் தொடரப்பட்டது அந்த வழக்கு. அதன் பின்னணி சுவாரஸ்யமானது.

‘நெல்லைத் தவிர வேறு எந்த பயிரும் சாகுபடி செய்யக் கூடாது’ என்பது தான் வழக்கே! நான்காண்டுகள் வழக்கு நடந்தது. கடைசியில் நெல் மட்டுமே சாகுபடி செய்யவேண்டும் என தீர்ப்பும் வந்தது. அந்தத் தீர்ப்பை மதித்து இன்றுவரை பெரியகுளம் ஏலாவில் நெல் சாகுபடி மட்டுமே நடக்கிறது.

பெரியகுளத்தை பார்வையிடும் சோ.தர்மன்...

’வள்ளியாறும் பெரியகுளம் ஏலாவும்’ என்ற தனது புத்தகத்தின் மூலம் இதுகுறித்து அரிய தகவல்களைத் தொகுத்திருக்கிறார் வேல்முருகன் பெரியவன். கன்னியாகுமரி மாவட்டம், சாத்தன்விளையைச் சேர்ந்த இவர், சென்னை அரசு திரைப்படக் கல்லூரி பேராசிரியர். கவிஞர் விக்கிரமாதித்தனை முதன்மைப் பாத்திரமாகக் கொண்டு இயற்கை, சுற்றுச்சூழலை மையமாகக் வைத்து இவர் எடுத்த ‘அடவி’ திரைப்படம் சர்வதேச திரைப்பட விழாக்களில் பங்கெடுத்து 17 விருதுகளைப் பெற்றது.

விவசாயக் குடும்பத்தில் பிறந்த வேல்முருகன் பெரியவன், தன் மண்ணை வளமாக்கும் வள்ளியாறு குறித்தும் அதில் இருந்து தண்ணீர் பெறும் பெரியகுளம் பற்றியும் அதனால் பாசன வசதி பெறும் தன் கிராமங்கள் பற்றியும் எழுதியுள்ளார். இதன்மூலமே கால் நூற்றாண்டுக்கு முன்பு நடந்த இந்த சரித்திர முக்கியத்துவம் வாய்ந்த வழக்கும் வெளிச்சத்துக்கு வந்துள்ளது.

இவரின் இந்த புத்தகத்தை மதிப்பீடு செய்து பேசுவதற்காக நாகர்கோவிலுக்கு அழைக்கப்பட்டிருந்த எழுத்தாளர் சோ.தர்மன், வள்ளியாறு, பெரியகுளம் பகுதிகளை நேரடியாகப் பார்வையிட்டு மனத்திருப்தியோடு மைக் பிடித்தார். அனைவரையும் இந்தப் புத்தகத்தில் ஆச்சரியப்பட வைத்த ஒரு நிகழ்வு, நெல் காக்க ஒரு வழக்கே தொடுத்த சம்பவம்தான்.

வேல்முருகன் பெரியவன்

அதுபற்றி நம்மிடம் பேசினார் வேல்முருகன் பெரியவன். “என்னோட அப்பா பெரியவன் நாடார் முழுநேர விவசாயி. படித்து, அரசுக் கல்லூரியில் வேலைக்குப் போய்விட்டாலும் நான் விவசாயத்தை கைவிடாமல் இருக்கக் காரணம், சிறுவயது முதலே விவசாயப் பின்னணியில் வளர்ந்தது தான். இதோ இப்போதுகூட லீவில் வந்து என் வயலில் விவசாய வேலை பார்க்கிறேன். நெல்லும், இந்த ஆறும், குளமும் நம் முன்னோர்கள் அடுத்த தலைமுறைக்கு விட்டுச் சென்றிருக்கும் சொத்து. ஆனால் இந்தத் தலைமுறைக்கு அதன் மேன்மையே தெரியவில்லை. நெல்லை வெறுமனே சோறாக மட்டுமே தட்டில் பார்க்கும் ஒருதலைமுறையை உருவாக்கிவிட்டோம்.

பெரியகுளம் பாசனத்தில் தான், என் வயலும் உள்ளது. இங்கு காலம், காலமாக நெல் சாகுபடிதான். விவசாயிகளின் பாசனச் சங்கம் அதை தீர்மானமாகவே வைத்துள்ளனர். இதைப்பற்றி ஆராய்ந்தபோதுதான் 1995-ல் நடந்த இந்த வழக்குப் பற்றி தெரியவந்தது.

நீண்டு விரியும் பெரியகுளம்

1995-ல் இரணியல் நீதிமன்றத்தில் அப்போது பெரியகுளம் பாசன விவசாயிகள் சங்கத் தலைவராக இருந்த ராமசாமி நாடார், இந்த வழக்கைத் தொடர்ந்தார். 155 ஏக்கர் கொண்ட பெரியகுளத்தில் இருந்து இப்போதும் 600 ஏக்கரில் முழுக்க நெல் விவசாயம் மட்டுமே நடப்பதற்கு அடித்தளம் அமைத்தவர் அவர்தான்.

1995-ல் தான் எங்கள் ஊரில் நவீன விவசாயம் எட்டிப் பார்க்கத் தொடங்கியது. எங்கள் ஊருக்குள்ளும் டிராக்டர்கள் எட்டிப் பார்த்தது. பசுமைப்புரட்சியின் விளைவாக வேளாண்மையில் இயந்திரங்களின் ஆதிக்கம் தலைதூக்கிய காலம் அது. நெல்லைத் தவிர வாழை, தென்னை என மாற்றுப்பயிர் சாகுபடி அறிமுகமானது. தென்னையில் வருவாய் அதிகம் கிடைக்கும் என்றாலும் நெல் என்பது நம் உணர்வோடு கலந்த விஷயம் அதை விட்டுவிடக்கூடாது என பாசன கமிட்டி விவசாயிகள் தீர்க்கமாக முடிவுசெய்தனர்.

விவசாயம் என்பது வெறுமனே வருமானத்துக்கு மட்டுமே ஆன ஏற்பாடு அல்ல. அதில் மனத்திருப்தியும் இருக்கிறது. அது நெல் சாகுபடியில் மட்டுமே சாத்தியம். ராமசாமி நாடார், புரவு கமிட்டியின் சார்பில் நீதிமன்ற படியேறினார். இந்த வழக்கு முழுதாக 4 ஆண்டுகள் நடந்தது. கடைசியில், 4 ஆண்டுகளில் எதிர்மனுதாரர்கள், தென்னை வளர்ந்து காய்க்கத் தொடங்கிவிட்டது என மனுபோட்டார்கள். இதனால் ஏற்கெனவே நட்டமரங்கள் அப்படியே இருக்கட்டும். இனி பெரியகுளம் பாசனப் பகுதிகளில் புதிதாக யாரும் மாற்றுப்பயிர் சாகுபடி செய்யக் கூடாது. நெல்லை தவிர வேறு பயிர்களை புதிதாக பயிர் செய்ய நிரந்தரமாக அனுமதி இல்லை என தீர்ப்பு வந்தது.

இதன் காரணமாக இன்றைக்கும் எங்கள் ஊரில் 600 ஏக்கரில் கண்ணுக்கு எட்டிய தூரம்வரை நெல்சாகுபடியே நடந்துவருகிறது. அதுமட்டுமில்லாது, இன்றும் எங்கள் பாசனப் பகுதியில் ஒரு விவசாய நிலம்கூட வீட்டுமனையாக மாறவில்லை. ரியல் எஸ்டேட் மாஃபியாக்களின் கண்களில் இருந்தும், எங்கள் கிராமம் தப்பியிருக்க அந்த வழக்கும் ஒரு காரணம். கால் நூற்றாண்டைக் கடந்த இந்த வரலாறை அடுத்தத் தலைமுறைக்கு சொல்லிச் செல்ல வேண்டிய கடமையும், பொறுப்பும் எனக்கு இருப்பதாக நினைத்தேன். அதனால் தான் ‘வள்ளியாறும் பெரியகுளம் ஏலாவும்’ என்னும் புத்தகமே எழுதினேன்’’ என்று முடித்தார் வேல்முருகன் பெரியவன்.

உரிய விலை கிடைக்காதது, வேலையாட்கள் பற்றாக்குறை, அதிகரிக்கும் இடுபொருள் செலவு என விவசாயத்தை நசுக்கும் விதமாக பல்வேறு நெருக்கடிகள் இருந்தாலும் எந்தக் காலத்திலும் நெல்லை தவிர வேறெதுவும் பயிரிடமாட்டோம் என தீர்க்கமாக இருக்கும் பெரியகுளம் பாசன விவசாயிகள் உண்மையிலேயே பாராட்டப்பட வேண்டியவர்கள் தான்!

பெட்டி செய்தி:

யார் முதல் சூப்பர் ஸ்டார்!

அடுத்ததாக, தமிழ்த் திரையுலகின் முதல் சூப்பர் ஸ்டார் யார்? என்பது குறித்த புத்தகத்தை எழுதிவருகிறார் வேல்முருகன் பெரியவன். “தமிழ்த் திரையின் முதல் சூப்பர் ஸ்டார் என்றால் அனைவருமே தியாகராஜ பாகவதரை தான் சொல்கிறார்கள். ஆனால் அவருக்கும் முன்பே, ‘வள்ளி திருமணம்’ என்னும் படத்தில் நடித்த சி.எம்.துரைசாமியின் படம் முழுக்க ஓராண்டு ஓடியது. 1930-ன் பிற்பகுதியில் ஆண்டுக்கு ஒன்று, இரண்டு என்ற கணக்கிலேயே தமிழ்ப்படங்கள் வெளியானது. வள்ளி திருமணத்தின் வெற்றியே அன்றைய காலத்தில் அதிகமான படங்கள் வெளியாகவும், தயாரிக்கவும் உந்துதலாக இருந்தது” எனச்சொல்லும் வேல்முருகன், துரைசாமி குறித்த தகவல்களையும் திரட்டி வருகிறார்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE