சிறகை விரி உலகை அறி-41: கண்ணீர்க் கதை கேட்கத் திருவுளமோ!

By சூ.ம.ஜெயசீலன்

ஊர்விட்டு ஊர் சுற்றும் மேகங்கள், வனம் கடந்து நிலமேவும் நதிகள், வானிலிருந்து தூளியாடும் துளிகள்! ரசிப்போரிடம் தங்கள் கதைகளைச் சொல்லிச் செல்கின்றன.

யூதர்களும், நான்காயிரம் ஆண்டுகளுக்கு முன்பு தங்கள் மூதாதையர்கள் எகிப்தில் அடிமைகளாக இருந்ததையும், அற்புதமாக கடவுள் அவர்களை விடுவித்ததையும் பாஸ்கா விழாவின்போது தங்கள் பிள்ளைகளுக்குச் சொல்லுகிறார்கள். இவ்வரலாறு சொல்லப்பட வேண்டுமென்பதை புனித நூலில் (Torah) பதிவு செய்து வைத்துள்ளார்கள். அதேபோல, இரண்டாம் உலகப் போரில் ஹங்கேரியில் தங்கள் இனம் அழிக்கப்பட்டதை, ‘ஹங்கேரியன் யூத அருங்காட்சியகம் மற்றும் ஆவணக் காப்பகம்’ வழியாக உலகுக்குச் சொல்லுகிறார்கள்.

யூத அருங்காட்சியகம்

பிரச்சினையின் வேர்

யூத அருங்காட்சியகத்தில் நுழைந்தவுடனேயே, ‘அழகியல் நிறைந்ததல்ல இந்த அருங்காட்சியகம்’ எனும் குறிப்பை வாசித்தேன். ஹங்கேரி யூதர்கள் கடின உழைப்பாளிகள். நாட்டின் கலாச்சார, பொருளாதார, தொழில்துறை மற்றும் விவசாய வளர்ச்சிக்கு அதிகம் பங்களிப்பு நல்கியவர்கள். ஹங்கேரியன் மொழியை பேசி, அதன் கலாச்சாரத்துடன் ஒன்றித்திருந்தவர்கள். ஹங்கேரி அரசு யூத மதத்தை ஏற்றுக்கொண்டிருந்தது. ஆனால், முதல் உலகப் போரில் ஹங்கேரி தோற்றபிறகு (1918) எல்லாம் தலைகீழானது. 71 சதவீத இடத்தை இழந்த ஹங்கேரியில் யூதர்கள் சிறுபான்மையினர் ஆனார்கள். சட்டத்தின் முன் சமத்துவம், பாதுகாப்பு, வேலை வாய்ப்பு மற்றும் வாழ்வதன் அர்த்தம் அனைத்தும் மெல்ல மெல்ல பறிக்கப்பட்டது. இனப்படுகொலையில், ஒருவராவது கொல்லப்படாத யூத குடும்பமே ஹங்கேரியில் இல்லை எனும் நிலை ஏற்பட்டது.

அருங்காட்சியகச் சுவர்களில் போர்க்காட்சிகள்...

1944, மார்ச் 19-ல் ஜெர்மனி ஹங்கேரியை கைப்பற்றிய உடனேயே, ஹங்கேரிய நாஜி அரசு, யூதர்களின் வாழ்க்கை மற்றும் உடைமைகள் குறித்து 22 சட்டங்களையும், 267 கட்டளைகளையும் பிறப்பித்தது. மார்ச் மாதத்துக்குப் பிறகு நூற்றுக்கும் மேற்பட்ட முடிவுகள் எடுக்கப்பட்டன. இது, வாழ்வதற்குத் தேவையான அத்தியாவசிய வாய்ப்புகளைத் தடுத்ததுடன், மறைமுகமாக, மரண தண்டனைக்கும் யூதர்களை இட்டுச் சென்றது.

நட்சத்திரம் பொறிக்கப்பட்ட வீடு.

மஞ்சள் விண்மீன்

அமைச்சர் ஆன்டர் ஜாரோஸின் பரிந்துரைப்படி, ‘6 வயதுக்கு மேற்பட்ட யூதர்கள் தங்கள் மேலாடையின் இடதுபுறம் 6 முனைகள் உள்ள மஞ்சள் நிற நட்சத்திரம் தைத்திருக்க வேண்டும். அது, 10x10 அளவில் இருக்க வேண்டும்’ என 1944 ஏப்ரல் 05-ல் ஹங்கேரி அரசு ஆணையிட்டது. கிறிஸ்தவ மதத்திற்கு மாறியிருந்த யூதர்கள் எதிர்த்ததால், முன்பு யூத மதத்தைப் பின்பற்றிய, தற்போதைய கிறிஸ்தவ துறவிகளுக்கு விலக்களிக்கப்பட்டது. கிறிஸ்தவராக மதம் மாறிய யூதர்களின், கணவரோ மனைவியோ யூதர் அல்லாதவர் என்றால் அவர்களுக்கும் விலக்களிக்கப்பட்டது. இதனிடையே, அனைத்து யூதர்களும், தங்கள் வீட்டு வாசலில் எல்லோரும் பார்க்கும்படி, மஞ்சள் நிறத்தில் ‘தாவீதின் நட்சத்திரத்தை’ கண்டிப்பாக வைத்திருக்க வேண்டும் என 1944 ஜுன் 16-ல் அரசு ஆணையிட்டது.

நட்சத்திரம் பொறிக்கப்பட்டுள்ள வீடு மற்றும் மக்கள்.

இது, எளிதில் யூதர்களை அடையாளம் காணவும், அவமானப்படுத்தவும், தனிமைப்படுத்தவும் அதிகாரிகளுக்கு உதவியது. தான் யூதர் என்பதை வெளிப்படையாக எல்லோருக்கும் தெரிவித்து, அதன் வழியாக பல்வேறு துன்பங்களை யூதர்கள் அனுபவித்தார்கள். கிறிஸ்தவர்களுக்கும் யூதர்களுக்கும் இடையே பிரிவினைகள் உருவாகின. யூதர்களிடம் பேசிய யூதர் அல்லாதவர்கள் தாக்கப்பட்டார்கள். அவர்கள் மீது காவல் நிலையத்தில் புகாரளிக்கப்பட்டது. சாலையில் பார்த்தால்கூட பேச விருப்பமின்றியும், பயந்தும் யூதர்களை பலர் ஒதுக்கினார்கள். மஞ்சள் நட்சத்திரத்தை அணிய மறுத்த யூதர்களுக்கு அபராதம் விதிக்கப்பட்டது. சிலர் நாடு கடத்தப்பட்டார்கள்; கொலையுண்டார்கள்.

மஞ்சள் நட்சத்திரம் அணிந்த தம்பதியர்.

அக்டோபர் 16, 1944-ல், ஹங்கேரிய அதிதீவிர பாசிச கட்சியான ஆரோ கிராஸ் கட்சி ஆட்சிக்கு வந்தது. அன்றிலிருந்து இரண்டு முக்கியமான நடவடிக்கைகளை இக்கட்சி பின்பற்றியது. (1) யூத சொத்துக்களை அபகரிப்பது, (2) யூதர்களை தனி முகாம்களில் அடைப்பது. அந்த முகாமுக்கு கெட்டோ (Ghetto) என்று பெயர். தொடக்கத்தில், கெட்டோ என்றால் யூதர்களின் டவுன் என்றிருந்தது. இரண்டாம் உலகப் போர் காலத்தில், கொல்வதற்கு வசதியாக யூதர்கள் அனைவரையும் ஓரிடத்தில் அடைத்த இடம் கெட்டோ எனப்பட்டது.

யூத சொத்துக்களை அபகரித்தல்

ஆரோ கிராஸ் கட்சி அதிகாரத்துக்கு வந்ததும், யூத கூட்டமைப்பின் தலைவர்கள் அஞ்சி தலைமறைவானார்கள். முன்னாள் ராணுவத் தலைவர் லாகோஸ் ஸ்டாக்லர் அக்டோபர் 16, 1944-ல் (அதிகாரபூர்வமாக 28 அக்டோபர்) யூத கூட்டமைப்பின் தலைவரானார். அதுமுதல், அக்டோபர் 21 வரை, யூதர்கள் தொடர்பான ஆரோ கிராஸ் கட்சியின் முதல் ஆணை, ஊரடங்கு சட்டம் நடைமுறையில் இருந்தது.

போர் நேர படங்களும், மக்கள் எழுதிய கடிதங்களும்.

பிறகு, நவம்பர் 03, 1944-ல், யூதர்களின் அனைத்து உடைமைகளையும் நாட்டுடைமையாக்கும் ஆணை பிறப்பிக்கப்பட்டது. அதன்படி, ‘யூதர்கள் விட்டுச் சென்ற சொத்துகள், அல்லது யூதர்கள் யாரும் பயன்படுத்தாத சொத்துக்கள் மற்றும், பிளாட்டினம், தங்கம், வெள்ளி, விலைமதிப்பு மிக்க கற்கள் அனைத்தும் அரசாங்கத்தால் பறிமுதல் செய்யப்படும்’ என அறிவிக்கப்பட்டது. தோட்டங்கள், நிறுவனங்கள், வங்கி புத்தகங்கள் கைப்பற்றப்பட்டன. சென்டிமென்ட் பொருட்கள், பாடப் புத்தகங்கள், திருமண மோதிரங்கள், இரண்டு வாரங்களுக்கு தேவையான உணவுப் பொருட்கள், விறகு, விளக்கு, ஒவ்வொரு வீட்டுக்கும் 300 பெங்கோ (1927-1946 வரையிலான ஹங்கேரி பணம்), வீட்டில் உள்ள ஒவ்வொருவருக்கும் கூடுதலாக 100 பெங்கோ வைத்துக்கொள்ள, மற்றும் கடிதம் எழுத யூதர்கள் அனுமதிக்கப்பட்டார்கள்.

தனி முகாம்கள்

நட்சத்திரம் அணிந்து கிராமங்களில் வாழ்ந்த யூதர்கள் முகாம்களுக்குச் செல்லும்படி ஏப்ரல் 16-க்குப் பிறகு கட்டாயப்படுத்தப்பட்டனர். நகரத்துக்கு வெளியே தொழுவம் அல்லது செங்கற் சூளைகளில் அடைக்கப்பட்டனர். தண்ணீர் இல்லை, உணவு, பாதுகாப்பு, மருந்து மற்றும் மனிதாபிமானம் இல்லாது கொடுமைப்படுத்தப்பட்டனர். இனப்படுகொலைக்கான தொடர்வண்டி புறப்பட்ட பிறகு, நாடு முழுவதும் இருந்த கொட்டடிகளுக்குள் இருந்தவர்கள் மனநிலையும், உடல்நிலையும் பாதிக்கப்பட்டிருந்தார்கள்.

புடாபெஸ்ட் கெட்டோ

கிராமத்தில் இருந்த யூதர்கள் கடத்தப்பட்ட பிறகு, ஹங்கேரி அரசு, தலைநகர் புடாபெஸ்ட்டில் இருந்த யூதர்களையும் அவர்களின் வீடுகளை காலி செய்யச் சொன்னது. அனைவரையும் வதை முகாமில் அழித்தொழிப்பதே அவர்களின் தந்திரம். ஹங்கேரியன் இனப்படுகொலையின் கடைசி காட்சி நவம்பர் 1994-ல் தொடங்கியது. நடுநிலை வகித்த நாடுகள், (ஸ்வீடன் சுவிஸ், ஸ்பெயின், சால்வதோர் போர்ச்சுகல், வத்திகான் மற்றும் பன்னாட்டு செஞ்சிலுவைச் சங்கம்) மக்களை ‘பாதுகாப்பான பகுதி’ எனச் சொல்லப்பட்ட பகுதிக்குள் செல்லுமாறு கோரிக்கை வைத்தன. தனுபே (Danube) ஆற்றுக்கு அருகிலிருந்த இப்பகுதியில் குவிந்த மக்கள் தினந்தோறும் கொள்ளையடிக்கப்பட்டார்கள். தனுபே ஆற்றில் சுட்டு வீழ்ந்தப்பட்டவர்களில் பெரும்பாலானோர் அங்கே தங்கியிருந்தவர்கள்தான்.

புடாபெஸ்ட்டில் எலிசபெத் நகரத்தில் (Erzsebetvaros) அமைந்திருந்த முகாமில் ஜனவரி மாதத்தின் மத்தியில் 70 ஆயிரம் பேருக்கு மேல் இருந்தனர். அதில் 8.5 விழுக்காடு குழந்தைகள். வீடுகளின் ஒவ்வோர் அறையிலும் 8-9 பேர் இருந்தார்கள். உள்ளே வரும்போது கொண்டுவர அனுமதி இல்லாததால், இவர்களெல்லாம் போதுமான உணவு, மருந்து, தண்ணீர் உள்ளிட்ட அத்தியாவசிய பொருட்கள் கிடைக்காமல் துயருற்றார்கள்.

1945 ஜனவரி 18 சோவியத் படைகள் ஹங்கேரியைக் கைப்பற்றியவுடன் கெட்டோ திறக்கப்பட்டது. அங்கே, 3 ஆயிரத்துக்கும் அதிகமான பிணங்கள் சாலைகளிலும், கடைகள் மற்றும் முற்றங்களிலும் கிடந்தன. இறந்தவர்களில், புடாபெஸ்ட் நகர யூதர்கள் மட்டும் 1 லட்சம் பேர். கிராமப்புற யூதர்கள் 90 சதவீதம் அடியோடு அழிக்கப்பட்டிருந்தனர்.

முளைத்தெழும் கனவு

போர் முடிந்தபிறகு, கொடூர நினைவுகளுடன் வாழ மறுத்து, 15-17 ஆயிரம் பேர் பாலஸ்தீனம் சென்றனர். சிலர் அமெரிக்கா சென்றனர். இதே காலத்தில் ஷயனிஸ்ட் (Zionist) இயக்கம் முக்கியத்துவம் பெறத் தொடங்கியது. இதன் இளைஞர்கள், 1945, டிசம்பர் மாதத்திற்குள் புடாபெஸ்ட்டில் 34 கிராமங்களில் 10 ஆதரவற்றோர் இல்லங்களைத் தொடங்கினார்கள். இங்கு ஏறக்குறைய 3 ஆயிரம் ஆதரவற்ற குழந்தைகள் தங்கினார்கள். கணவரை இழந்த பெண்களும் சுய தொழில் செய்யத் தொடங்கினர்.

அருங்காட்சியகத்தில் உள்ள, வழிபாட்டு பொருட்கள்.

அழிவிலிருந்து உயிர் பிழைத்திருந்த யூத அதிகாரிகள், 20 பிப்ரவரி 1945-ல் கூடி அடுத்து செய்யவேண்டியது குறித்து கலந்துரை யாடினார்கள். (1) உணவளிப்பது, (2) சமய வழிபாட்டை மீண்டும் நடத்துவது, (3) கல்விக்கூடங்களை மறுபடியும் திறப்பது என முடிவெடுத்தார்கள். மனம் இணைந்த முன்னெடுப்பில் தொடர்ந்து முன்னேறுகிறார்கள்.

(பாதை நீளும்)

யூதர்கள் பிணங்களாகக் கிடத்தப்பட்டிருக்கிறார்கள்.

பாக்ஸ்

இறுதிச் சடங்கு

கெட்டோவைத் திறந்தவுடன் இறந்தவர்களை அடக்கம் செய்வதுதான் யூதர்களுக்கு முக்கிய பிரச்சினையாக இருந்தது. “சாலைகள், வீடுகள் மற்றும் எல்லா பக்கங்களிலும் உடல்கள் கிடந்தன. அனைவரையும் புதைப்பது சவாலாக இருந்தது. போதுமான ஆட்கள் இல்லை. கல்லறைகளுக்கு உடல்களை கொண்டு செல்ல போதுமான வாகனங்கள் இல்லை. சில முற்றங்களிலும், சதுக்கங்களிலும் சிலரைப் புதைத்தோம்” என, 10 மார்ச் 1946, தேதியிட்டு ஆர்த்தோடாக்ஸ் யூத குழுவினர் எழுதியுள்ளனர். தொழுகைக்கூட வளாகத்தில் மொத்தமாக 24 பெரிய குழிகளில் புதைக்கப்பட்டவர்களைத் தவிர, 1945 ஜனவரி-பிப்ரவரியில் நிறைய உடல்கள் சடங்குகள் ஏதுமின்றி தற்காலிகமாக வேற்றிடங்களில் புதைக்கப்பட்டன. அவைகளைத் தோண்டி எடுத்து முறையான சடங்குகள் செய்து மறுபடியும் அடக்கம் செய்தார்கள். புடாபெஸ்ட் யூத கல்லறையில்தான் பொதுவாக அடக்கம் செய்யப்பட்டார்கள். கிராமங்களில் பெரிய குழிகளில் புதைக்கப்பட்டிருந்த பிணங்களையும் இங்கே கொண்டுவந்து புதைத்தார்கள்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE