நிழற்சாலை

By காமதேனு

வாலாட்டும் வினா

பிள்ளையில்லையென்பதால்

பிரிய முடிவெடுத்தார்கள்


ஒரே கேள்விதான் இருவரின்

கால்களுக்கிடையேயும் வாலாட்டியவாறிருக்கிறது


'வளர்த்த குட்டி நாயை

யார் எடுத்துச் செல்வது?'


- ரகுநாத் வ

சேவலை எழுப்புபவள்!


அதிகாலையில்

அம்மா பாத்திரம் விளக்கும்

சத்தம் கேட்டபின்னர்

கூவத்தொடங்கும்

சேவல்களுக்கெல்லாம்

அம்மாதான் அலாரம்!


- நேசன் மகதி

உயிர்பெறும் வீடு

அணைக்க மறந்து

நீங்கள் வெளியேறியதும்

நிம்மதிப் பெருமூச்சுடன்

தனியாக அமர்ந்து

டிவி பார்க்கத்தொடங்குகிறது வீடு

அதன் ஆசுவாசம் தணிவதற்குள்

உங்களுக்கு ஞாபகம்

திரும்பிவிடுகிறது.

- மகேஷ் சிபி

வலி

கடிக்கும்போது அமைதியாக இருந்துவிட்டு

கடித்த எறும்பை அம்மா

அடிக்கும்போது அழுகின்றன...

குழந்தைகள்!

- மு.முபாரக்

பாடம்

கணக்கே வராத ஒருவனுக்கு

நட்சத்திரங்களை எண்ணத் தெரிந்திருக்கிறது

செயல்முறை ஏட்டில் படம் வரையாதவள்

வாசலை அடைத்துத் தேர்க்கோலம் இடுகிறாள்.

மனப்பாடப் பாடல்கள் படிக்காத

ஒருத்தி திருப்பாவை பாடுகையில்

ஆண்டாள் ஆகிறாள்.

நிலவரைபடம் அறியாத அவனுக்கு

ஊர்த் தெருக்கள் அத்தனையும்

அத்துப்படி.

வாழ்க்கைப் பாடங்களில் தேறிய இவர்களை

கடைசி வரிசையில்

அமரச் செய்கிறது கல்விக்கூடம்

- கி.சரஸ்வதி

அன்னை ஞாபகம்

உடல் மொத்தத்துக்கும் கம்பளி போர்த்தி

முகம் முழுதும் மறைத்துக்கொண்டு

உறையும் குளிர் பனியில்

எல்லைக்காவல் பணியில்

எங்கிருந்தோ கிளம்புகிற தேநீர் வாசம்

அம்மாவின் கைமணத்தை

நினைவுபடுத்துகிறது

அம்மாவின் அரவணைப்பு இல்லாத உடல்

நடுங்கத் தொடங்குகிறது

நள்ளிரவில் கண்விழித்த குழந்தையைப் போல.

- ஆனந்த குமார்

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE