`முடிந்தால் உதவுங்கள்'- பிறந்தநாளில் நெல்லை கண்ணன் உருக்கமான பதிவு

By என்.சுவாமிநாதன்

தமிழ்ப் பேச்சாளர் நெல்லை கண்ணனுக்கு இன்று பிறந்தநாள். அவர் தன் மருத்துவச் செலவுக்கு சிரமப்படுவதாகவும், வாய்ப்பிருப்பவர்கள் உதவுமாறும் தன் முகநூலில் வேண்டுகோள் விடுத்துள்ளார்.

திருநெல்வேலியின் தவிர்க்க முடியாத அடையாளங்களில் ஒருவர் நெல்லை கண்ணன். காங்கிரஸ் பேச்சாளர், காமராஜர் புகழ்பாடுபவர், இலக்கியப் பேச்சாளர் என பன்முகத் தன்மை கொண்டவர். அண்மையில் விடுதலை சிறுத்தைகள் கட்சியின் விழா ஒன்றில் இவர் பங்கெடுத்துப் பேசினார். அதே நிகழ்ச்சிக்கு வந்திருந்த முதல்வர் மு.க.ஸ்டாலினை நோக்கி, ‘உங்களின் கடைக்கண் பார்வையில் என்னையும் வைத்துக்கொள்ளுங்கள்’ என நா தளு, தளுக்க கும்பிட்டபடியே பேசினார். அதற்கு கைமேல் பலனாக கடந்த சில வாரங்களுக்கு முன்பு நெல்லை கண்ணனுக்கு இளங்கோவடிகள் விருதும் வழங்கப்பட்டது. இதன் பரிசுத்தொகையாக 2 லட்ச ரூபாய் வழங்கப்பட்டது.

நெல்லை டவுணில் நெல்லை கண்ணனுக்கு சொந்தமான வீடு இருக்கிறது. இந்நிலையில் இன்று தனது முகநூல் பக்கத்தில் ஒரு பதிவிட்டுள்ள நெல்லை கண்ணன், ‘அகவை 78 இல் அடியெடுத்து வைக்கிறேன். செலவினங்கள் அதிகரித்துக்கொண்டே போகின்றன. மருத்துவ செலவுகள் நல்ல நண்பர்கள் உதவிக்கொண்டிருக்கின்றனர். மற்றவர்களிடம் கேட்க நாணம் தடுக்கிறது. முடிந்தால் உதவுங்கள்!’ என பதிவிட்டுள்ளார்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE