இசை வலம்: காதலை வாழ்த்தும் நட்பு!

By ரவிகுமார் சிவி

முக்கோணக் காதலை அடிப்படையாகக் கொண்டு உருவாக்கப்படும் திரைப்படங்கள் அனைத்து மொழிகளிலும் ஆராதிக்கப்படுபவை. திரைப்படங்களுக்கு மட்டுமல்ல, இன்றைய இளைஞர்களின் இசை ஆல்பங்களுக்கும் தேவையான அடர்த்தியை இந்த முக்கோணக் காதல் கொடுத்துக்கொண்டிருக்கிறது.

தனக்கு எந்த உடை பிடிக்கும், என்ன உணவு பிடிக்கும் என்பதில் தொடங்கி எல்லாமும் தன்னுடன் படிக்கும் பள்ளித் தோழனுக்குத் தெரியும் என்பதில் அலாதியான மகிழ்ச்சி ஒரு பெண்ணுக்கு இருக்கும். “இவன்தான் என்னுடைய சி.ஹெச்.எஃப் – சைல்ட்ஹூட் ஃபிரெண்ட்” என்று மற்றவர்களிடம் அறிமுகப்படுத்துவதில் லேசான கர்வமும் அந்தப் பெண்ணிடம் வெளிப்படும். உயர் கல்வி படிப்பதற்காகச் சென்றிருப்பான் அவளுடைய நண்பன். அந்தப் பிரிவு அவளுக்குள் ஒரு மாயம் நிகழ்த்தும். பொத்திப் பொத்தி அவள் வளர்த்த அவன் மீதான அன்பு, பிரம்மாண்டமான காதலாக அவளுக்குள் உருவெடுத்திருக்கும்.

இந்த காணொலிப் பாடலின் பெண்ணும், தன் மனத்தில் காதலனாக மாறிவிட்ட நண்பனைப் பார்ப்பதற்கு செல்கிறாள். அதுவரையிலான அவர்களின் முக்கியமான தருணங்களை ஓர் ஆல்பமாகத் தொகுத்து தன்னுடன் எடுத்துச் செல்கிறாள். தன் பால்ய நண்பனிடம் காதலைச் சொல்வதற்காக சென்றவளிடம், அவன் தன்னுடைய காதலியை அறிமுகப்படுத்தி வைக்கிறான். இதுதான் பாடலின் பின்னணி. அது கானமாக, காட்சியாக மிகச் சிறப்பான வடிவத்தைப் பெற்றிருக்கிறது.

மகிழ்ச்சி, கவலை, உள்ளத்தைப் பிழியும் சோகம் எல்லாவற்றையும் தன் கண்களில் தேக்கிச் சிரிக்கும் அந்த இளம் பெண்ணின் நடிப்பு நம்மை அசரவைக்கிறது. அவளுடைய மனத்தின் பாடலாக, திரை மொழியில் ‘மான்டேஜில்’ ஒலிக்கிறது,

‘இந்நேரம் இந்த நேரம் பின்னே நகரக் கூடாதா

அறியாத பூகம்பமாக என்னை ஒரு வார்த்தை இரண்டாக்குதே

எங்கிருந்தோ நீ வந்தாயே உறவே

கண்ணிமை போல் சேர்வாயோ பிரிவே…’ எனும் தமிழ் மணியின் பாடல் வரிகளும், விஜய் பல்கனின் உருவாக்கிய இதமான இசையும், ஆதித்யாவின் குரலும் அத்தனை இனிமை. ‘என்னடா இது ஒரு பெண்ணின் மனசாட்சிக்கான மான்டேஜ் பாடலை ஒரு ஆண் பாடகரைப் பாடவைத்தா எடுப்பார்கள்?' என்றெல்லாம் கேள்வியே எழவில்லை. வலியை எந்தக் குரலில் கடத்தினாலும் இதயம் கேட்கும்தானே!

மனதின் ரகசியக் காதலை ரசனையுடன் சொல்லும் பாடலைக் கேட்க:

https://www.youtube.com/watch?v=8xK4vyKzrHs

நக்ஸா, சாண்டி: நடனக் கூட்டணி

வெற்றி பெறுவதற்கும் பிரபலமாவதற்கும் எளிமையான வழி என்ன தெரியுமா? ஏற்கெனவே வெற்றி பெற்றவர்களுடனும், பிரபலமானவர்களுடனும் சேர்ந்து நீங்கள் பயணிக்க வேண்டும். நக்ஸா சரணும் இந்த சூத்திரத்தைத்தான் பின்பற்றி இருக்கிறார். இதுவரை தன்னுடைய யூடியூப் சேனலில் பிரபலமான பாடல்களின் கவர் வெர்ஷன்களைப் பாடி வெளியிட்டு வந்தவர், சுயாதீனமான இசை ஆல்பத்தை முதன்முதலாக பாடி வெளியிட்டுள்ளார். ஏ.ஆர்.ரஹ்மானின் இசைப் பள்ளியில் முறையாக மேற்கத்திய இசை படித்தவர் இவர்.

ஆனால் அவர் படித்த எதையும் தன்னுடைய முதல் பாட்டில் வெளிப்படுத்தவே கூடாது என்னும் முன் ஜாக்கிரதையோடு இந்தப் பாடலைப் பாடியும் காட்சியில் தோன்றி, நடனத்தில் புகழ் பெற்ற சாண்டி மாஸ்டரோடு நடனம் ஆடியும் இந்தக் காணொலியை வெளியிட்டுள்ளார். அர்த்தம் பொதிந்த ஆங்கில வார்த்தைகளில் லியோ என்பவர் எழுதியிருக்கும் தமிழ்ப் பாடல் இது. பாடலைக் கேட்பதற்கு முன், செய்தியின் தொடக்கத்தில் இருக்கும் வரிகளை மீண்டும் ஒரு முறை படித்துக்கொள்ளுங்கள். உங்களுக்கும் பயன்படும்.

நல்லிசை - நடனப் பாடலுக்கு: https://www.youtube.com/watch?v=NKZxCk_7GNo

வேரைப் போற்றும் விழுதுகள்!

கருணை, தியாகம், பாசம், அம்மா! அன்னையின் பெருமையை, உயர்வைச் சொல்லும் பாடல்கள் எத்தனை வந்தாலும் போதாது. அன்னையைப் பாடுவதற்கு யாருக்குமே அலுக்காதே… அந்த வரிசையில் அம்மாவின் மீதான அன்பை ஒரு மாறுபட்ட கோணத்தில் வெளிப்படுத்தும் பாடல் இது.

டெல்லிக்கு ராஜாவானாலும் அம்மாவுக்குப் பிள்ளை எனும் ஒரு பழமொழி உண்டு. அதே போல், மகள் தாயாகிவிட்டாலும் அவளுடைய பிள்ளைகள் பெரியவர்களாக வளர்ந்துவிட்டாலும், ஒரு தாய் தன்னுடைய மகளின் பிறந்தநாளுக்கு வாழ்த்துகளைச் சொல்ல மறக்கவே மாட்டாள். ஆனால் பிள்ளைகள்?

குழந்தைகளாக இருக்கும்போது பெற்றோர்களின் பிறந்தநாளை, திருமண நாளைக் கொண்டாடித் தீர்ப்பவர்கள், படிப்பு முடிந்து பெரியவர்களாகி, வேலைக்குச் சென்று, அவர்களுக்கென்று நட்பு, உறவுகள் பூத்து, ஓர் உலகத்தில் நுழைந்த பின்னர், பழைய பாசத்தை, பரிவை அவர்களிடம் ஒரு தாய் எதிர்பார்க்க முடியுமா? அப்படி எதிர்பார்க்கும் அம்மாவை ஏமாற்றாத பிள்ளைகள் அவளுக்கு வாய்த்திருக்கிறார்களா? காலம் காலமாக அன்பைக் கொடுப்பவளாகத்தான் தாய் இருக்க வேண்டுமா? பிள்ளைகளிடமிருந்து அன்பை எதிர்பார்ப்பவளாக தாய் இருக்கக் கூடாதா? இந்தக் கேள்விகளுக்கு பதிலாக இந்தக் காணொலிப் பாடல் அமைகிறது.

இந்து லோகநாதனின் தாய்மை பொங்கும் வார்த்தைகளை, சிந்தாமல் சிதறாமல் தன்னுடைய ஸ்வரத் தூளியில் கோத்து தாலாட்டி அற்புதமாக பாடியும் இருக்கிறார் இசையமைப்பாளர் ஜிப்ரான்.

`உன்னவிட யாரும் நல்ல தோழி எனக்கு இல்ல

உன்னவிட்டா வேற நல்ல சாமி கண்டதில்ல…’

என்று பாடலின் பல்லவியே நமக்கு அம்மாவின் வாஞ்சையை அள்ளித் தருகிறது. இந்தக் காணொலிப் பாடலின் இறுதியில் ஓர் இனிமையான திருப்பமும் இருக்கிறது!

அன்னையின் அருமை சொல்லும் பாடல்: https://www.youtube.com/watch?v=3Cgj9wG6lIU

மீண்டுவரும் காதல்!

திரைப்படங்களுக்கு பிஸியாக இசையமைத்துக்கொண்டிருக்கும்போதே, தங்களுக்குப் பிடித்தமான இசை ஆல்பங்கள், ஆவணப்படங்கள், குறும்படங்கள் என இசையை எந்த வடிவத்திலும் அள்ளி வழங்குவதற்கு இந்தத் தலைமுறை இசையமைப்பாளர்கள் தயங்குவதே இல்லை. அந்தப் பட்டியலில் இசையமைப்பாளர் சி.சத்யாவும் முக்கியமானவர். ஸ்பேஸ் புரொடக்சன் எனும் அமைப்பு தயாரித்திருக்கும் இந்தக் காணொலிப் பாடலை, இதில் தோன்றும் இளம் நட்சத்திரமான அம்மு அபிராமியின் பிறந்த நாளில் வெளியிட்டிருக்கின்றனர். அதுவும் துல்லியமாக மார்ச் 11 காலை 11 மணி 11 நிமிடம் 11 நொடியில் யூடியூப்பில் வெளியிட்டு இந்த இளம் நாயகியைப் பெருமைப்படுத்தியிருக்கின்றனர்.

ஊடலும், கூடலும் காதல் நாணயத்தின் இருபக்கங்கள்தானே?! ஏதோ ஓர் உரசல் காதலர்களுக்குள், ‘பிரேக்-அப்' எனும் அவஸ்தையான முடிவை எடுப்பதற்குள் சுதாரித்துக்கொள்ளும் காதலன், தன் தவறை உணர்ந்து தன்னிலை விளக்கமாகப் பாடும் பாடல் இது. காதலர்கள் தங்களுக்குள் ஏற்பட்ட கருத்து மோதலையும் அதிலிருந்து சமாதானமான தருணங்களையும் ‘போகாதே' கேட்கும்போது, அசைபோட வைக்கும்.

‘போகாதே என் காதல் பூவே

நீதானே என்னோட வானே

தூறலாய் நினைவையே விழிகளில் கொடுத்தாய் மானே

தேடலாய் பொழுதையே வலிகளில் கொடுத்தாய் மீதே...’

- லவரதனின் இந்தப் பாடல் வரிகள் கவனிக்க வைக்கின்றன. பாடலின் ஒவ்வொரு கண்ணியும் முடியும்போது அதுவரை ஒலித்துக்கொண்டிருந்த இசையை டிஸ்ஸால்வ் செய்யும் இசையமைப்பாளர் சத்யாவின் முயற்சி, புதிய அனுபவத்தைத் தருகிறது. பாடியிருக்கும் ஷிவாய் வியாஸின் குரலே அப்படித்தானா? அல்லது, பாடலின் உருக்கத்தை வெளிப்படுத்த, துக்கம் தொண்டையை அடைக்க பாடியிருக்கிறாரா என்பது அவரைக் கேட்டால்தான் தெரியும்!

காதல் சமாதான கானம்: https://www.youtube.com/watch?v=SGAKmR0zQaU

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE