சிறகை விரி உலகை அறி- 42: ரத்தக் கறை படிந்த மனம்!

By சூ.ம.ஜெயசீலன்

தலைச் சுமை கூடிவிட்டால் விரைந்து நடக்காது கால்கள். அப்படித்தான், மனச் சுமை அதிகமானாலும் நடை வேகம் தடைபடும். உலகப் போர்களில் யூதர்களின் ரத்தம் வழிந்த தெருக்களில் கால்களை நகர்த்தினேன். பூத்து நிற்கும் மரங்களுக்கு உரமாகிப்போனவர்களது நினைவுகளின் மீதுலாவினேன். துயரக் குரல்கள் ஒலித்துச் சிதறிய திசையெங்கும் விழி பரப்பி வெதும்பினேன்.

சிரித்துக்கொண்டிருந்த ஒரு குழந்தையைப் பார்த்தேன். அட, கவலைகளில் மனதூன்றிவிட்டால் நமக்கான வசந்தங்களை அனுபவிப்பது யார்? என்று கேள்வி எழுப்பியது அச்சிரிப்பு. பதிலுக்கு, குழந்தையின் புன்னகையை என் முகத்தில் ஏந்தி முந்திச் சென்றேன்.

புனித ஸ்டீபன் ஆலயம் முகப்பு...

புனித ஸ்டீபன் ஆலயம்

ஹங்கேரியின் மிக முக்கியமான அரசர்களுள் ஒருவர் ஸ்டீபன். தன் தந்தையைத் தொடர்ந்து கி.பி.999-ல் அரியணை ஏறினாலும், உறவினர்களின் இடையூறுகளை எதிர்கொண்டார். அண்டை நாடுகளின் உதவியுடன் உறவினர்களை வென்றார். கத்தோலிக்க கிறிஸ்தவ மதத்தின் திருத்தந்தை முதலாம் சில்வெஸ்டர் கொடுத்த கிரீடத்தை அணிந்து அரசராக முடிசூடினார். தன் போர்த்திறனால் கார்பாத்தியன் படுகையை ஒன்றிணைத்தார். கிறிஸ்தவ கோயில்கள் பல கட்டினார். மறைமாவட்டங்களை உருவாக்கினார். இவர் காலத்தில், ஹங்கேரியில் கிறிஸ்தவம் மிக வேகமாக வளர்ந்தது. பின்னாளில், கிறிஸ்தவ மதத்தில் புனிதராக உயர்த்தப்பட்டார் ஸ்டீபன்.

புனித ஸ்டீபன் ஆலயத்தின் உள்ளே...

புடாபெஸ்டில் புனித ஸ்டீபனுக்கான ஆலயத்தை, முதலில் வடிவமைத்தவர் ஜோசப் ஹில்ட். 1851-ல் வேலை தொடங்கியது. ஆலய பீடத்துக்குப் பின்புறம் வட்டவடிவ அறையை முதலில் கட்டி, அங்கே வழிபாடு செய்தார்கள். 1867-ல் ஜோசப் இறந்தார். பிறகு, மிக்லோஸ் பொறுப்பேற்றார். குவிமாடம் வரை நிறைவடைந்த நிலையில், கோயிலின் சில பகுதிகள் இடிந்து விழுந்தன. மீண்டும் புதிய வரைபடம் தயாரித்து, முகப்பு, கோபுரங்கள், குவி மாடம், உட்பகுதி அனைத்தும் கட்டி முடித்த நிலையில், 1891-ல் மிக்லோஸ் இறந்தார். ஜோசப் கௌசர் பொறுப்பேற்று, இந்த பேராலயத்தை மிகுந்த கலைநயத்துடன் அழகுபடுத்தி நிறைவு செய்தார். 1905-ல் திறப்புவிழா நடந்தது.

குவிமாடத்தின் உட்புறம்

நுழைவுச் சீட்டு வாங்கி, வலது கோபுரத்தில் ஏறி மேலே சென்றேன். கதவு திறந்து வெளியில் நின்று நகரத்தின் அழகையும், மற்றொரு கோபுரத்தின் வனப்பையும் ரசித்தேன். மேலிருந்து கீழாக, குவிமாடத்தைப் பார்த்து அதிசயித்தேன். கோயிலுக்குள் சென்று, குவிமாடத்தின் உள்ளே உள்ள ஓவியங்களையும், சுவர் முழுவதும் தகதகத்த கலைஞர்களின் திறமையையும் கண்ணோடு அள்ளித் திரும்பினேன்.

தனுபே ஆற்றங்கரை காலணிகள்...

தனுபே ஆற்றங்கரை காலணிகள்

அடுத்ததாக, தனுபே (Danube) ஆற்றங்கரைக்குச் சென்றேன். தன்னுள் வீழ்த்தப்பட்ட ஆயிரமாயிரம் யூதர்கள் எழுப்பிய ஒலியில் செவிப்பறை அறுந்தவன் போல கனத்த மௌனத்துடன் ஓடிக்கொண்டிருந்தது ஆறு. இரண்டாம் உலகப் போரின்போது, புடாபெஸ்ட் கெட்டோவில் இருந்த ஆயிரக்கணக்கான யூதர்களை ஆரோ கிராஸ் கட்சியினர் இந்த ஆற்றங்கரைக்கு கொண்டு வந்தனர். அவர்களின் கட்டளைக்குப் பணிந்து, யூதர்கள் தங்கள் காலணிகளை கழற்றினார்கள். போர்க்காலத்தில் காலணிகளின் தேவை அதிகம் இருந்ததால் காலணிகளை கட்சியினர் சேகரித்தார்கள். தங்களைப் பார்த்து நின்ற யூதர்களை அதிகாரிகள் துப்பாக்கியால் சுட்டார்கள். அழுகுரல் காற்றில் அலையுமுன்பே யூதர்கள் ஆற்றில் விழுந்தார்கள். மடிந்தார்கள்.

இக்கொடூரத்தின் நினைவாக, 60 ஜோடி செருப்புகளை இரும்பில் செய்து 2005-ல் தனுபே ஆற்றங்கரையில் வைத்துள்ளார்கள். 1940-களில் மக்கள் பயன்படுத்தியதுபோன்ற செருப்புகள் அவை. தொழிலாளியின் காலணி, தொழிலதிபரின் தோல் செருப்பு, பெண்களின் ஹீல்ஸ் செருப்பு, குழந்தைகளின் சிறிய செருப்பு என பலவகைகள் அங்கே உள்ளன. சாதாரணமாக கழற்றி போட்டது போன்று இருக்கிறது. இது, வயது, பாலினம், வேலை போன்ற பாகுபாடு ஏதுமின்றி யூதர்கள் கொல்லப்பட்டதைச் சொல்கிறது. அங்கு மக்கள் சிலர் மலர் வைத்து அஞ்சலி செலுத்துவதைப் பார்த்தேன். இதே ஆற்றங்கரையில், ஆன்ராஸ் குன் (Andras Kun) எனும் கத்தோலிக்கப் பாதிரியாரும் மக்களைச் சுட்டுக் கொலை செய்திருக்கிறார்.

துறவற ஆடையுடன் பாதிரியார் ஆன்ராஸ் குன்

இனவெறி பிடித்த பாதிரியார்

1911 நவம்பர் 8-ல் பிறந்தவர் ஆன்ராஸ் குன். பிரான்சிஸ்கன் சபையில் பாதிரியாராக இருந்தவர், சபையிலிருந்து விலகி, 1944-ல் ஆரோ கிராஸ் அமைப்பில் சேர்ந்து இனவெறி கொண்ட பாசிச கூட்டத்தின் கட்டளைத் தளபதியாக உயர்ந்தார். ‘இந்நிலம் எங்களுக்கானது, யூதர்களுக்கானது அல்ல’ என்று வெறிகொண்டு துறவற அங்கியோடு அலைந்தார். இவரது இடுப்பிலுள்ள தோலுறையில் எப்போதும் கைத்துப்பாக்கி இருந்தது. நீண்ட செபமாலை இடுப்பில் தொங்கியது. சுடுவதற்கு முன்பாக, “இயேசுவின் திருப்பெயரால் – சுடுங்கள்” என்று முழங்கினார்.

செஞ்சிலுவைச் சங்கத்தின் பாதுகாப்பில் இருந்த செவ்ரா கடிஸா (Chevra Kadisha) மருத்துவமனையினுள் தன் ஆதரவாளர்களுடன் ஜனவரி 12, 1945 அன்று ஆன்ராஸ் நுழைந்தார். அங்கே ஏறக்குறைய 100 நோயாளிகள், செவிலியர்கள், மருத்துவர்களைக் கொன்றார். தங்கள் கட்சியின் தலைமையிடத்துக்குப் பலரை இழுத்துச் சென்று கொடுமைப்படுத்திக் கொன்றார். டேனியல் பிரோ மருத்துவமனையின் 160 நோயாளிகளை ஜனவரி 14-ல் கொன்றார். தப்பிக்க முயன்ற 9 ராபி மற்றும் அவரின் குடும்பத்தினர் தோட்டத்தில் சுடப்பட்டனர். மருந்துகளையும், படுக்கைகள் மற்றும் பொருட்களையும் அள்ளிச் சென்றார்கள். ஜனவரி 17-ல் திரும்பி வந்து, பிணங்கள் நிறைந்த மருத்துவமனை கட்டிடத்துக்குத் தீ வைத்தனர்.

முதியோர் இல்லத்தில் இருந்தவர்கள், தங்கள் உயிரைக் காப்பாற்றிக்கொள்வதற்காக, அருகிலிருந்த ராணுவ மருத்துவமனைக்குச் சென்றார்கள். முதியவர்கள் பலரால் செல்ல இயலவில்லை. 19, ஜனவரி 1945 மாலையில் ஆன்டாஸ் தலைமையிலான படையினர் முதியோர் இல்லத்துக்குள் புகுந்தார்கள். மீதம் இருந்த பணியாளரையும், வயதான 61 பேர்களையும் சாலையின் மூலையில் நிறுத்தினார்கள். நடக்க முடியாதவர்களை சக்கர நாற்காலியில் கொண்டுவந்தார்கள். அனைவரையும் சுட்டுக்கொன்று தீயிட்டு எரித்தார்கள்.

காலம் மாறியது. ஆன்டாஸ் கைது செய்யப்பட்டார். 500 பேரைக் கொன்றதாக குற்றம் சாட்டப்பட்டார். ஹங்கேரியன் மக்கள் தீர்ப்பாயம், ஆன்டாசுக்கு மரண தண்டனை விதித்தது. செப்டபம்பர் 19, 1945 அன்று, 33 வயதில் தூக்கிலிடப்பட்டார்.

சீசெய்மி பாலமும், பெஸ்ட் நகரமும்...

சீசெய்மி பாலம்

தனுபே ஆற்றின் மீதுள்ள மிகப் பழமையான பாலம் சீசெய்மி (Szechenyi). புடா மற்றும் பெஸ்ட் எனும் இரண்டு நகரங்களையும் இணைக்கின்ற முதல் நிரந்தர கல் பாலம் இது. 1849, நவம்பர் 20-ல் திறக்கப்பட்டது. இரண்டாம் உலகப்போரில் தோற்றுத் திரும்பிய ஜெர்மன் படையினர், ஹங்கேரியில் இருந்த அனைத்து பாலங்களையும் தகர்த்தனர். சீசெய்மி பாலமும் தப்பவில்லை. தூண்களைத் தவிர ஏறக்குறைய அனைத்தும் முற்றிலும் அழிந்தது.

சாலையை பெரிதுபடுத்தி, மக்கள் நடப்பதற்கும் வழி வகுத்து 1947-ல் ஹங்கேரி மறுபடியும் அரசு அந்தப் பாலத்தைக் கட்டத் தொடங்கியது. 375 மீட்டர் நீளம், 16 மீட்டர் அகலம். தூண்களுக்கு இடைப்பட்ட தூரம் 202 மீட்டர். பாலத்தின் இரண்டு முகப்பிலும் சிங்க கற்சிலைகள் உள்ளன. முதல் திறப்புவிழா நடந்த நூற்றாண்டு நாளில், 1949 நவம்பர் 20-ல் மறுபடியும் பாலம் திறக்கப்பட்டது.

பணி மாறும் காவலர்கள்...

மலைக்கோட்டை

சமதளப் பகுதியான பெஸ்ட் நகரில் இதுவரை இருந்த நான், பாலத்தில் நடந்து மறுபுறம் மலைப்பகுதியான புடா நகருக்குச் சென்றேன். கம்பி ரயிலில் (Funicular Railway) ஏறி குன்றின் மீதிருந்த மலைக்கோட்டையை அடைந்தேன். நடந்து செல்ல படிகளும் உண்டு. யுனெஸ்கோ புராதன சின்னமான மிகப்பெரிய அரண்மனை அங்கே இருக்கிறது. ஹங்கேரியின் பல அரசர்கள் வாழ்ந்த அரண்மனை இது. போரில் பலமுறை பாதிக்கப்பட்டாலும், ஒவ்வொரு முறையும் புனரமைக்கப்பட்டு கம்பீரமாக நிற்கிறது. இதன் ஒருபகுதியில், ஹெங்கேரி வரலாற்று அருங்காட்சியகம் மற்றும் ஹங்கேரி தேசிய கலைக் காட்சிக் கூடம் உள்ளது. காட்சிக் கூடத்தில் ஹங்கேரியன் ஓவியங்களும், சிற்பங்களும் உள்ளன. நான் சென்றபோது, மாலை நேரமாகிவிட்டதால் உள்ளே செல்லாமல் வளாகத்தில் நடந்தேன். அதே வளாகத்தில், சந்தோர் அரண்மனை இருக்கிறது. 1944 வரை பிரதம அமைச்சரின் இல்லமாக இருந்த இந்த அரண்மனை, தற்போது குடியரசு தலைவரின் இல்லமாக உள்ளது. நான் சென்ற நேரம் காவலர்களின் அணிவகுப்பும், பொறுப்பு மாறுதலும் நடந்தது. பார்த்து ரசித்தேன்.

கம்பி ரயிலில் கீழிறங்கி மற்றொரு குன்றில் ஏறி, புனித மத்தியாஸ் ஆலயம் சென்றேன். “பார்வையாளர்களுக்கான நேரம் முடிந்துவிட்டது” என்றார் காவலர். என் அடையாள அட்டையைப் பார்த்து, என்னை அனுமதித்தார். ஆலயத்தை பக்தனாக அல்லாது, பயணியாகப் பார்த்தேன். ஆலய வளாகத்தில் நின்று குளிர்ந்த காற்றில் நகரின் பரந்த அழகை விரிந்த விழிக்குள் தீட்டினேன்.

மீண்டும் நடந்து, தங்குமிடம் சென்று, பையை எடுத்துக் கொண்டு தொடர்வண்டி நிலையம் சென்றேன். போலந்து செல்லும் தொடர்வண்டியில் ஏறி அமர்ந்தேன். இன்று எவ்வளவு தூரம் நடந்திருக்கிறோம் என அறிய கடிகாரத்தைப் பார்த்தேன். அதில், 22 கி.மீ என காட்டியது.

(பாதை நீளும்)

பெட்டி செய்தி:

துறவிகளின் முரண்!

ஹங்கேரி வரலாற்றாசிரியர் கிறிஸ்டியன் அங்வாரி (Krisztian Ungvary) புடாபெஸ்ட் முற்றுகை (Siege of Budapest) எனும் புத்தகத்தை எழுதியுள்ளார். அதில், ஆன்டாசின் கொடுமை குறித்து விரிவாகச் சொல்கிறார். ‘பாதிரியாராக இருந்த ஆன்டாஸ் யூதர்களைக் கொன்றழித்தார். அதேவேளையில், திருத்தந்தையின் பிரதிநிதியாக இருந்த (Nuncio) ஆஞ்சலோ ரொட்டா (Angelo Rotta) ஆயிரக்கணக்கான யூதர்களைக் காப்பாற்றினார்’ என குறிப்பிட்டு, துறவிகளுக்கிடையேயான முரணை சுட்டிக் காட்டியுள்ளார். துறவறம் என்பதும் சுய ஒழுக்கம் சார்ந்ததுதானே!

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE