இன்னும் எத்தனை காலத்துக்கு தமிழக மீனவர்களை கண்ணீர்விட வைக்கப் போகிறோம்?

By கே.கே.மகேஷ்

தமிழக மீனவர் பிரச்சினையின் மையம் ராமேஸ்வரம் தீவு. இங்கிருந்து மீன்பிடிக்கச் செல்லும் தமிழக மீனவர்கள் இலங்கை கடற்படையால் சிறைபிடிக்கப்படுவது என்பது, வலையில் மீன் சிக்குவதைப் போல வழக்கமான ஒன்றாகிவிட்டது.

"சின்ன கடற்பரப்பு, அதிக படகுகள். அதுவும் அதிகத் திறன்கொண்ட படகுகள். இது பிரச்சினை என்று சொன்ன நிபுணர்கள் அதற்குத் தீர்வாக மீனவர்களை ஆழ்கடல் மீன்பிடிப்புக்குப் பழக்கப்படுத்த வேண்டும்" என்றார்கள். ஆனால், அப்படி ஆழ்கடல் மீன்பிடிப்புக்காகச் செல்பவர்களும் நிம்மதியாக இல்லை. இந்த வாரம், குமரி மாவட்ட மீனவர்கள் 33 பேர் இந்தோனேசியா, செஷல்ஸ் போன்ற நாடுகளில் சிறைபிடிக்கப் பட்டிருக்கிறார்கள். ஒரு நாடு ஆப்ரிக்கா பக்கம் இருக்கிறது. இன்னொரு நாடு ஆஸ்திரேலியா பக்கம் இருக்கிறது.

நம்முடைய மீனவர்கள் நடுக்கடலில்தான் மீன்பிடித்துக் கொண்டிருந்தார்கள். அந்நாட்டுக் கடற்படைகள்தான் வம்படியாக பிடித்துக்கொண்டு போய்விட்டார்கள் என்ற வழக்கமான தொனியில் இந்தக் கட்டுரையை எழுதினால் அது நம்மை நாமே ஏமாற்றிக்கொள்வதற்குச் சமம்.

என்.ஜே.போஸ்

"உண்மையை உடைத்துப் பேசுங்கள்" என்ற வேண்டுகோளுடன் தமிழ்நாடு விசைப்படகு மீனவர்கள் நலச் சங்க மாநில பொதுச்செயலாளர் என்.ஜே.போஸுடன் உரையாடினோம்.

"ராமேஸ்வரம் துறைமுகத்தில் பதிவுசெய்யப்பட்ட விசைப்படகுகளின் எண்ணிக்கை வெறும் 634 தான். ஆனால், 1,000 விசைப்படகுகளுக்கு மேல் கடலுக்குச் செல்கின்றன. பாம்பன், மண்டபம் பகுதியையும் சேர்த்தால் 2,500 படகுகளுக்கு மேல் வரும். அதில் சிலர் 50 லட்சத்துக்கும் மேல் மதிப்புள்ள அதிநவீன படகுகளை எல்லாம் கொண்டுவந்து தொழில் செய்கிறார்கள். இந்தப் படகுகளில் பெரும்பாலானவை இலங்கை கடல் பிராந்தியத்தில் தான் மீன்பிடிக்கின்றன. இவர்களில் பலரும் கடல் வளத்தை அடியோடு சுரண்டுகிற தடைசெய்யப்பட்ட வலைகளைப் போட்டு இழுக்கிறார்கள். இந்திய கடல் வளத்தை ஒட்டுமொத்தமாக அழித்துவிட்டு, இப்போது எங்கள் கடல் வளத்தையும் அழிக்க வருகிறீர்களா என்று இலங்கை மீனவர்கள் எதிர்ப்புத் தெரிவித்துப் பார்த்தார்கள். நம்மாட்கள் விடுவதாக இல்லை. இலங்கை மீனவர்கள் சாதாரண படகுகளைப் பயன்படுத்தி கூண்டு முறையில் மீன்பிடிப்பவர்கள். தங்கள் வாழ்வாதாரத்தைப் பாதுகாக்க இலங்கை அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று போராட்டம் நடத்தினார்கள். அதனால்தான் இலங்கை அரசு இத்தகைய நடவடிக்கையில் ஈடுபடுகிறது.

இந்தப் பிரச்சினையில் நம்முடைய மீன்வளத்துறையே நடவடிக்கை எடுக்க முடியும். அப்படி நடவடிக்கை எடுத்தால், இங்கே போராட்டம் நடக்கும், ஓட்டு போய்விடும் என்று அரசியல்வாதிகள் தயங்குகிறார்கள். கடைசியில் பாரம்பரிய மீனவன் பாதிக்கப்படுகிறான். மீனவர்களைக் கூலியாகப் பயன்படுத்தி தொழில்செய்யும் வணிக மீனவர்கள் வாழ்கிறார்கள்" என்று வேதனைப்பட்டார் போஸ்.

பாம்பன் முன்னாள் ஊராட்சித் தலைவர் பேட்ரிக்கிடம் கேட்டபோது, " முன்பெல்லாம் கடலுக்கேது எல்லை என்ற மனநிலையில்தான் மீனவர்கள் இருந்தார்கள். விடுதலைப் புலிகள் பிரச்சினை காரணமாக, தமிழக மீனவர்களை சந்தேகத்தின் பேரில் விரட்டவும், சுடவும் ஆரம்பித்தார்கள் இலங்கை கடற்படையினர். இப்படி 1983-ல் தொடங்கி 2018 வரையில் சுமார் 400 மீனவர்களுக்கு மேல் சுட்டுக்கொல்லப் பட்டிருக்கிறார்கள். பலர் படகு முழுக்க ரத்தத்துடன், குற்றுயிரும் குலையுயிறுமாக கொண்டுவரப்பட்டு, ராமேஸ்வரம் மருத்துவமனையில் சேர்க்கப்படுவார்கள். அவர்கள் ஒரு கட்டு மட்டும் போட்டு ராமநாதபுரம் அரசு மருத்துவமனைக்கு அனுப்புவார்கள். அங்குள்ள டாக்டர்கள் கட்டைப் பிரித்துப் பார்த்துவிட்டு, மதுரைக்கு கொண்டு போகச் சொல்வார்கள். போகிற வழியிலேயே அந்த மீனவர் செத்துப்போவார்.

இப்போது புலிகள் பயம் போய்விட்டதாலோ என்னவோ, தமிழக மீனவர்களைச் சுட்டுக்கொல்வதில்லை. மற்றபடி கல்லெறி, சவுக்கடி எல்லாம் கிடைக்கிறது. ஒரு காலத்தில் சகோதரர்களாக இருந்த ஈழத்தமிழர்களையும், ராமேஸ்வரம் தமிழர்களையும் மோதவிட்டு வேடிக்கை பார்க்கின்றன மத்திய அரசும், இலங்கை அரசும். நம்முடைய மீனவர்களிடமும் ஒழுக்கமான தொழில் முறை இல்லை. இதுவும் அவர்களுக்கு வசதியாகப் போய்விட்டது" என்றார்.

கச்சத் தீவை மீட்டால் எல்லாம் சரியாகிவிடும் என்கிறார்களே என்று மீனவர்களிடம் கேட்டால் சிரிக்கிறார்கள். "கச்சத்தீவு நமக்குரியது என்பதில் மாற்றுக் கருத்து இல்லை. ஆனால், இலங்கையிடம் இருப்பதால்தான், நாங்கள் எங்களுடைய பாரம்பரிய கடல் எல்லையில் மீன்பிடிக்கிறோம் என்று சொல்லியாவது எல்லை தாண்ட முடிகிறது. அதை மீட்டுவிட்டால், தெளிவான எல்லைக்கோட்டைப் போட்டு, அதைத் தாண்டவே கூடாது என்பார்கள். அந்தத் துயரத்துக்கு இந்தத் துயரமே மேல்" என்கிறார்கள் மீனவர்கள்.

ஜோ டி குரூஸ்

தமிழக மீனவர்களை ஆழ்கடல் மீன்பிடிப்புக்குப் பழக்கப்படுத்த வேண்டும் என்ற கோரிக்கையை 10 ஆண்டுகளுக்கு முன்புவரை வலியுறுத்தியவர்களில் ஒருவர் எழுத்தாளர் ஜோ டி குரூஸ். இன்று நம்முடைய மீனவர்கள் இந்தோனேசியாவிலும், செஷல்ஸ் தீவிலும் சிறைபிடிக்கப்பட்டிருக்கிறார்கள். படகு முதலாளிகளின் அதீத முதலீடு, அந்தக் கடனை அடைப்பதற்கும், அதற்கேற்ற லாபத்தைப் பெறவும் மீனவர்களை எல்லை தாண்ட வைப்பது பற்றியும், அது அண்டை நாடுகளுடனான பிரச்சினைக்கும், உள்ளூர் மீனவர்களின் உயிருக்கும் ஆபத்து விளைவிப்பது பற்றியும் அவரிடம் பேசினோம்.

"அடிப்படையில் இந்தியா ஒரு தீபகற்ப நாடு. மூன்று பக்கம் கடல், ஒரு பக்கம் நிலப்பரப்பு கொண்டதுதான் நம்முடைய நாடு என்கிற புரிதல் முதலில் ஆட்சியாளர்களுக்கும், அதிகாரிகளுக்கும் வேண்டும். இங்கே கடல் வளம் என்பது கப்பல் போக்குவரத்துக்கு மட்டுமல்ல, மீன்வளமும் சேர்ந்ததுதான் என்பது அடுத்த புரிதல். ஆனால், நம்முடைய அரசு நம்முடைய கடல் வளத்தையும் பயன்படுத்திக் கொள்வதில்லை, திரைகடல் ஓடி திரவியம் தேடுகிற நம்முடைய மீனவர்களையும் கண்டுகொள்வதில்லை. சீனா இன்று அமெரிக்காவுக்கே சவால்விடும் அளவுக்கு வளர்ந்திருக்கிறது என்றால் தன்னுடைய இயற்கை வளத்தையும், மனித வளத்தையும் அது சரியாகப் பயன்படுத்திக் கொண்டதுதான் காரணம். சீனாவின் துயரம் என்று நாம் எல்லாம் வரலாற்றுப் பாடத்தில் படித்த மஞ்சளாற்றை, சீனாவையே ஊடறுத்துச் செல்லும் அந்த பிரம்மாண்ட ஆற்றை சரக்குப் போக்குவரத்துக்கான நீர்வழிச்சாலையாக மாற்றினார்கள். நம் நாட்டிலும்தான் பெரிய ஆறுகள் இருக்கின்றன. கடலில் போகிற கப்பலை அப்படியே ஆற்றுக்குள் செலுத்தி சரக்குகளை ஏற்றி வருகிற வசதி இங்கு எங்கே இருக்கிறது?

நமது கடல் பரப்பு பூமத்திய ரேகைக்கு அருகில், வெப்ப மண்டலத்தில் இருக்கிறது. சீனாவில் கிழக்குப் பகுதியில் மட்டும்தான் கடல் இருக்கிறது. அதுவும் குளிர்ப் பிரதேசத்தில் இருக்கிறது. அந்த ஒரே ஒரு கடற்கரையை, அதுவும் ஆண்டில் பாதி நாட்கள் உறைந்துபோய்விடுகிற கடலை வைத்துக்கொண்டு ஷாங்காய் உள்பட உலகத்தரம் வாய்ந்த 7 துறைமுகங்களை நடத்துகிறார்கள். நம்மூரில் ஒரு பழமொழி சொல்வார்கள். சுண்டைக்காய் கால்பணம், சுமைகூலி முக்கால்பணம் என்று. இங்கே சரக்குப் போக்குவரத்துக்கும், சாலைப் போக்குவரத்துக்கும் பெட்ரோல், டீசல் என்று அந்நியச் செலவாணியை முழுவதும் செலவழித்துக்கொண்டிருக்கிறோம். நீண்டு விரிந்த மேற்கு கடற்கரை, நீண்டு விரிந்த கிழக்குக் கடற்கரையில் எவ்வளவு பெரிய வணிகம் நடந்திருக்க வேண்டும்?

போர்ச்சுக்கீசியர்கள், டச்சுக்காரர்கள் தொடங்கி கடைசியாக வந்த வெள்ளைக்காரர்கள் வரையில் நம்முடைய வளத்தைச் சூறையாடுவதற்கு எவ்வளவு அழகாக இந்த கடற்கரையைப் பயன்படுத்தினார்கள். நீங்கள் பயன்படுத்தினீர்களா? ஏற்கெனவே இருந்த பல துறைமுகங்களை மூடத்தானே செய்திருக்கிறீர்கள்? சீனாவின் வளம், தட்பவெப்ப சூழ்நிலையுடன் ஒப்பிட்டால் அதைப்போல பல நூறு மடங்கு நாம் முன்னேறியிருக்க வேண்டும். கடற்கரையில் கற்களைக்கொட்டி கடற்கரையே இல்லாமல் ஆக்கி, பாரம்பரியமாக மீன்பிடித் தொழில் செய்தவர்களை வெளிநாட்டிற்கு கூலித்தொழிலாளியாக அனுப்பியதுதான் நம் ஆட்சியாளர்களின் சாதனை. அவர்கள் ஒவ்வொருவரும் தேர்ந்த கடலோடிகள். இவர்களின் திறமையை நாம் இழந்தோம்.

அவர்களோ வெளிநாட்டிற்குப் போய் அந்தத் தொழிலை நன்றாகச் செய்துகொடுக்கிறார்கள். அவர்கள் கூலியாக அனுப்பிவைக்கும் அந்நியச் செலாவணி பெரிதா, நம் நாட்டில் இருந்தபடியே அவர்கள் ஈட்டித் தருகிற அந்நியச் செலாவணி பெரிதா என்று சிந்திக்க வேண்டாமா? நம்நாட்டில் இருந்து ஒரு மீனவனை வேலைக்கு எடுத்து, பிற நாட்டால் லாபம் சம்பாதிக்க முடிகிறது என்றால், இவ்வளவு பெரிய கடலையும், கடல் வளத்தையும் கொண்ட நாட்டில் அது முடியாதா? அதற்கேற்ற கட்டமைப்பையும், தொழில்நுட்ப உதவியையும் மீனவர்களுக்குச் செய்துதர வேண்டிய கடமை நமது அரசாங்கத்துக்கு இல்லையா?

மீன்பிடிப்பு என்பதே ஒரு வேட்டைத் தொழில்தான். மீனை விரட்டிச் செல்கிறபோது எல்லை தாண்டுவது இயல்பானது. அவர்களை மீட்பதற்கான ஏற்பாடுகளை அரசு செய்ய வேண்டும். அதைவிட்டுவிட்டு மீனவர்கள் என்றாலே பிரச்சினைக்குரியவர்கள் என்று பார்ப்பது, காலனிய மனோபாவமின்றி வேறென்ன? நமது தேச பக்தர்களுக்கு ஒன்றைச் சொல்லிக் கொள்கிறேன். இந்தியாவை நிலப்பரப்பில் வேண்டுமானால் நமது ராணுவம் பாதுகாக்கலாம். ஆனால், கடல்பரப்பில் அந்நியர்கள் ஊடுருவாமல் பார்த்துக்கொள்வது நம்முடைய மீனவர்கள்தான். அவர்கள் கடல் தொழிலில் இருந்து விலகினால், ராணுவத்துக்கு இன்னும் 10 மடங்கு செலவழிக்க வேண்டியதிருக்கும் என்பதையும் சுட்டிக்காட்ட விரும்புகிறேன்" என்றார் ஜோ டி குரூஸ்.

ஒவ்வொரு முறையும் மீனவர்கள் சிறைபிடிக்கப்படும்போது இதுபற்றி விரிவாகப் பேசப்படுவதும், பிறகு அதை அப்படியே மறந்துவிடுவதும் தொடர்கதையாகி வருகிறது. இன்னும் அப்படித்தான் இருக்கப் போகிறோமா என்பதை ஆள்பவர்கள் தான் சொல்ல வேண்டும்!

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE