பொதுவாக, மானியம் என்பது சமூகத்தின் ஏற்றத்தாழ்வுகளிலிருந்து அடித்தட்டு மக்களைக் காக்கும் நோக்கில் செயல்படுத்தப்படும் திட்டங்களுக்கு வழங்கப்படும் நிதி. அதில் முக்கியமானது, முதன்மையானது உணவு மானியம்.
பொருளாதாரப் பாகுபாடுகளிலிருந்து அடித்தட்டு மக்களைக் காப்பதற்காகப் பின்னப்பட்டிருக்கும் வலிமையான பாதுகாப்பு வலையமைப்பு அது. வணிகச் சுரண்டல்களிலிருந்து விவசாயிகளையும், பட்டினிச் சாவிலிருந்து ஏழைகளையும் காப்பதே அதன் முதன்மை நோக்கம். ஆனால், அந்த வலையமைப்பு ஏழைகளைக் காக்கிறதா?
இந்த ஆண்டுக்கான மொத்த பட்ஜெட்டில், 5.2 சதவீதம் உணவு மானியத்துக்காக ஒதுக்கப்பட்டுள்ளது. வணிகப் பேராசைகளால் விவசாயப் பொருட்களுக்கு நிர்ணயிக்கப்படும் குறைந்த சந்தை விலையிலிருந்து விவசாயிகளை இந்த மானியம் பாதுகாக்கிறது; பொது விநியோக முறை (PDS) மூலம் தகுதியான மக்களுக்கு மலிவு விலையில் உணவு தானியங்களை அது வழங்குகிறது.
உணவு மானியத்தின் செலவுகளை மூன்று முக்கியப் பிரிவுகளுக்குள் அடக்கிவிட முடியும். முதலாவது, விவசாயிகளிடம் இருந்து விளைபொருட்களை விலைக்கு வாங்குவதற்குப் பயன்படுத்தப்படுகிறது. இந்தச் செலவு விவசாயத்தை லாபகரமானதாக ஆக்குகிறது; குறைந்த சந்தை விலை பாதிப்பிலிருந்தும் விவசாயிகளைக் காக்கிறது.
இரண்டாவது, அந்த விளைபொருட்களைக் குறைந்த விலையில் அல்லது சில சந்தர்ப்பங்களில் இலவசமாகவும், தகுதியான ஏழை மக்களுக்கு வழங்கப் பயன்படுத்தப்படுகிறது. மூன்றாவது, விளைபொருட்களின் கொள்முதல், பராமரிப்பு, போக்குவரத்து உள்ளிட்ட நிர்வாகச் செலவுகளுக்குப் பயன்படுத்தப்படுகிறது.
இந்திய உணவுக் கழகம் அரிசி, கோதுமை உள்ளிட்ட தானியங்களை விவசாயிகளிடமிருந்து குறைந்தபட்ச ஆதரவு விலையில் (MSP) நேரடியாகக் கொள்முதல் செய்கிறது. இந்த உணவு தானியங்களையே மத்திய அரசும், மாநில அரசும் பொது விநியோகத் திட்டத்தின் கீழ் வாங்குகின்றன. இந்திய உணவுக் கழகத்திடமிருந்து (FCI) 'மையப்படுத்தப்பட்ட கொள்முதல்' என்பதன் கீழ் மத்திய அரசும், 'பரவலாக்கப்பட்ட கொள்முதல்' என்பதன் கீழ் மாநில அரசுகளும் தானியங்களைக் கொள்முதல் செய்கின்றன.
பொதுவிநியோக முறையில் இந்தத் தானியங்கள் நியாயவிலைக் கடைகள் மூலம் மத்திய வெளியீட்டு விலையில் (சிஐபி-CIP) விநியோகிக்கப்படுகின்றன. மத்திய வெளியீட்டு விலை என்பது மத்திய அரசால் நிர்ணயிக்கப்படும் குறைந்த விலை. அது குறைந்தபட்ச ஆதரவு விலையைவிடக் குறைவாகவும் இருக்க வேண்டும்.
இந்தத் தானியங்கள், மதிய உணவுத் திட்டம், வளரிளம் பெண்களுக்கான திட்டம் உள்ளிட்ட சில நலத் திட்டங்களுக்கும், ஆயுதப்படைகளுக்கு உணவு தானியங்களை வழங்கவும், மந்தமான காலங்களில் சந்தையில் விற்கவும் பயன்படுத்தப்படுகிறது. சில மாநிலங்களில் உள்ள பள்ளிகளில், மதிய உணவை வழங்கும் தொண்டு நிறுவனங்களுக்கும் இந்தத் தானியங்கள் வழங்கப்படுகின்றன.
மத்திய வெளியீட்டு விலையானது, குறைந்தபட்ச ஆதார விலையைவிடக் குறைவாக இருப்பதால், அதாவது விளைபொருட்களைக் கொள்முதல் செய்யும் விலை விற்கும் விலையைவிடக் குறைவாக இருப்பதால், இந்திய உணவுக் கழகத்துக்கு ஏற்படும் நஷ்டம் உணவு மானியத்தின் மூலம் ஈடுசெய்யப்படுகிறது. இந்த நஷ்ட ஈடு ஒவ்வொரு ஆண்டும் இந்திய உணவுக் கழகத்துக்கு வழங்கப்படுகிறது.
1964-ம் ஆண்டின் இந்திய உணவுக் கழகச் சட்டத்தால் உருவாக்கப்பட்ட சட்டபூர்வ அமைப்பு இந்திய உணவுக் கழகம். உணவு தானியங்கள் உள்ளிட்ட பிற உணவுப் பொருட்களை வாங்குதல், சேமித்தல், ஓரிடத்திலிருந்து மற்றொரு இடத்துக்கு எடுத்துச் செல்லுதல், அதற்கான போக்குவரத்து, விநியோகம், விற்பனை உள்ளிட்டவை இந்திய உணவுக் கழகத்தின் (FCI) முக்கிய பணிகள். இது அரசிடம் இருந்து நேரடியாக நிதியைப் பெறும். கடந்த காலங்களில் அது தேசிய சிறுசேமிப்பு நிதியில் (NSSF) இருந்தும், வங்கிகளிலிருந்தும், பத்திரங்களை வழங்குவதன் மூலமும் நிதியைத் திரட்டி உள்ளது.
2013-ல், தேசிய உணவுப் பாதுகாப்புச் சட்டம் (NFSA) இயற்றப்படுவதற்கு முன்பு வரை, பொது விநியோக முறை என்பது ஒரு நிர்வாகத் திட்டம் மட்டுமே. ஆனால், தேசிய உணவுப் பாதுகாப்புச் சட்டம் பயனாளிகளுக்கு சட்டபூர்வ உரிமைகளை வழங்கியது. முக்கியமாக, மொத்த மக்கள்தொகையில் 25-30 சதவீதம் என்றிருந்த பயனாளிகளின் எண்ணிக்கையை அது 67 சதவீதமாக உயர்த்தியது. மேலும், 1997-ல் 17 மில்லியன் டன் என்கிற அளவிலிருந்த தானியங்களின் விநியோகத்தை அது 2020-ல் 90 மில்லியன் டன் என்கிற அளவில் அதிகரித்து இருக்கிறது.
நடப்பு ஆண்டில், உணவு மானியத்திற்காக மத்திய அரசு 2.06 லட்சம் கோடி ரூபாயை ஒதுக்கீடு செய்துள்ளது. ஆனால், நடப்பு நிதியாண்டில் உணவு மானியத்துக்கான செலவு 2.9 லட்சம் கோடி ரூபாய் என மதிப்பிடப்பட்டு இருக்கிறது. 2020-21-ம் நிதியாண்டில் உணவு மானியத்துக்கு என 5.41 லட்சம் கோடி ரூபாய் செலவிடப்பட்டது என்பதைக் கவனத்தில்கொள்ள வேண்டும். 2016-ல் தேசிய சிறுசேமிப்பு நிதியிலிருந்து இந்திய உணவுக் கழகம் வாங்கிய கடனை, அரசாங்கம் செலுத்தியதால்தான் குறைவான நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டது என விளக்கம் அளிக்கப்பட்டது. இருப்பினும், இந்திய உணவுக் கழகம் தனக்கென சொந்த வருமானம் எதுவுமின்றி முழுக்க, முழுக்க உணவு மானியத்தையே நம்பியுள்ளதால், இந்த விளக்கம் ஏற்புடையதாக இல்லை.
தேசிய உணவுப் பாதுகாப்புச் சட்டத்தின்படி, இந்திய உணவுக் கழகம், இரண்டு கோடி டன்னுக்கு மேற்பட்ட உணவு தானியங்களின் இடையக இருப்பைப் பராமரிக்க வேண்டும். தானியங்களின் உபரி இருப்புக்கான சேமிப்புக்கும் இந்திய உணவுக் கழகமே செலவழிக்க வேண்டும். தற்போது, இந்திய உணவுக் கழகத்தின் கையிருப்பில் / சேமிப்பில் சுமார் 5.5 கோடி டன் அரிசி - கோதுமையும், 4.9 கோடி டன் நெல்லும், 28 லட்சம் டன் தானியங்களும் உள்ளன. 2020-21-ல் சேமிப்புக்காக மட்டும் 9,102 கோடி ரூபாயை இந்திய உணவுக் கழகம் செலவிட்டு உள்ளது.
தேசிய உணவுப் பாதுகாப்புச் சட்டத்தின்படி, மொத்த மக்கள் தொகையில் 67 சதவீதத்தினர் பொது விநியோக முறையின் மூலம் பாதுகாக்கப்பட வேண்டும். ஆனால், அரசாங்கத்தின் தரவுகளின்படி 2020-ல் 59 சதவீத மக்களே பாதுகாக்கப்பட்டு இருக்கிறார்கள். 2011 மக்கள்தொகை கணக்கெடுப்பைப் பயன்படுத்தி, வழங்கப்பட வேண்டிய ரேஷன் அட்டைகளின் எண்ணிக்கை நிர்ணயம் செய்யப்பட்டது. 2021-ன் மக்கள் தொகை மதிப்பீட்டிற்கு ஏற்ப ரேஷன் அட்டைகளின் எண்ணிக்கையை அதிகரிக்க அரசாங்கம் ஒப்புக்கொள்ளவில்லை. விளைவு, 10 கோடிக்கும் மேற்பட்ட மக்கள், பொதுவிநியோகத் திட்டத்திலிருந்து விலக்கப்பட்டுள்ளனர்.
இந்தியா தன்னுடைய மொத்த நிதிநிலையில் சுமார் 5 சதவீதத்தை உணவு மானியத்துக்காகச் செலவிடும் சூழலிலும் உணவு மானிய திட்டத்தின் நோக்கங்கள் இன்றும் முழுமையாக நிறைவேறாமல் உள்ளன. கடந்த ஓராண்டில் மட்டும் ஜார்க்கண்ட் மாநிலத்தில் பழங்குடியினத்தைச் சேர்ந்த 17 பேர் பட்டினியால் இறந்திருக்கின்றனர்.
ஒவ்வொரு ஆண்டும் பத்தாயிரத்துக்கும் மேற்பட்ட விவசாயிகளும், விவசாயத் தொழிலாளிகளும் கடன் தொல்லை காரணமாகத் தற்கொலை செய்துகொள்ளும் போக்கு இன்றும் தொடர்கிறது. உணவு மானியத் திட்டத்தின் அமலாக்கக் குறைபாடுகளும், செயல்பாட்டுத் திறன் போதாமைகளும் அந்த மானியத்தின் நோக்கங்களை நீர்த்துப்போகச் செய்கின்றன. இந்தக் குறைகளைக் களைந்து, அதன் பலன்களை முழுவதுமாக மக்களிடம் எடுத்துச் செல்லும் கடமை அரசுக்கு இருக்கிறது. அரசு அதை ஒருபோதும் மறந்துவிடக் கூடாது!