ஆதாரை வங்கிக் கணக்குடன் இணைக்கவும்: அப்போதுதான் விவசாயிகளுக்கு ஊக்கத்தொகை

By என்.சுவாமிநாதன்

மத்திய அரசின் பிரதமரின் கிசான் திட்டத்தில் விவசாயிகள் ஊக்கத்தொகை பெறுவதற்கான விதிகளில் சிறிய மாற்றம் செய்யப்பட்டுள்ளது. இந்த மாற்றத்தைச் செய்யும் விவசாயிகளே இனி ஊக்கத்தொகை பெற முடியும் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.

பிரதமரின் கிசான் திட்டத்தின் கீழ் நிலம் உள்ள விவசாயிகளுக்கு நான்கு மாதங்களுக்கு ஒருமுறை தலா 2 ஆயிரம் ரூபாய் வீதம், ஆண்டுக்கு 6 ஆயிரம் ரூபாய் விவசாயத் தேவைக்கும், வேளாண் இடுபொருள்கள் வாங்கவும் ஊக்கத்தொகையாக வழங்கப்பட்டு வருகிறது. இதுவரை இத்திட்டத்தில் சேர்ந்த ஒரு பயனாளிக்கு பத்து தவணையாக கடந்த இரண்டரை ஆண்டுகளாக 20 ஆயிரம் ரூபாய் வழங்கப்பட்டுள்ளது. இதற்கென நிதியை விடுவிப்பதில் மத்திய அரசு இப்போது சிலமாற்றங்களைக் கொண்டு வந்துள்ளது.

இதுவரை வங்கிக் கணக்கிற்கு இந்தத் திட்டத்தில் நேரடியாக நிதி விடுவிக்கப்பட்டுவந்தது. ஆனால் இனி இந்த நிதியானது ஆதார் எண் அடிப்படையில் தான் விடுவிக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இதனால் இத்திட்டத்தில் 11-வது தவணை பெற விவசாயிகள் தங்கள் வங்கிக்கணக்கோடு ஆதார் எண்ணையும் இணைப்பது கட்டாயமாக்கப்பட்டுள்ளது. இதனால் இந்த 11-வது தவணையைப் பெறுவதற்கு விவசாயிகள் தங்கள் வங்கிக்கணக்கில் உடனே ஆதார் எண்ணை இணைக்க வேண்டும். விவசாயிகள் திட்டத்தில் முறைகேடுகளை முற்றாகக் களையவே இப்படி ஒரு திட்டத்தை மத்திய அரசு வகுத்துள்ளது குறிப்பிடத்தக்கது.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE