பவரை கட் பண்ணிடுவோம் பாத்துக்கோங்க!

By சானா

அன்று அதிகாலையிலேயே, அரதப்பழசான ‘ஆயிரம் தலை வாங்கிய அபூர்வ சிந்தாமணி’ படத்தை ஆர்வத்துடன் டிவியில் பார்த்துக்கொண்டிருந்தான் பாச்சா. ஓடிடியில் உலகப் படங்கள் பார்க்கும் பழக்கம் கொண்ட பறக்கும் பைக், ஒரு கட்டத்தில் பொறுமையிழந்து டிவி ரிமோட்டை அவனிடமிருந்து பிடுங்கி சீற்றத்துடன் சேனலை மாற்றியது. அங்கொரு ஆங்கில சேனலில், ‘10,000 பி.சி’ திரைப்படம் ஆரவாரமாக ஓடிக்கொண்டிருந்தது. ஆத்திரமடைந்த பாச்சாவும் ரிமோட்டைப் பிடுங்கி சேனலை மாற்ற, ஆதித்யா சேனலில், ‘ஆயிரம்... ரெண்டாயிரம்... நாலாயிரம்... பிம்பிலிக்கி பிலாப்பி’ எனும் காமெடி சீன் காட்சிக்கு வந்தது.

பகை மறந்து பகபகவென சிரித்த பாச்சா, அடுத்து ஆனந்தமாக சேனலை மாற்ற, லெங்த்தியான ஃப்ளாஷ்பேக் டயலாக்கின் முடிவாக லெஃப்ட் சைடில் லிப்ஸை இழுத்தவாறு ரஜினி பேசும் ‘மலேடா... அண்ணாமலே’ டயலாக் ஒலித்தது.

‘ரைட்டு... அப்ப இன்னிக்கு அவர்(!) தான் முதல்ல’ என்று இருவரும் தீர்மானித்துக்கொண்டனர்.

அன்றாடம், தினசரி, சராசரி, சரமாரி, ‘வேற மாரி’ பிரஸ் மீட்டுகளில் அசரடிக்கும் அண்ணாமலை, அரசுக்கு எதிரான அன்றைய புகார்ப் பட்டியலில்கூட ஆர்வம் காட்டாமல், கனமான அட்டை கொண்ட கன்னடப் புத்தகம் ஒன்றை வாசித்துக் கொண்டிருந்தார். வீடெங்கும் விதவிதமான புத்தகங்கள் இறைந்து கிடந்தன. சுவர்கள் முழுவதும் புத்தகக் கவர்கள் சுண்டி இழுத்தன.

“இன்னிக்கு இவ்வளவுதானா... இல்லை இன்னும் லோடு வரணுமா சார்?” என்று கேட்டபடியே என்ட்ரி கொடுத்த பாச்சா, “ஃபேஸ்க்புக், ட்விட்டர்னு உங்க 20,000 மேட்டர்தான் ஏகப் பிரபலம் தெரியுமா?” என்றும் எடுத்துக்கொடுத்தான்.

“இல்லீங்ணா... நா ஃபேஸ்புக்கையெல்லாம் பார்க்கிறதில்லீங்க. ஒன்லி புக்ஸ்... புக்ஸ்... புக்ஸ். இப்பக்கூட ஆன்லைன்ல புதுசா புக் ஒண்ணை ‘புக்’... ஐ மீன் ஆர்டர் பண்ணிருக்கேன். ஆளுங்கட்சித் தலைவர் நான் ஆர்டர் போட்டா, அடுத்த நாளே டக்னு கைக்கு வந்துடும் புக்” என்று அடக்கமாகச் சிரித்தார் அண்ணாமலை.

“ஆமாமா... நீங்க ஆளுங்கட்சின்னா, நானும் ஆளுங்கட்சிதான்னு திமுக அரசுக்கு சென்ட்ரல் பயத்தைக் காட்டி தில்லா பேசுறீங்களே” என்றான் பாச்சா.

“வேலையே செய்யாத கம்பெனியை வச்சி மின்சாரத் துறை அமைச்சர், கமுக்கமா வேலை வாங்குறது கமிஷன் அடிக்கத்தான்னு கம்ப்ளெய்ன்ட் பண்றேன். ஆனா, நான் படிச்ச படிப்பைக்கூட மதிக்காம, அவர் என் மேல கேஸ் போடுறதா மிரட்டுறாரு” என்று சொல்லிவிட்டு பக்கத்திலிருந்த புக்ஸ் குவியலைப் பார்த்த அண்ணாமலை, “அதுக்காக நாங்க அசந்துட மாட்டோம். அடுத்தடுத்து புகாரை எடுத்தெடுத்து கொடுத்துக்கிட்டே இருப்போம். ஒண்ணுக்கு விளக்கம் சொல்றதுக்குள்ள ஓராயிரம் கம்ப்ளெய்ன்ட்ஸை அடுக்குவோம்” என்று ஆவேசமானார்.

“மொத்தமா ஒரு 20,000 கம்ப்ளெய்ன்ட்ஸ் வரும்ங்களா?” என்று பாச்சா கேட்டபோது, அண்ணாமலைக்குள்ளிருந்து ஒரு ஐபிஎஸ் எட்டிப்பார்த்தார். ஆனாலும், அவரை அடக்கி அரசியல் தலைவராகவே பேட்டியைத் தொடர்ந்த அண்ணாமலை, “இந்த ஆட்சி இப்படியே தொடர்ந்தால், பவர் இல்லாத மாநிலமாக தமிழகம் மாறும். பவர்ல அவங்க கைவச்சா, அவங்க பவரை நாங்க கட் பண்ணிடுவோம். என்னை ஜெயில்ல போட்டாலும் வெயில்ல... சாரி வெளில வந்து வேற ஒரு கம்ப்ளெய்ன்ட் சொல்வேன்” என்றார் அழுத்தம் திருத்தமாக.

“அதெல்லாம் சரிதான். ஆனா, கார்ப்பரேட் தான் ஊழலின் ஊற்றுக்கண்ணுன்னு கம்பீரமாச் சொல்லிருக்கீங்களே... இது அதானி, அதானி ஃப்ரெண்ட் மோடிக்கே வேடிக்கையா இருக்கும்ல” என்று பாச்சா சொன்னதும், அமைதியிழந்து ஐபிஎஸ் முகம் காட்ட ஆயத்தமானார் அண்ணாமலை.

அடுத்தது எடப்பாடி பழனிசாமி.

“பட்ஜெட்டாம் பட்ஜெட்டு. பக்கெட்டு தண்ணிக்குக்கூட வழியில்லாத பட்ஜெட்டு. ஏதோ ஆட்சிக்கு வந்தோமா, ஏரோப்ளேன்ல டெல்லிக்குப் போய் பிஎம்க்கு சால்வை போட்டோமா, பிரச்சினையில்லாம ஆட்சி நடத்துனோமான்னு இருக்கணும். அதைவிட்டு, தமிழக அமைச்சரா இருந்தவர்ங்கிற தராதரம் இல்லாம தரையில படுக்க வைக்கிறது... ரெய்டு நடத்தி ரோட்ல ரோஸ்மில்க் சப்ளை பண்ணவைக்கிறதுன்னு இந்த ஆட்சி அலங்கோலமா இருக்கு” என்று பிரஸ் மீட்டில் பேசிவிட்டு வந்த பின்னரும் பிரஷர் குறையாமல் இருந்தார் ஈபிஎஸ்.

“என்ன சார், ஒரே ஆவேசமா இருக்கீங்க... அதான் வெத்துவேட்டு பட்ஜெட்னு சொல்லி வெளிநடப்பு பண்ணிட்டீங்கள்ல. அப்புறம் எதுக்கு இவ்ளோ கோபம்?” என்று பாந்தமாகக் கேட்டு அவரை சாந்தப்படுத்த முயன்றான் பாச்சா.

“அதெப்படி சும்மா விட முடியும்? எங்களை மாதிரி மக்கள் செல்வாக்குல ஆட்சிக்கு வந்துச்சா திமுக? ஏதோ வாக்காளர்கள்லாம் முடிவுபண்ணி அவங்களுக்கு ஆதரவா ஓட்டு போட்டு ஆட்சிக்கு வர வச்சுட்டாங்க. மக்களோட வாழ்வாதாரப் பிரச்சினை வாக்காளர்களுக்குத் தெரியாம போச்சு. ஆனா, பாரு... தப்பித்தவறி ஆட்சிக்கு வந்ததும் இல்லாம தப்புத்தப்பா வேற ஆட்சி பண்றாங்க... அவங்களைத் தட்டிக்கேட்க ஆளில்லைன்னா மக்களுக்கு ஆபத்தாகிடும்” என்று எகிறினார் ஈபிஎஸ்.

“சார், ஒரே ஒரு டவுட்டு! மக்கள்... மக்கள்ங்கிறீங்களே? அது மாஜி அமைச்சர்களா சார்?!” என்று கேட்ட பாச்சாவை ஏககோபத்தில் பார்த்த ஈபிஎஸ், “ஆக்கபூர்வமா பணி செய்யாம காக்கி சட்டைகளை வச்சு அரட்டிட்டு இருக்கிறவங்களுக்கு எப்படித்தான் நாங்களும் கவுன்ட்டர் கொடுக்கிறது சொல்லு” என்றார்.

“அதெல்லாம் சரி, ஸ்டாலின் அரசு ஜெயக்குமாரை ஜெயிலுக்குள்ள போட்ட மாதிரி, நீங்க சின்னம்மாவை சிறையில தள்ளுற வேலையில பிசியா இருக்கீங்கன்னு செய்திகள்லாம் வருதே?” என்றான் பாச்சா.

“பின்னே இல்லையா... ஜெயக்குமாரைப் பாருப்பா. ஜெயில்ல லட்சக்கணக்கான கொசுக்களுக்கு மத்தியில ஜென் துறவி மாதிரி தங்கியிருந்துட்டு ஜென்டில்மேனா வெளில வந்துட்டார். சின்னம்மா ஜெயில்ல போட்டதுக்கப்புறமும் ஜாலியா ஷாப்பிங் பண்ணப்போனாரு... அந்தக் கேஸெல்லாம் வந்துபோகுமா இல்லையா... லேசுபாசா கேஸ் உறுதியானாலும் மறுபடியும் ஜெயில்தானே... அதுல எங்க பங்கு எங்கே இருக்கு?” என்று படபடவெனப் பொரிந்தார் பழனிசாமி.

“எல்லாம் சரி, ஏற்கெனவே ஏக உஷ்ணமா இருக்கீங்க. கோடைக்காலம் வேற ஆரம்பிக்கப்போகுது... கொடைக்கானல், கோடநாடுன்னு குளிர்ச்சியான பிரதேசத்துக்குப் போற ஐடியா இருக்குதுங்களா?” என்று பாச்சா கேட்டதும், இருப்புகொள்ளாத ஈபிஎஸ் இருக்கையிலிருந்து எழுந்தார்.

எண்டு கார்டு போட்டுவிட்டு பாச்சாவும் எஸ்கேப்பானான்!

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE